இலங்கை முஸ்லிம்களின் இலக்கிய பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படவேண்டியது.காலத்தின் தேவையாகும்


-விரிவுரையாளர், கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன். 

பி.எம்.எம்.ஏ.காதர்-
லங்கை மண்ணுடனான இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் கொண்ட தொன்மை உடையதாயினும், அவ்வரலாற்று பாரம்பரியத்தை நிறுவுவதில் நாம் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிஉள்ளது. எமது வரலாற்று ஆவணங்களை பாதுகாப்பதில் எமது சமூகம் விட்ட தவறுகளே இதற்கான முக்கிய காரணமாகும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தெரிவித்தார்.

மருதமுனையைச் சேர்ந்த புலவர் மர்ஹூம் யு.எம்.இஸ்மாயில் 1939ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட உபாக்கியான அந்தாதி செய்யுள் நூலை நூலாசிரியரின் புதல்வர் எம்.ஐ.வதுறுல் பௌஸ் பதிப்பாசிரியராக மீள்பதிப்புச் செய்த நூலின் வெளியீட்டு விழா சனிக்கிழமை(12-05-2018)மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி அஷ்ரப் ஞாகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது இதற்குத் தலைமைதாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது-சம காலத்தில் இருந்து எம்மோடு ஒன்றாக இந்த நாட்டில் வாழ்ந்து வரும் எமது சகோதர இனங்களான பௌத்த,ஹிந்து சமூகத்தினர் அவர்களது வரலாற்று பாரம்பரியங்களை பாதுகாக்கக்கூடிய பல்வேறு பூர்விக ஆவணங்களை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர்.இவ்வாவணங்கள் வரலாறு,இலக்கிய,புதைபொருள்,உருவச்சிலைகள், கலை கலாசார அம்சங்கள் என பல வடிவங்களாக காணப்படுகின்றன.

இதை பற்றி பிரபல வரலாற்று ஆய்வாளர் டி. பி. அபேயசிங்க பின்வருமாறு கூறுகின்றார்.“முஸ்லிம் சமூகம் தனது வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாத்து வைக்காத சமூகமாகும்.”என்று குறிப்பிடுகின்றார்.இவ்வாறு கூறுவதற்கான காரணமாக அவர் பின்வருவனவற்றை குறிப்பிடுகின்றார்.பௌத்தர்களுக்கு ‘மகாவம்சம்’, ‘ரஜவலிய’ போன்ற தொன்மை மிகு வரலாற்று ஆவணங்களும்,தமிழ் மக்களுக்கு ‘ ‘யாழ்ப்பாண வைபவமாலை’போன்ற புராதன வரலாற்று நூல்களும் காணப்படுவது போன்று முஸ்லிம்களுக்கு எவ்வித புராதன வரலாற்று நூல்களும் கிடையாது’ என அடித்து கூறுகின்றார்.

இன்றைய எமது பிரச்சினைகளுக்கான முக்கிய ஒரு விடையமாக இதை நாம் கருதலாம்.இன்று பல்வேறு வழிகளில் ஏனைய சமூக மதவாதிகள், அடிப்படைவாதிகள்,அரசியல்வாதிகளின் தொடர்ந்த தாக்குதலுக்கு எமது சமூகமே ஆளாகி வருவதை நாம் அறிவோம்.சில சந்தர்பங்களில் எம்மை நோக்கி தமது விரல்களை நீட்டி’எமது வரலாற்று சான்றுகளை கேட்கின்றனர்.

நான் லண்டனில் இருந்தபோது ஒரு பிரபலமான கல்விமான் அங்குள்ள பிரபல பத்திரிகையில் பின் வருமாறு எழுதினார். “தமது வியாபார பண்டப் பொருட்களை பாதுகாத்துவைக்க இடம் கேட்ட இலங்கை முஸ்லிம்கள் இன்று தனிமாநிலம் கேட்கிறார்கள்” என எழுதினார்.

அவரின் கட்டுரை பிரித்தானியாவில் வாழ்ந்த இலங்கை முஸ்லிம்களிடையே பெரிய எதிர்ப்பலைகளை ஏற்படுத்தினாலும் யாரும் அதற்கு எதிராக எழுத முன்வரவில்லை. நான் துணிந்து சில நண்பர்களின் ஆலோசனைகளை பெற்றுகொண்டு அதற்கு எதிரான மறுப்பறிக்கையை அவர் எழுதிய பத்திரிகையிலேயே எழுதி அவரை லண்டினிலேயே பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன்.ஆனால் அவர் தனது வீட்டுக்கு வந்தால் கலந்து பேசலாம் என எழுதி விடயத்தை சமாளித்து விட்டார்.

இன்று எமக்கு எதிரான வரலாற்று சவால்களை வெற்றி கொள்ள எமது வரலாறு பூரணமான உறுதிசெய்யப்பட்ட தகவல்களோடு எழுதப் படுவதோடு,இவ்வாறான “உபக்கியான அந்தாதி” போன்ற எமது இலக்கிய முதுசம்கள் பாதுகாக்கப்படவேண்டும். பேராசிரியர் உவைஸ் அவர்கள் தமது கலாநிதி பட்டப்படிப்புக்காக ஆய்வுத்தலைப்பை தெரிவு செய்ய முயன்றபோது, அவரின் பேராசிரியராக இருந்த சுவாமி விபுலானந்தர் ‘உமக்கு சீறாப்புராணத்தை பற்றி தெரியுமா? எனக் கேட்டபோது, உவைஸ் அவர்கள் தலைகால் தெரியாது விழித்தார்கள்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் முஸ்லிம்களால் எழுதப்பட்ட சுமார் இரண்டாயிரம் நூல்களை பேராசிரியர் உவைஸ் அவர்கள் இந்தியாவில் காமராஜர் பல்கலைக்கழக தமிழ்துறை பேராசிரியராக இருந்தபோது தொகுத்து வெளியிட்டு தமிழ் இலக்கியத் துறையையே ஆச்சரியம் அடையச் செய்தார்கள்.

எமது மருதமுனை மண்ணுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் பல நூறு வருட வரலாற்று தொடர்புண்டு. நாமறிந்த வகையில் சின்னாலிமப்பாவிலிருந்து தொடரும் இவ்விலக்கிய பயணம் புலவர்மணி மர்ஹூம் சரிபுத்தீன்,எமது இந்த நூலின் ஆசிரியர்,பெரிய வாத்தியார் இஸ்மாயில் மரைக்கார் போன்றறோரின் ஊடாக இன்று வரை தொடர்ந்து பயணிக்கின்றது.இவ்வாறான இலக்கிய பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படவேண்டும். இது காலத்தின் தேவையாகும்.

இந்த நிகழ்வில் பேராசிரியர்களான றமீஸ் அப்துல்லா,பி.எம்.ஜமாஹிர்,ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்றாகீம், ஓய்வு பெற்ற பீடாதிபதி எம்.ஏ.எம்.ஜெலீல்அதிபர்களான எஸ்.ஏ.எஸ்.இஸ்மாயில் மௌலானா,ஏ.எம்.ஏ.சமட், ஏ.எல்.செயினுலாப்தீன்,,எஸ்.எம்.பீர்முகம்மது, கவிஞர் எம்.எம்.விஜிலி,இஸ்மாயில் மரைக்கார் பௌன்டேசன் தலைவர் நூறுல் பௌஸ், ஆகியோரும் விருந்தினர்களாக் கலந்து கொண்டனர்.

நூலின் முதற் பிரதியை சறோ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச் தாஜூதீன் பெற்றுக் கொண்டார் நினைவுப் பிரதியை புலவர் மர்ஹூம் யு.எம்.இஸ்மாயிலின் மனைவி உம்மு ஜெஸீமா பெற்றுக் கொண்டார்.மருதமுனை இஸ்மாயில் மரைக்கார் பௌன்டேசன் இந்த நூலை வெளியீடு செய்தது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -