மறைந்த தமிழ் - மு கருணாநிதி
=====================
தமிழ் மணம் நுகர்ந்தவர் சிலர்
தமிழால் மணத்தவர் பலர்
தமிழ் வளர்த்தவர் சிலர்
தமிழால் வளர்ந்தவர் பலர்.
தமிழ் சுவைத்தவர் சிலர்
தமிழை சிதைத்தவர் பலர்
தமிழை வாழவைத்தவர் சிலர்
தமிழால் வாழ்ந்தவர் பலர்
பலருக்கு தமிழ் ஓர் மொழி
சிலருக்கு தமிழ் ஓர் வழி
பலருக்கு தமிழ் ஓர் ஒளி
சிலருக்கு தமிழ் அவர் விழி
தமிழைத் தாயென்பர் பலர்
தாயே தமிழென்பர் சிலர்
தாயே உயிரென்பர் பலர்
தமிழ்த்தாயே உயிர்மூச்சென்பர் சிலர்
தமிழ் பிரசவித்த தமிழன்
தமிழில் வளர்ந்த தமிழன்
தமிழ் வளர்த்த தமிழன்
தமிழால் வாழ்ந்த தமிழன்
தமிழ் செதுக்கிய தமிழன்
தமிழை செதுக்கிய தமிழன்
தமிழால் பார் அறிந்த தமிழன்
தமிழை பார் அறியவைத்த தமிழன்
அந்நியமொழி மோகத்தில் தொலைத்துவிட்ட தமிழை
நாகரீக மாயையில் நசுக்கப்பட்ட தமிழை
மீட்டெடுத்த தமிழன்
செம்மொழியாய் செப்பனிட்ட தமிழன்
மறைந்தது தமிழா? அல்லது
அந்தத் தமிழ் ஈன்ற தமிழா?
தாய்த்தமிழை நேசித்தவன்
அத்தமிழ் ஈன்ற தமிழையும் நேசித்தான்
தமிழ் மறைந்தது. ஆனாலும்
அத்தமிழ் வளர்த்த தமிழ் மறையவில்லை.
தமிழ் மறைந்தது. ஆனாலும்
அத்தமிழ் செதுக்கிய செம்மொழி மறையவில்லை.
தமிழா நீ நேசிப்பது தமிழா?
தமிழை நேசித்தால்
அத்தமிழ் நேசித்த தமிழை நேசி!
தமிழை சுவாசி!
தமிழ் மறைந்தது. ஆனாலும்
தமிழ் மறையவில்லை.
இன்னும் தமிழ் பிறக்கும், மறையும். ஆனால்
தமிழ் மறையக்கூடாது.
தமிழா!
இத் தமிழ் செதுக்கிய செழ்மொழியாம்
நம் தீந்தமிழ் காக்கப் புறப்படு
அதை இத் தமிழுக்கு காணிக்கையாக்கிடு
வை எல் எஸ் ஹமீட்