முஸ்லிம் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்ஆத் தொழுகைக்கு செல்வது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருபம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
“இலங்கையின் ஒவ்வொரு பிரஜையினதும் மத சுதந்திரம் என்பது அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது அரசியலமைப்பின் 14ஆம் அத்தியாயம் 1 (2) பிரிவிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிறுவனத் தலைவர்களின் தீர்மானத்திற்கமைவாக நிறுவன செயற்பாடுகளுக்கு தடை ஏற்படாத வகையில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் ஜூம்ஆத் தொழுகையை நிறைவேற்றுவதற்காக இரண்டு மணி நேர விசேட விடுமுறை வழங்கப்படலாம் என பொது நிர்வாக அமைச்சின் 21/2016 ஆம் இலக்க சுற்றுநிருபம் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த சுற்றுநிருபம், தாபனக் கோவையின் Xii ஆம் அத்தியாயம் 12:1 க்கு திருத்தமாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை அண்மையில் அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இந்நடவடிக்கையானது முற்றுமுழுதாக இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என்பதுடன் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மத சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனை நாம் வன்மையாக எதிர்க்கிறோம்.
எனவே முஸ்லிம் அரச ஊழியர்களின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றுநிருபத்தை உடனடியாக வாபஸ் பெற்று, முஸ்லிம் ஊழியர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இல்லையேல் நீதிமன்றம் சென்று அதனை சவாலுக்குட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும் அறியத்தருகின்றோம்” என்று அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இவ்விடயம் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டபோது முஸ்லிம் அமைச்சர்களும் அதற்கு ஆதரவாக கைதூக்கியிருப்பது கவலைக்கும் கண்டனத்திற்கும் உரிய விடயமாகும் என்று இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.