இச்சம்பவம் குறித்து சரியான தகவல்களை அறிந்திராத பலர் பத்திரிகைகளிலும், ஏனைய ஊடகங்களிலும் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே மீண்டும் இதனை வெளியிடுகின்றேன். இச்சம்பவத்தில் உயிரை இழந்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள், இதே போன்று இச்சம்பவத்தில் நிகழவிருந்த ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்படாது தடுத்து நிறுத்துவதில் அர்ப்பணிப்பான பங்களிப்பு வழங்கிய இளைஞர்கள், தியாகிகள், மற்றும் ஊக்கமளித்த சமூக முன்னோடிகளையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்கின்றேன். அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து ஈருலக வாழ்க்கையையும் சிறப்பாக்கி வைக்க வேண்டுமென பிராத்திக்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரில் இருந்து 12 கிலோ மீற்றர் தூரமான ஒரு நகரே ஏறாவூர் பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் 1990 காலப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகளால் முஸ்லிம்களுக்கெதிராக நடாத்தப்பட்ட கோரத்தனமாக தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஊர்களில் ஏறாவூரும் ஒன்று. இதில் மறக்கமுடியாதவை 11.08.1990ம் ஆண்டு நள்ளிரவு வேளையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சிறுபிள்ளைகள், கர்ப்பிணித்தாய்மார்கள், பெண்கள், வயோதிபர்கள் என்று பாராது விடுதலைப்புலிகளால் துப்பாக்கி, கத்தி மற்றும் கோடரிகள் கொண்டு 121 அப்பாவி முஸ்லிம்களை கோரத்தமான முறையில் வெட்டியும் குத்தியும், சுட்டும் தமிழீழ விடுதலைப்புலிகளால் கொலை செய்தது மறக்க முடியாத ஒன்றாகும்.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டக்களப்பு மாவட்ட பிரதேசத்தில் இருந்து பொலிஸ் நிலையங்கலெல்லாம் தாக்கப்பட்டு பொலிஸார் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் முஸ்லிம்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாக மாறியிருந்த வேளையில் அல்லாஹ்வின் உதவியால் தமிழர்களுக்கு முஸ்லிம்களும் முஸ்லிம்களுக்கு தமிழர்களும் உதவியாக இருந்த வேளையில்
ஜூன் மாதம் 03ஆம் திகதி இரவு (விடிந்தால் ஹஜ் பொருநாள்) கொண்டாட இருந்த வேளையில் ஏறாவூரின் மூத்த கல்விமான்களான ஜனாப் யூல். தாவூத் அவர்களும் காதிநிதிபதி அல்ஹாஜ் எம்.எல்.ஏ.கபூர் ஜே.பி (கபூர் ஹாஜியார்) அவர்களும் தனவந்தர் அல்ஹாஜ் அலிமுஹம்மது அவர்களும் அவரவர்களின் வீட்டிலிருந்த வேளை புலிகள் இயக்கத்தினால் அழைத்துச் செல்லப்பட்டிந்தனர்.
அவர்கள் இன்று வரை வீடு திருப்பவும் இல்லை. அவர்களின் ஜனாசாக்களும் கிடைக்கவில்லை. இதுதான் முதலாவது தாக்கம் இதன் பின்னர் ஒவ்வொறு இரவும் ஒவ்வொரு வருடம் கழிவது போன்ற உணர்வு. இரவு வந்து விட்டால் இனம் தெரியாத பயம் மக்களை வதைத்தது.
ஓவ்வொரு இரவுகளிலும் வெட்டுவது சுடுவது போன்ற செய்திகள் வந்து கொண்டே இருந்தன. 1990 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி காத்தான்குடியில் பள்ளிவாயல்களில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி பக்கத்து ஊரான ஏறாவூரையும் கதிகலங்கச் செய்தது.
இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அல்லாஹ்வை தவிர யாரும் இருக்கவில்லை. ஏறாவூர் பொலிஸ் நிலையம் அழித்தொழிக்கப்பட்டது. அப்போது கொம்மாதுரையில் மாத்திரம் ஒரு இராணுவ முகாம் இருந்தது. அவர்களும் உடனடி உதவி வழங்கும் நிலையில் காணப்படவில்லை. பயத்தின் உச்சநிலை காரணமாக ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஜூம்ஆ தொழுகை வெறும் 15 நிமிடம் மாத்திரமே நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை முன்னிருட்டுக் காலம் மின்சாரமும் தடைப்பட்டிருந்த நிலையில் புலிகள் முஸ்லிம்களை வெட்டிக் கொலை செய்ய வருகின்றார்கள் என்ற கதை மிகப்பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது.
