பலரும் பலவிதமான சாதனைகள் செய்கிறார்கள். அவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். அதிலும் உலக நடப்புகளில் சாதனைகள் புரிவது தான் அதிகமதிகம். பெற்றோர்களும் கூட தமது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கிவிட வேண்டும். அதில் உச்சத்தைத் தொட்டுவிட வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அதற்காகவே அத்தனை முயற்சிகளையும் சளைக்காமல் செய்கிறார்கள்.
ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி சாய்ந்தமருதின் ஒரு பெரியவர் மகத்தான காரியம் செய்துள்ளார். அவர் வேறு யாருமல்ல. றிஷான்ஸ் கடையைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் உரிமையாளரான அல்ஹாஜ் ஆதம்பாவா இப்றாலெப்பை (றிஷான்ஸ் ஹாஜியார்) அவர்கள் தனது பிள்ளைகளை மார்க்கக் கல்வியின்பால் ஈடுபடுத்தியது மாத்திரமல்லாமல் அதில் உச்சம் தொடவும் விட்டிருக்கிறார்.
ஏற்கெனவே இவரின் பிள்ளைகளில் ஒருவரான அல்ஹாபிஸ் அல்ஆலிம் இப்றாலெப்பை முகம்மது றப்fபி தனது அழகிய கம்பீரமான குரலில் மார்க்க உபந்நியாசங்களை நிகழ்த்தி பலரினதும் அபிமானத்தைப் பெற்றுவருகின்றார்.
இப்பொழுது அவரின் சகோதரரான அல்ஹாபிஸ் அல்ஆலிம் இப்றாலெப்பை முகம்மது றாசித் அவர்கள் மார்க்கக் கல்வியில் ஒரு சாதனை படைத்திருக்கிறார். சாய்ந்தமருதில் இருந்து வெளியான உலமாக்களில் முதற்தடவையாக முப்தி பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். அதிலும்
குறிப்பாக தனது இளம் வயதில் ( 24 வது வயதில் ) சாய்ந்தமருதின் சரித்திரத்தில் தனது பெயரை பொன்னெழுத்துக்களால் பொறித்துள்ளார்.
இந்த நிலையை அடைவதற்கு முன்னர், அவர் தனது 11 வது வயதில் மாவடிப்பள்ளி மத்ரஸாவில் இணைந்து ஏறக்குறைய 21 மாதங்களிற்குள் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து 3 வருடங்களில் ஹாபிஸானார். அதன் பிறகு 7 வருடங்கள் அங்கேயே மார்க்கக் கல்வியைக் கற்று மெலவியானார்.
பின்னர், தவ்றத்துல் ஹதீஸ் என்ற கலையில் ஒரு வருடம் கற்று அதனைத் தொடர்ந்து இரண்டு வருடங்கள் பாணந்துறை தீனியா மத்ரஸாவில் பிக்ஹ் அதாவது மார்க்க சட்டவிடயங்களில் மேலும் கற்று கடந்த வருடம் “முப்தி“ பட்டம் பெற்றுள்ளார். முப்தியானவுடன் மார்க்கப் பணிக்காக ஒரு வருடம் இலங்கையின் பல பாகங்களுக்கும் மற்றும் இந்தியாவுக்கும் சென்றுவிட்டு, சில தினங்களுக்கு முன்னரே தனது சொந்த மண்ணான சாய்ந்தமருதுக்கு வந்துள்ளார்.
அந்த வகையில் சாய்ந்தமருதின் முதலாவது முப்தியான அல்ஹாபிஸ் அல்ஆலிம் இப்றாலெப்பை முகம்மது றாசித் அவர்களைப் பாராட்டுவதோடு, அவரை ஈன்றெடுத்து பாக்கியம் பெற்ற பெற்றோரையும் இவ்வூர் மக்கள் சார்பாக பாராட்டுவோம்.
மார்க்க விடயங்களில் இன்னுமின்னும் கற்று எமது மக்களுக்காக பிரயோசனப்படுத்த வேண்டுமென எல்லாம் வல்ல அள்ளாஹ்வைப் பிரார்த்திப்போம்!
எதற்கெல்லாமோ விழாவெடுக்கும் நாம், உண்மையிலேயே விழா எடுக்கப்பட வேண்டியதை தூரமாக்கி வைத்திருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
வெறுமனே பொன்னாடை போர்த்துவதும், நினைவுச் சின்னம் வழங்குவதும், பரிசுப்பொருள் வழங்குவதும் தான் ஒருவரை கௌரவப்படுத்தும் என்பதல்ல. ஒருவரைப் பற்றி நல்லவிதமாக நான்குபேர் பேச வைப்பது தான் உண்மயான கௌரவப்படுத்தலாகும்.