அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் சாய்ந்தமருது பிரதேச கிளைச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற பிரதேச கல்விப் பணிப்பாளருமான எம்.ஐ.அப்துல் ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேர்ஸி லங்கா நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் என்.எம்.ஏ.முஜீப் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், ஓய்வூதிய விடயத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முஜீபா, அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் அம்பாறை மாவட்ட சங்க உப தலைவர் ஏ.எல்.எம்.பஷீர், செயலாளர் ஏ.எல்.எம்.அமீன், டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், பொறியியலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதன்போது அரச சேவை ஓய்வூதியர்களின் நலன் கருதி சாய்ந்தமருது பொலிவேரியன் புதிய நகரில் பொழுதுபோக்கு ஓய்வு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதுடன் இத்திட்டத்திற்கு உதவுமாறு கோரி மேர்ஸி லங்கா நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்டப் பணிப்பாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
நிகழ்வின் ஓர் அங்கமாக மரணமடைந்த உறுப்பினர்களுக்காக மௌலவி ஐ.எல்.அஹமட், துஆப் பிரார்த்தனையை நடத்தி வைத்தார்.நிகழ்வின் இறுதியில் நடப்பாண்டுக்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. தலைவராக எம்.ஐ.அப்துல் ஜப்பார், உப தலைவராக டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், செயலாளராக ஏ.எல்.மீராலெப்பை ஆகியோர் மீண்டும் ஏகமனதாக தெரிவானதுடன் பொருளாளராக ஏ.ஆர்.எம்.பாறூக், உப செயலாளராக ஐ.எல்.எம்.ஹம்சா, நிர்வாக குழு உறுப்பினர்களாக பொறியியலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், நஜீமா அல்லாபிச்சை ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.