ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், அந்த மாவட்டத்தின் பாராளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பவம் நடந்து 3 நாட்களாக இரவு, பகல் பாராது நள்ளிரவு தாண்டியும் களத்தில் நின்றுகொண்டு போராடி வருகிறார். பாதுகாப்புத்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையிலேயே அவர் களத்தில் இறங்கியுள்ளார்.
கலவரங்கள் நடைபெற ஆரம்பித்த தருணத்தில், அம்பாறை மாவட்டத்திலிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டி உதவி பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்கவை தொடர்புகொண்டு விசாரித்தபோது, பிரச்சினைகள் எதுவுமில்லையென மழுப்பலான பதிலை தெரிவித்தார். மறுநாள் ரவூப் ஹக்கீம் களத்துக்கு சென்றபோது, கலவர இடங்களுக்கு நேரடியாக செல்வது உங்களது பாதுகாப்பில்லை என்பதை காரணம் காட்டி உள்ளே செல்வதை தடுத்தார். எனினும், அந்த எச்சரிக்கையும் மீறி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்றார்.
கண்டி மாவட்டம் முழுவதும் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் இனவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்திவந்தனர். களத்திலிருந்த ரவூப் ஹக்கீமுக்கு தாக்குதல் நடைபெறுவதாக தொலைபேசி அழைப்பு வந்தால், உடனே களத்துக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினார். அதற்குள் இன்னுமொரு இடத்திலிருந்து அழைப்பு வந்தால் அங்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தார். சாப்பாடு இன்றி, தூக்கமின்றி நள்ளிரவு தாண்டியும் பம்பரமாக சுழன்று திரிந்தார்.
இனவாதத்துக்கு எதிராக நல்லாட்சியை கொண்டுவந்த முஸ்லிம்கள், இந்த ஆட்சியிலும் தாங்கள் நசுக்கப்படுவது குறித்து தங்களது ஆதங்கங்களை கொட்டித்தீர்த்தனர். சட்டம் ஒழுங்கை அமுல்படுத்துவதில் அரசாங்கம் காட்டும் அலட்சியப்போக்கு குறித்து மக்கள் பலத்த கண்டனங்களை தெரிவித்தனர். அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர் என்றவகையில் அந்த எதிர்ப்புகளையும் சகித்துக்கொண்டு இரவு, பகலாக களப்பணியாற்றினார்.
அத்துடன் தாக்குதல் நடைபெற இடங்களில் தாங்கள் அச்சத்தில் இருப்பதாக மக்கள் கூறியபோது, அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக வதந்திகளும் பரப்பப்பட்டன. இதனைப் பார்த்து மக்கள் பீதியடைந்த நிலையில் அந்த இடங்களுக்கும் சென்றும் நிலைமைகளை நேரில் அவதானித்தார். களத்தில் இருந்தவாறே பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் பேசி மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றுக்கொண்டார். அத்துடன் களநிலவரங்களை வெளிநாட்டு தூதரகங்களும் அறிவித்தார்.
முதலில் திகன பிரதேசத்துக்குச் சென்ற அமைச்சர், கலகக்காரர்களினால் சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்டார். அங்கிருந்தவாறே ஜனாதிபதியை தொடர்புகொண்டதன் மூலம் இராணுவத்தினர் சம்பவ இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்களையும், பள்ளிவாசல் நிர்வாகிகளையும் நேரடியாக சந்தித்த அமைச்சர் கலநிலவரங்கள் குறித்து கேட்டறிந்துகொண்டார். சட்டமும் ஒழுங்கும் சரியான முறையில் பேணப்படாமையினால், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் ஆத்திரத்துடனும் ஆவேசத்துடனும் இருந்ததை அவதானிக்க முடிந்தது. எங்களுக்கு அபிவிருத்திகள் தேவையில்லை, எங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
அங்குள்ள பொலிஸ் நிலையத்துக்கு நேரடியாகச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுடன் கதைத்து, முஸ்லிம் பிரதேசங்களில் இரவுநேர தாக்குதல் நடைபெறாத வண்ணம் ஒவ்வொரு சந்திகளிலும பொலிஸாரை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் பள்ளிவாசல்களை அண்டிய பகுதிகளில் இராணுவத்தினர் களமறிக்கப்பட்டனர்.