இதையறிந்த முஸ்லிம் மக்கள் செய்வதறியாது திகைத்துப்போய் இருந்த நிலையில் ஆண்கள் இரவில் தூக்கமின்றி தங்களின் குடும்பங்களை பாதுகாத்துக்கொண்டிருந்த நிலையில் முஸ்லிம்களோடு ஒன்றோடு ஒன்று பின்னிப்பனைந்திருந்த தமிழ் சமூகம், புலிகள் ஏறாவூர் முஸ்லிம் பகுதிகளுக்குள் சென்று அம் மக்களை வெட்டிக் கொலை செய்யப்போகின்றார்கள் என்ற செய்தியை அறிந்ததும் முஸ்லிம்கள் எவருக்குமே அச்செய்தியினை சொல்லாமல் இருந்த இந்நிலையில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு வேளையில் வெடிச்சத்தங்கள் ஒவ்வொன்றாக கேட்;கத் தொடங்கின.
இது ஏறாவூர் ரயில் நிலையத்தையொட்டிய பகுதிகளிலும் சதாம் ஹூஸைன் கிராமப்பகுதிகளிலே முதலில் கேட்கத் தொடங்கின.
இக்கால கட்டத்தில் ஒருநடைமுறை வழக்கத்தில் இருந்தது. அபாயகரமான செயற்பாடுகள் நடைபெற்றால் உடனடியாக பள்ளிவாசல்களில் அதான் சொல்வதே இன் நடைமுறையாகும். வெடிச் சத்தம் கேட்கப்பட்ட பிரதேசத்தை அண்டிய பள்ளிவாயலாகிய ஜிப்ரி தைக்கா பள்ளிவாசலில் முதலில் அதான் சொல்லப்பட்டது.
அத்துடன் ஜிப்ரி தைக்காப் பள்ளிவாயல் பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூடுகள் வரத்தொhடங்கின. இதனால் ஊரின் மத்தியில் அமைந்துள்ள மஸ்ஜித் நூறுஸ் ஸலாம்; பள்ளிவாசலில் (காட்டுப்பள்ளிவாசல்) இருந்து அடுத்த அதான் சொல்லப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும சம்பவங்கள்; தொடர்பாக மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதனைக் கேள்வியுற்ற பெரும் தொகையான மக்கள் ஊரின் நடுப்பகுதிக்கு வரத்தொடங்கினர்.
இவ்வாறு தொடர்ந்த பயங்கரவாத செயற்பாடு தொடர்பான விபரங்கள் சுபஹ் வரை அறியப்படாமலேயே இருந்தது. சுப்ஹூக்குப்பின்னரே இப் பயங்கரவாத செயற்பாட்டில் கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன அதன் பிரகாரம் ஏறாவூர், மீராகேணி, சதாம் ஹூசைன், ஏறாவூர் 03 மற்றும் ஏறாவூர் 06 ஆகிய பிரதேசங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள், இளைஞர்கள் என சுமார் 121 பேர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு ஷஹீதாக்கப்பட்டிருந்தனர். இக்கொலைகள் ஊரின் பல பகுதிகளிலும் நடைபெற்றிருந்ததனால் இவ் ஜனாஸாக்களை ஒன்று சேர்ப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. (இத்துயரநாளில் காத்தான்குடியைச் சேர்ந்த பல சகோதரர்கள் காலை வேளையிலேயே இங்கு வந்து பல உதவிகள் புரிந்தமை மறக்க முடியாத விடயமாகும்.) இவ் ஜனாஸாக்களில் சிறு குழந்தைகள் என்றும் பாராமல் அவர்களை கண்டம் துண்டமாக வெட்டியிருப்பது தமிழீழ விடுதலைப் பாசிச புலிகளின் கோரத்தனத்தைக் காட்டுகின்றது.
இவர்கள் அனைவரினதும் ஜனாஷாக்கள் காட்டுப்பள்ளிவாசலில் தனியான இடமான 'சுஹதாக்கள் பூங்கா' எனும் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பினை பெறுவதற்காக ஓரு குழு இராணுவத்தினை நாடியது.
அதற்கிணங்க இராணுவத்தினர் வந்திருந்த அதேவேளை அரசியல்வாதிகளும் வந்திருந்தனர்.
ஏறாவூர் பிரதேசம் ஒரு முகாமாக மாற்றப்பட்டிருந்தது. ஆறு சதுர கிலோமீற்றர் பரப்பில் வாழ்ந்த மக்கள் சுமார் ஒரு சதுர கிலோமீற்றர் தூத்துக்குள் முடக்கப்பட்டார்கள்.
