நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற உறுப்பினர்களின் சத்தியாப்பிரமாண வைபமும் பதவிகளுக்கான தலைவர்கள் தெரிவும் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. கொட்டகலை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 26.03.2018 அன்று காலை 10.30 மணியளவில் கொட்டகலை பிரதேச சபையில் நடைபெற்றது.
கொட்டகலை பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஹேரத் தலைமையில் இடம்பெற்றது. இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ராஜமணி பிரசாத், ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கல்யாணகுமாரும் தலைவருக்காக போட்டியிட்டனர்.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ராஜமணி பிரசாத்திற்கு 9 வாக்குகளும், ஐ.தே.க சார்பாக போட்டியிட்ட கல்யாணகுமாருக்கு 6 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
9 வாக்குகளை பெற்ற ராஜமணி பிரசாத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். இதேவேளை இந்த வாக்கெடுப்பில் ஒருவர் வாக்களிக்களிப்பிலிருந்து தவிர்த்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்கெடுப்பில் திறந்து வாக்கெடுப்பிற்காக 9 பேரும் இரகசிய வாக்கெடுப்பிற்காக 6 பேரும், ஒருவர் தவிர்த்துக்கொண்டமையும் குறிப்பிடத்தகக்கது.
அத்தோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட முத்துராமலிங்கம் ஜெயகாந்த் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
உப தலைவர் தெரிவுக்காக எதிர்கட்சி உறுப்பினர்களிடம் வினவியபோது, வேறு ஒருவரை தெரிவு செய்ய முன்வராததனால் இவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் இவ்விடத்திற்கு வருகை தந்து தங்களின் ஆதரவாளர்களுக்கு வாழத்துக்களை தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.