உறவும் பாசமும்
++++++++++++
Mohamed Nizous
உம்மாக்களுக்கு அறவே பசிப்பதில்லை
ஊட்டில் ஓரளவே உணவிருந்தால்
வாப்பாக்கு வாட்ச் கட்ட விருப்பமில்லை.
வறுமை கதவைத் தட்டும் போது
காக்காக்கு கடும் வெயில் சுடுவதில்லை
கடைசித் தங்கை முடிக்கும் வரை
தம்பிக்கு களைப்பு வருவதில்லை
தமக்கைகளுக்காய் தான் ஓடும் போது
மனைவிக்கு புலால் நாறுவதில்லை
மாப்பிள்ளை மகிழ்வாக கொண்டு வந்தால்
கணவனுக்கு கோபம் வருவதில்லை
கட்டியவள் அன்பால் ஏசும் போது
சட்டென்று ராத்தா தாய் ஆவாள்
சடுதியாய் பெற்றவள் கண் மூட
தங்கை தங்கத்தை தானம் செய்வாள்
தன் ராத்தா மகள் 'மனுசி' ஆக
மகன்மார்க்கு பொறுப்பு வருவதில்லை
மாடியும் கோடியும் தந்தை தந்தால்
மகளுக்கு சமைக்கத் தெரிவதில்லை
இவள் பாவம் என்று உம்மா எல்லாம் செய்ய
மாமா உசாமாவாய் பயம் தருவார்
மருமக்கள் பிழை செய்து நிற்கும் போது
உறவு என்பது உயிர் நாடி- அதில்
உயர் நிலை எழுதினேன் உண்மை நாடி.