இன்நிலையில் ஊரைச்சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் சகல மக்களுமே அகதிகளாக மாற்றப்பட்டார்கள்.
ஊரைவிட்டு வெளியேறினால் பாதுகாப்புக் கிடைக்குமென நினைக்குமளவிற்கு அந்த நாட்கள் மாறியிருந்தது. இக்காலகட்டத்தில் ஊரை விட்டு வெளியூருக்கு செல்வதானால் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே (திங்கள், புதன், வெள்ளி) இராணுவ பாதுகாப்புடன் வாகனங்கள் போக்குவரத்து செய்யும். இந்நாட்களில் மாத்திரமே பயணங்களை மேற்கொள்ள முடியும். இதனால் நோயாளிகளின் மாத்திரமின்றி அனைவருமே சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து வந்தனர்.
அந்த நாட்கள் முஸ்லிம்களின் மனதை என்றும் ஒரு வடுவாக வைத்திருக்கும் மனநிலையை இன்றும் வைத்திருக்கின்றது. இந்த காலகட்டத்தில் தொழிலுக்கு சென்றவர்கள் ஒன்றும் இரண்டுமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் ஷஹிதாக்கப்பட்டதை நினைவு கூர்ந்து வருடாவருடம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி 'சுஹதாக்கள் தினம்' ஏறாவூரில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
வருடாவருடம் இத்தினத்தில் சகல கடைகளும் அடைக்கப்பட்டு பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் கத்தமுல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்படுவதோடு நினைவுச் சொற்பொழிவுகளும் நடாத்தப்பட்டு துஆப் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டு வருகின்றமை மூலம் இந்நாள் நினைவு கூறப்பட்டு வருகின்றது.
வடக்குக் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் நாலாபகுதிகளிலும் வாழுகின்ற முஸ்லிம் மக்கள் இப் படுகொலைச் சம்பவத்தினை மனதாபிமான அடிப்படையில் சிலவேளை மண்ணித்தாலும் அப்பாவி மக்களை இரவோடு இரவாக வெட்டியும் சுட்டும் கொலை செய்த இந்த சம்பவத்தினை ஒருபோதும் முஸ்லிம் மக்களால் அதனை ஒருபோதும் மறக்க முடியாது என்பதற்கு வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற இச் சுஹதாக்கல் தினம் ஒரு சான்றாகும்.
1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் இப்பிரதேச முஸ்லிம்கள் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பிலும் சேனைப்பயிர்ச் செய்கைகளிலும் ஈடுபட்டிருந்த ஏறாவூர் மக்கள் இப் படுகொலை சம்பவத்தினை தொடர்ந்து கோடிக்கணக்கில் பெருமதி வாய்ந்த சொத்துக்களையும் விலை மதிக்கமுடியாத உயிர்களையும் இழந்ததன் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கான விழிப்புத்தான் ஏறாவூரை கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டது இதன் ஞாபகார்த்தமாக ஏறாவூரில் சுஹதாக்கள் நினைவு தூபி ஒன்று நிறுவப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இழப்புக்கள் தாங்க முடியாதவை ஆனால் அல்லாஹ் ஒவ்வொன்றிலும் நலனையே வைத்துள்ளான். ஏன்பதற்கு ஷஹீதாக்கப்பட்ட சுஹதாக்கள் ஏறாவூர் மக்களின் கல்வி எழுர்ச்சிக்கு மாத்திரம் இன்றி தொழில் மாற்றத்திற்கும் வித்திட்டுள்ளார்கள் என்பதையே இது எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் எல்லாம் வல்ல அல்லாஹ் ஷஹீதாக்க்பபட்ட சுஹதாக்களை பொருந்திக்கொண்டு அவர்களது உறவினர்களின் இரு உலக வாழ்க்கைiயும் சிறப்படைய வேண்டுமென நாம் அனைவரும் பிராத்திப்போமாக!.
இதேவேளை இவ்வருடம் 28வது சுஹதாக்கள் தினத்தினை அனுஷ்டிக்கும் முகமாக ஏறாவூர் நூறுல் ஸலாம் (காட்டுப்பள்ளிவாசல்) சுஹதாக்கள் தின பிரதான வைபவம் ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிருவனங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன் போது இவ் சுஹதாக்களை நினைவு கூர்ந்து கத்தமுல் குர்ஆன் வைபவமும் நினைவு சொற்பொழிவுகளும் இடம்பெற இருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி : எம்.எல்.ஏ. லத்திப்,
முன்னாள் தலைவர், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஏறாவூர்.