அறிக்கைகளை தமிழ் பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டு மதில் மேல் பூனையாக பதுங்கிய அமைச்சர் சுவாமிநாதன்


- காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இராசையா ஆவேசம்-
றிக்கைகளை தமிழ் பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டு, நழுவல் போக்குடன் மதில் மேல் பூனையாக இந்து சமய விவகார அமைச்சர் சுவாமிநாதன் நடந்து கொண்டார் என்று காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையா குற்றம் சாட்டி உள்ளார்.

இந்து சமய விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டது தொடர்பாக இவருடைய காரைதீவு இல்லத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
இந்து அல்லாத ஒருவர் இந்து சமய விவகார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டது இந்துக்களின் தன்மானத்துக்கு விடுக்கப்பட்ட சவால் ஆகும். இதை அறிந்த உடனேயே இந்து சமய விவகார அமைச்சர் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். குறிப்பாக ஜனாதிபதியை உடனடியாக சந்தித்து எதிர்ப்பை வெளியிட்டிருக்க வேண்டும்.

ஆனால் அவர் தமிழ் ஊடகங்களுக்கு அறிக்கை விட்டு விட்டு அவரின் கடமை முடிந்தது என்று சும்மா இருந்து விட்டார். தமிழ் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையை இவர் சிங்கள மொழியில் நேரடியாக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பாதது ஏன்? ஜனாதிபதிக்கு தொலைபேசி தொடர்பு கொண்டு பேசுகின்ற அக்கறையைகூட காட்டாதது ஏன்? இவர் இந்துக்களின் விடயத்தில் நழுவல் போக்கையை கைக்கொண்டு வருகின்றார். இதற்கு திருக்கேதீஸ்வர கோயில் காணி பிரச்சினையும் இன்னொரு சான்றாகும். இவரால் இந்து மக்களுக்கு எவ்வாறு இதய சுத்தியுடன் சேவையாற்ற முடியும்?
இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை அடுத்தே மஸ்தான் இந்து சமய விவகார பிரதி அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். குறிப்பாக ஜனாதிபதியின் செயலாளருடன் அருண்காந் பல மணிநேர பேச்சுவார்த்தைகள் நடத்தி இருந்தார். அறிக்கை போர் மாத்திரம் நடத்தாமல் ஜனாதிபதி செயலகம் வரை சென்று தைரியமாக இவர் நியாயத்தை தட்டி கேட்டதால்தான் தமிழ் இந்துக்களுக்கான நீதி கிடைத்து உள்ளது. இதற்காக கிழக்கு மாகாண இந்து மக்கள் சார்பாக எனது நன்றிகளை அவருக்கு தெரிவிக்கின்றேன்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -