பொண்டுகள்சேனை நீரோடையை புனித கங்கையாகப் பிரகடனப்படுத்தியமையை வன்மையாகக் கண்டிக்கிறேன்

 - வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்- 
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-வாழைச்சேனை-
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பொண்டுகள்சேனை நீரோடையை புனித கங்கையாகப் பிரகடனப்படுத்தியுள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாக சிறி லங்கா ,முஸ்லிம் காங்கிரஸின் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பொண்டுகள்சேனை நீரோடையை புனித கங்கையாகப் பிரகடனப்படுத்தியுள்ளமை தொடர்பில் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசும் பொருளாக மாறி பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளதுடன், இன ரீதியான விரிசலுக்கும் வித்திடலாம் என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதே சபைக்குட்பட்ட எல்லைக்குள் அமைந்துள்ள இவ்வாற்றினை புனித பூமியாகப் பிரகடனஞ்செய்துள்ளமை தொடர்பிலான பதாகையை தவிசாளர் தலைமையில் அப்பிரதேசத்தில் நாட்டியுள்ளனர். இது தொடர்பிலான செய்தியும் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அதே நேரம், நீர்ப்பாசனம், வேளாண்மைச்செய்கை, பொழுதுபோக்கு போன்றவற்றுக்காக தமிழ், முஸ்லிம்கள் பயன்படுத்தும் இப்பிரதேசத்தை சபை அமர்வுகளில் பிரேரணையோ தீர்மானமோ மேற்கொள்ளப்படாமல் தனிச்சையாக முடிவுகளை மேற்கொண்டு புனித பூமியாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விடயத்தை இப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இரு சமூகம் சார்பான விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது, ஆட்சியில் பங்காளர்களாகவுள்ள எம்மிடமும் கலந்துரையாடல்களை சபையின் தவிசாளர் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இந்த விடயம் சர்ச்சையாக மாறி, ஒற்றுமையுடன் இருக்கும் இரு சமூகங்களுக்கு மத்தியில் கசப்புணவுர்களை ஏற்படுத்த வாய்ப்பளிக்காது, உடனடியாக இத்தடையுத்தரவை நீக்க வேண்டுமென அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சபையில் உத்தியோபூர்வமாக கலந்துரையாடல் மேற்கொண்டு மக்களுக்கு சாதகமான முறையில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வாழைச்சேனை பிரதேச சபை முன்வர வேண்டுமென்பதை வலியுறுத்தி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.பி.எம்.வாஸ்தீன், ஏ.எல்.கபூர் ஆகியோரும் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -