இன்று கண்டி தெல்தெனிய, திகன உள்ளிட்ட முஸ்லிம் கிராமங்களில் பேரினவாத சக்திகள் மேற்கொண்ட தாக்குதலின் பின்னணி ஒருசில முஸ்லிம்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணமாகும். இதன் காரணமாக நமக்கு நாமே தலையில் மண்ணை அள்ளி வாரும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது எனலாம்.
சிறிய பிரச்சிணை ஒன்றை பூதாகாரமாக்கிய சம்பவம் முழு முஸ்லிம்களையும் கதிகலங்க வைத்துள்ளது. ஒருசிலரது பொறுப்பற்ற விதமான செயற்பாடுகள் ஏனைய சமுகங்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டிய நல்ல சந்தர்ப்பங்களை கூறுபோட்டு அவர்களுக்கு முழு முஸ்லிம்களும், இஸ்லாமும் விரோதிகளாக நோக்க வேண்டிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்து விட்டோம். இன்றைய துர்ப்பாக்கிய சு10ழ்நிலையில் முழு முஸ்லிம்களும் நிதானமாகவும், பொறுப்புணர்வுடனும் இன ஒற்றுமையை கருத்திற் கொண்டு பாதுகாப்பாகச் செயற்பட வேண்டிய நிலையில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த துணைபோய் விடக்கூடாது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒருசில முஸ்லிம் நபர்களால் கண்டியில் பெரும்பான்மைச் சகோதரர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் இன்று பூதாகாரமாகி விட்டது. சாதாரண ஒரு சிறு சம்பவம் கொலையில் முடிந்ததன் காரணமாகவே பேரினவாத சக்திகள் முழு முஸ்லிம்கள் மீதும், அவர்களின் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீதும் தாக்குதல் நடாத்தி பழிவாங்கும் படலத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்கு நாமே மூல காரணமாக இருந்துள்ளதால் எதனையும் செய்ய முடியாத நிலையில் முஸ்லிம்களின் நிலைமைகள் ஆப்பிழுத்த குரங்கின் கதையாகவுள்ளது.
வாகன விபத்து என்பது சில வேளைகளில் சடுதியாக இடம் பெறும் சம்பவமாகும். அவ்வாறானதொரு சடுதியான சம்பவமே கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டியில் பெரும்பான்மை சமுகத்தினைச் சார்ந்த அம்பாறை மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு நபர் மூலம் ஏற்பட்டு விட்டது. முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியில் குறித்த நபர் ஓட்டி வந்த வாகனம் சிறிதாக முட்டுப்பட்டு அந்த முச்சக்கர வண்டியின் சயிட் கண்ணாடி உடைந்துள்ளது. அதன் பெறுமதி சுமார் 200.00ரூபாவிற்கும் குறைவானதே எனினும் குறித்த வேன்சாரதி குறித்த சம்பவம் தொடர்பாக பிரச்சினையை ஏற்படுத்தாது அவர்களுடன் கதைத்து ஆயிரம் ரூபா தொகையைக் கொடுத்து கண்ணாடியைப் போடுமாறு கூறிவிட்டுச் சென்ற சமயம் முச்சகர வண்டியில் உள்ளவர்கள் குறித்த வேன் சாரதியை துரத்திச் சென்றுள்ளனர். இந்நிலையில் குறித்த வாகனம் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நின்றுள்ளது. அங்கு சென்ற இவர்கள் குறித்த காரதியை கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக குறித்த நபர் ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு ஒருசில நாட்களில் சிகிச்சை பலனின்றி மரணமானார். இவர்களைத் தாக்கியுள்ளவர்கள் முஸ்லிம்கள் என்று சொல்ல வெட்கப்பட வேண்டியுள்ளது. காரணம் இவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தவர்களாகும் என்பதே கவலையானதும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
இஸ்லாத்தில் மது தடை செய்யப்பட்ட போதிலும் அதனை அருந்திக் கொண்டு இவ்வாறு தகராறு செய்வது முழு முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் இழுக்குகளை ஏற்படுத்துவதுடன் இன ஒற்றுமையைச் சீர்குலைத்து நாட்டில் அமைதியற்ற நிலைமைகளையே இன்று தோற்று வித்து முழு முஸ்லிம்களும் கவலை கொள்ளும் வகையில் சம்பவம் நடந்தேறிவிட்டது.
குடி குடியைக் கெடுக்கும் என்பது போல் ஒருசில முஸ்லிம்கள் குடிப்பதால் முழு சமுகத்தினையும் வன்முறையாளர்களாக ஆக்கும் செயற்பாடாகவே கண்டிச் சம்பவத்தை நோக்க வேண்டியுள்ளது. இன்று (05) நடைபெற்ற சம்பவம் முழு முஸ்லிம்களுக்கும் வயிற்றில் நெருப்பை வார்த்ததுபோல் அமைந்துள்ளது. யாரிடமும் முன்நின்று உதவி கேட்க முடியாது திண்டாட வைத்துள்ளதுள்ளதுடன் இனவாதிகள் முஸ்லிம்களைத் தாக்கி, அவர்களின் பள்ளிகளை உடைத்தும், பல வர்த்தஸ்தாபனங்களை சு10றையாடி நெருப்பு வைத்துள்ளதுடன் இன்னும் பல வீடுகளுக்கும் தீ மூட்டி நாசம் செய்துள்ளனர்.
இன்று ஒருசில பிக்குகளுடன் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான பேரினவாத சக்திகள் பொலிஸாரின் கட்டுப்பாடுகளையும் மீறி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி பல கடைகள், வீடுகள, பள்ளிவாசல்களையும் தாக்கிய சம்பவம் அவர்களின் ஆவேசத்தின் உச்சக் கட்டத்தை காட்டியுள்ளது. எரிகின்ற நெருப்பில் எண்ணை வார்த்ததுபோல் முஸ்லிம்களை அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் குண்டர் சக்திகளுக்கு ஒருசில முஸ்லிம் குடிகாரர்கள் செய்த சம்பவம் முஸ்லிம்களை பழிவாங்க வழிவகுத்து விட்டது.
எனவே முழு முஸ்லிம்களும் இந்த நாட்டில் அமைதியாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டிய நிலையில் ஒருசிலர் பொறுப்பற்ற விதத்திலும் இஸ்லாத்திற்கு மாற்றமான முறையிலும் மது அருந்திக் கொண்டு கலியாட்டங்களில் ஈடுபடுவதன் விளைவு அணைவரையுமே இன்று ஆபத்தான நிலைமைகளுக்கு இட்டுச் செல்வதுடன் முஸ்லிம்களை வன்முறையாளர்களாகவும் சித்தரிக்க வைத்துள்ளது. கடந்த காலங்களில் மட்டுமல்லாது கடந்த சில தினங்களுக்கு முன்னர்கூட அம்பாறையில் இடம்பெற்ற சம்பவங்கள் எல்லாம் முழு முஸ்லிம் சமுகத்திற்கும் ஒரு படிப்பினையாக இருக்கையில் ஒவ்வொருவரும் நிதானமான முறையில் காலடியெடுத்து வைக்க வேண்டியுள்ளது என்பதனை கவனத்திற் கொள்ள வேண்டும்.