சமுதாயத்தில் நலிவுற்று இருப்போரை நலமுடன் வாழவைப்பதே எமது முழு நோக்கமுமாகும். அதற்கேற்ப நாம் ஒற்றுமையாக இயங்குவோம்.
இவ்வாறு கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 19வது தலைவராக பதவியேற்ற லயன் கனகசூரியம் அருள்ஞானமூர்த்தி அறைகூவல் விடுத்தார்.
இப் பதவியேற்புவைபவம் நேற்று(30)இரவு கல்முனை எஸ்.எல்.ஆர். விடுதியில் முன்னாள் தலைவர் ஜ.ஹனிபா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுநரின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் பொறியியலாளர் லயன் எஸ்.சசேந்திரன் கலந்து சிறப்பித்தார்.
அங்கு 2018.2019ஆம்ஆண்டுக்கான புதிய தலைவராக லயன்.கே.அருள்ஞானமூர்த்தி புதிய செயலாளராக லயன்.எஸ்.தைரியராஜா புதிய பொருளாளராக லயன் பத்திரண உள்ளிட்ட குழுவினர் லயன்பாரம்பரியத்தின்படி சத்தியப்பிரமாணம்செய்து பதவியேற்றார்கள்.
புதிய தலைவர் லயன் அருள் மேலும் உரையாற்றுகையில்:
அமெரிக்காவிலுள்ள மெல்வின்ஜோன் 1917இல் லயன்ஸ் கழகத்தை உருவாக்கியபோது சேவை செய்ய 'விரும்புங்கள்' என்று சொன்னாரே தவிர 'சேருங்கள்' என்று கூறவில்லை.
இதைத்தான் 2000ஆண்டுகளுக்கு முன்பு எமது தமிழ்மூதாட்டி ஒளவையார் 'அறம்செய்ய விரும்பு' என்றுதான் சொன்னார். அறம் 'செய்' என்று திணிக்கவில்லை. எதற்கும் முதலில் விரும்பவேண்டும்.
இவ்வுலகில் எப்போது மதங்கள் தோன்றியதோ அன்றே எமது லயன்ஸ் கழகத்தின் நோக்கம் குறிக்கோள்கள் யாவும் உருவாகிற்று.ஒவ்வொரு மதங்களும் சேவைசெய்யத்தான் சொல்கின்றன.
எமது கல்முனைநகர லயன்ஸ்கழகம் ஓடையாக ஆரம்பித்து நதியாக மாறி பின்பு ஓடையாக மாறியுள்ளது. அதனை நதியாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். என்றார்.
பிரதம அதிதி லயன்.சசேந்திரன் உரையாற்றுகையில்:
இலங்கையிலே கல்முனை நகர லயன்ஸ்கழகம் கடந்தகாலங்களில் பல பதக்கங்களை வென்று கொடிகட்டிப்பறந்தது. ஆனால் அண்மைக்காலமாக அதன்தரம் செயற்பாடுகள் குறைந்திருந்தது.
இது ஒரு பாடம். எனவே பழையவற்றை மறந்துவிட்டு மீண்டும் இக்கிளையை கட்டியெழுப்ப அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்கவேண்டும். லயன்லேடிகள் பழைய லயன் உறுப்பினர்கள் எல்லோரும் இங்கு சேர்ந்திருப்பது ஒரு புது உத்வேகத்தையும் நம்பிக்கையும் அளிக்கின்றது.
பதக்கங்களை நோக்காமல் நலிந்த மக்களுக்கு உதவுவதில் நாம் கவனஞ்செலுத்தவேண்டும். புதிய தலைவர் லயன் அருள் தலைமையிலான குழுவினர் சிறப்பாக இயங்கவாழ்த்துக்கள். என்றார்.
நிகழ்வில் லியோ தலைவர் நிதாஞ்சன் அருள் வலயதலைவர் லயன் ஜலீல் வலயதலைவர் ஆகியோரும் அதிதிகளாகக்கலந்துகொண்டனர்.
புதியதலைவர் பழையதலைவர் ஆகியோருக்கு முறையே லயன் பரமேஸ்வரன் லயன் நிதாஞ்சன் பொன்னாடை போர்த்திக்கௌரவித்தனர்.