இதேநேரம் கெங்கல்ல மஸ்ஜிதுல் லாபிர் பள்ளிவாசலை அண்டிய பிரதேசத்திலிருந்து ரவூப் ஹக்கீமுக்கு ஒரு பரப்பான தொலைபேசி அழைப்பு வந்தது. முஸ்லிம் இளைஞர் ஒருவர் கலவரத்தில் காணமல்போயுள்ளதாக தகவல் சொல்லப்பட்டது. உடனே களத்துக்கு விரைந்த அமைச்சர் தனது குழுவினருடன் பள்ளிவாசல், அயலிலுள்ள வீடுகளில் தேடிப்பார்த்தனர். அவரது வீடு பூட்டப்பட்டு, எரிந்த நிலையில் காணப்பட்டதால் அந்த வீட்டில் சந்தேகம் வரவில்லை. மறுநாள் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அப்துல் பாஷித் என்ற அந்த இளைஞர் மரணித்த நிலையில் மீட்கப்பட்டார்.
முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பாசில் என்பவர் பெற்றோல் குண்டு தயாரித்ததாக குற்றம்சாட்டி அவர்மீது இராணுவம் தாக்குதல் நடத்தியது. அதன்பின் ரவூப் ஹக்கீம் அவரை அங்குமிங்கும் தேடியலைந்தார். இராணுவத்தின் உயரதிகாரிகள் கூட இவர் இருக்கும் இடம்தெரியாது என்று கைவிரித்தனர். பல இடங்களுக்குச் சென்று தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக அவர் பொலிஸ் நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தார். அமைச்சரின் முயற்சியால் மறுநாள் அவர் விடுவிக்கப்பட்டார்.
கலகக்காரர்களின் தாக்குதல் முதல்நாளில் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திலும் பரவியபோது, உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிலைமையை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அங்குள்ள முஸ்லிம்களின் சில வர்த்தக நிலையங்களும், வீடுகளும் தாக்கப்படும்குள் அதிரடியாக செயற்பட்டு, பொலிஸார் உடனடியாக ஸ்தலத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இதனால், கலகக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
அமைச்சர் அங்கிருந்து வெளியேறிச் சென்ற பின்னர், குருநாகல் வீதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. பள்ளிவாசல் கண்ணாடிகள் சிறு சேதமடைந்துள்ளன. இதனால், இரண்டாவது தடவையாக அப்பகுதிக்குச் சென்ற அமைச்சர், பள்ளிவாசலை சுற்றி பொலிஸ் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியதுடன், இராணுவத்தினரையும் அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தினார்.
இதேவேளை, மடவளை பிரதேசத்திலும் தாக்குதல் நடைபெறுவதற்கான அச்சம் காணப்படுவதால், ஊருக்குள் நுழையும் பிரதேசங்களில் பாதுகாப்புக்காக பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் தாக்குதல் நடைபெறாதவாறு பாதுகாப்பு தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அக்குறணை ஹஸனா பள்ளிவாசலுக்கு சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், பள்ளி நிர்வாகிகள், ஊர் மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலருடன் தற்போதைய பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார். 9ஆம் கட்டையில் தாக்குதல் நடைபெறுவதாக வதந்தியொன்று பரவிய நிலையில், நள்ளிரவு நேரத்தில் அக்குறணை முழுவதும் நேரில் சென்று பார்வையிட்டார். எனினும், அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத நிலையில் அக்குறணையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.
தென்னகும்புர பகுதியில் பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். குறித்த பள்ளிவாசலுக்கு பெற்றோல் போத்தல் ஒன்று வீசப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசலுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை. அலதெனியவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கும் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த பள்ளிவாலின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. உடனடியாத பள்ளிவாசலுக்கு முன்னால் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.
ஹேதெனிய பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் நிறுவனத்துக்கு கலகக்காரர்கள் பெற்றோல் குண்டு வீசியுள்ளனர். வர்த்தக நிலையத்தின் மேல்பகுதி தீப்பிடித்துள்ள நிலையில், உடனடியாக களத்துக்குச் சென்ற அமைச்சர் தீயணைக்கும் படையினரை வரவழைத்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
தாக்குதலினால் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், மரணித்த அப்துல் பாஷிதின் சகோதரர் மற்றும் பாசில் ஆகியோரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேரில் சென்று பார்வையிட்டார்.
