சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சிமன்றம் என்ற நியாயமான கோரிக்கையை மூலதனமாக வைத்து பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் அந்த மக்களின் உரிமைகளில் ஒன்றாக கிடைக்கவேண்டிய அபிவிருத்திகளை தடுக்க முற்படும் செயலானது பிரதேசத்தில் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
அபிவிருத்திக்காக பணத்தை யாரோ ஒரு அமைச்சர் சிபார்சு செய்திருந்தபோதிலும் அரசினால் ஒதுக்கப்படும் ஒதுக்கீடுகள் என்பது மக்கள் அன்றாடம் செலுத்தும் வரிப்பணத்தால் சேகரிக்கப்படும் பணம். இந்த அபிவிருத்திகளை தடை செய்வது என்பது (Public interest ) என்ற நீதிமன்ற பிரிவின் ஊடாக வழக்குத்தாக்கல் செய்யக்கூடிய ஒரு குற்றம்.
தேர்தல் காலத்தில் உள்ளுராட்சிசபை விடயத்தை உரக்கக்கத்தியவர்கள் தற்போதைக்கு அதனை அடுத்த தேர்தல்வரை கிடப்பில் போட்டுவிட்டு நாறிப்போய்க் கிடக்கும் தோணாவை அபிவிருத்தி செய்ய வருபவர்களை தடுப்பது, மக்களது மனம் மாறிவிடும் என்பதற்காகவா? அல்லது நாங்கள் அந்தப்பிரதேசத்தில் இல்லை அங்கு இருப்பவர்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை நாங்கள் பிரதான வீதியில் இருக்கிறோம் என்ற மமதையா? அல்லது அவ்வாறானதொரு பெரும்தொகைப் பணத்தை செலவிட்டு உங்களால் இப்பிராந்திய மக்களின் அபிலாசைகளை நிவர்த்திக்க முடியுமா? உங்களுக்குத் தேவையில்லை என்றால் அவர்கள் அந்தப் பணத்தை செலவழிக்க வேறு இடம் இல்லாமலா போகும்? சாதாரண மக்களின் அபிலாசைகளில் கைவைத்து தடுக்க முற்படுபவர்களே இறைவன் உங்களை தண்டிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
வரலாற்றுப் பூமியான சாய்ந்தமருதில் தற்போது தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் ஆகிவிட்டான். சிறு சிறு ஊர்கள் எல்லாம் தங்களது பிரதேச அபிவிருத்திக்காக அரசியல்வாதிகளிடம் மண்டியிடும்போது காலடிக்கு வரும் அபிவிருத்திகளை தடுப்பதற்கே புனிதமான பள்ளிவாசலை முன்னிறுத்திய கூட்டம்? கொஞ்சம் பொறுங்கள் அந்த சின்ன ஊர்களை நாங்கள் அண்ணார்ந்து பார்க்கும் காலம் தூரத்தில் இல்லை. அப்போது அவர்களுக்கும் எமக்குமுள்ள வெற்றிடத்தைக் கண்டு கவலை மட்டுமே படமுடியுமேதவிர அவர்களை எட்டமுடியாது போகும். நாங்கள் தற்போது செய்யும் ஆராஜகத்துக்காக அப்போதைய நமது சந்ததிகள் கட்டாயம் கவலைப்படுவர்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக போராட்டங்கள் நடத்திய தமிழ் மக்கள் இன்று அனைத்தையும் விட்டுவிட்டு அபிவிருத்திக்காக அரசாங்கத்தை நெருக்குகிறார்கள். நாங்கள் அபிவிருத்திகள் வேண்டாம் என்கிறோம். மக்கள் எங்களுக்கு வழங்கிய உள்ளுராட்சிமன்றத்தை பெறுங்கள் என்ற ஆணையை காற்றில் பறக்க விட்டோமா? அரசியல்வாதிகள் வேண்டாம் என்றோம் தோம்புக்கண்டத்திலும் கிழக்கு வாசலிலும் தேனிலவு கொண்டாடுகிறோம். மக்களே என்ன நடக்கிறது நாங்கள் உறக்கத்தில் இருக்கிறோமா? இவர்களது ஆட்டத்துக்கு இன்னும் துணைபோனால் நமது சந்ததிகள் நமது முகங்களில் காறிஉமிழ்வார்கள் என்பதுதான் உண்மை.
வினயமாகக் கேட்கிறோம் உள்ளுராட்சிசபைக்காக நீங்கள் போராடுங்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்! உங்களது பதவிகளை தக்க வைப்பதற்காக எங்களை பலியிட்டு விடாதீர்கள்!! அபிவிருத்திகள் நடக்க வழிவிடுங்கள்!!! அபிவிருத்திகளை கண்காணியுங்கள்!!!!
சாய்ந்தமருது மக்கள் மிகுந்த புத்திசாலிகள் அவர்கள் உங்களது ஒவ்வொரு அசைவுகளையும் அவதானிக்கிறார்கள். பள்ளிவாசலில் கூட்டாக முடிவெடுக்காமல் அதுக்கு முந்திய இதுபோல் எடுத்தேன் புடித்தேன் என்று அதிகாரி வேலை பார்க்காதீர்கள். அது பள்ளிவாசலுக்கே கேட்ட பெயரைத் தரும். பள்ளிவாசலே சிலரது மூக்குனங்களை உனது கைக்குள் இறுக்கிக்கொள் இல்லையேல் எல்லாப்பழியும் உனது தலையில்தான் விடியும்.
சாய்ந்தமருதுத் தாய் நிறைய தேவைகளுடன் இருக்கிறாள். அவைகளை பட்டியலிடுங்கள் அதற்காக திட்ட வரைபினை செய்யுங்கள் பின்னர் எந்த அரசியல்வாதியிடம் சென்றாவது இவளது தேவையை பூர்த்தி செய்யுங்கள் இவளது சாபத்துக்கு ஆளாகிவிடாதீர்கள்.
இன்னும் தொடரும்.....