இவ்விடயம் தொடர்பில் பிரதியமைச்சர் இன்று ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த யுத்த காலத்தின் போது அரசுக்கெதிராக ஆயுதம் தூக்கிப் போராடியவர்கள் மாத்திரமின்றி அப்பாவித் தமிழர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திட்டமிட்டு தவறு செய்தவர்களும், எதுவுமே அறியாமல் தப்பு செய்தவர்களும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தற்போதும் வாடுகின்றனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரும் சிறையில் வாடுகின்றார். அவரது மனைவியும் தற்போது இறந்து விட்ட நிலையில் எதுவும் அறியாத அவரது ஆண் பிள்ளையும், பெண் பிள்ளையும் தாயும், தந்தையுமின்றி அனாதரவற்ற நிலையில் உள்ளனர்.
எனவே ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளும் தாய் தந்தையின் அரவணைப்பு இல்லாமல் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்படையும் சூழ்நிலை காணப்படும் நிலையிலும், பிள்ளைகளது மனநிலை பாதிப்படையாத வகையிலும் அரசு ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்புற உதவுமாறு ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.