மெனிக்கின்ன முஸ்லிம் பிரதேசங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு கடமையிலிருந்த பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, கலகக்காரர்களை விரட்டியுள்ளனர். இங்கு நடைபெறும் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கு போதியளவு படையினர் இல்லையென அங்கிருந்த பொலிஸார் கூறினர். உடனே பிரதமரை தொடர்புகொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், வெளி மாவட்டங்களிலுள்ள 2000 இராணுவத்தினரை உடனடியாக கண்டி மாவட்டத்துக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மடவளை பிரதேசத்திலும் பதற்றநிலை தோன்றியது. அங்கு ஸ்தலத்துக்குச் சென்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் அதிகாலை ஒரு மணியளவில் வத்தேகம பிரதேசத்தில் ஆரம்பித்த கலவரம் இராணுவத்தினராலும் பொலிஸாரினாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அக்குறணை பகுதியில் தாக்குதல் நடைபெற்ற நிலையில், கண்டி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரை 1ஆம் கட்டை பள்ளிவாசலுக்கு இரவு 11 மணியளவில் அழைத்து, அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். பள்ளிவாசல் நிர்வாகம் பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கண்டி பிரதி பொலிஸ் மா பாதுகாப்பு தேவையான பகுதிகளில் இராணுவத்தினரும், விசேட அதிரடிப் படையினரும், விமானப் படையினரும் களத்தில் குவிக்கப்பட்டனர்.
இதேவேளை அக்குறணை 9ஆம் கட்டை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்கு 11 மணியளவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்று அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலுக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் ரணவீரவையும் அழைத்திருந்தார். அப்பிரதேசத்தில் மீண்டும் கலவரம் ஏற்படாமலிருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 1ஆம் கட்டை பள்ளிவாசலுக்கும் கஹவத்த மற்றம் கசாவத்த பிரதேசங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன அக்குறணை பாதையின் இரு மருங்கிலும் இராணுவத்தினரின் யுத்த தாங்கிகள் நிறுத்தப்பட்டன.
அக்குறணை 8ஆம் கட்டையில் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்தார். பக்கத்து ஊர்களிலிருந்து வந்து தாக்குதல் நடத்திய காடையர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களின் விபரங்களை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை அமைச்சர் மேற்கொண்டார். இதனால் தாக்குதல் மேற்கொண்ட பல காடையர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராணுவத்துக்கும் மேலதிகமாக விமானப் படையினரையும் அவசியமானால் கடற் படையினரையும் கண்டிக்கு வரவழைக்குமாறு கூட்டுப்பாதுகாப்பு படைகளின் பிரதானி ரியல் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. ஆகாய மார்க்கமாக விமானப்படையினர் உரிய உயரதிகாரிகளுடன் வரவழைக்கப்பட்டனர். அத்துடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மூவரின் கீழும், அவர்களுக்கு துணையாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவரின் கீழும் 3 விசேட பொலிஸ் அணிகள் கண்டிக்கு வரவழைக்கப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்பட்டன.
அக்குறணையையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பாதுகாப்பதற்காக அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளின் பேரில் பிரதி பொலிஸ்மா அதிபர் ரணவீரவும், குழுவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் கட்டுகஸ்தோட்டை, அக்குறணை மற்றும் பூஜாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குருந்துகொல்லை பிரதேசத்துக்குச் சென்ற ரவூப் ஹக்கீம், அங்கு பட்டப்பகலில் காடையர்கள் புரிந்த அட்டகாசங்களை கேட்டறிந்தார். தாக்குதலுக்குள்ளான புதிய பள்ளிவாசலையும் அவர் சென்று பார்வையிட்டார். வியாழக்கிழமையும் உக்குரஸ்ஸபிட்டிய, குருந்துகொல்லை முதலான பிரதேசங்களில் இனவாதிகள் கலவரத்தில் ஈடுபட துணிந்திருப்பதாகவும் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையிட்டு அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.