இனவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஹிஸ்புல்லாஹ் களத்தில்!

பௌத்த பேரினவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான திகன பிரதேசத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருமளவிலான நிவாரணங்களை முதற்கட்டமாக வழங்கி வைத்தார்.
நிவாரண சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள திகன, கும்புக்கந்துர மஸ்ஜிதுல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஹைருல்லாவிடம் தனது முதல் கட்ட நிவாரணங்களை வழங்கி வைத்த ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான ஹிஸ்புல்லாஹ் பின்னர் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட ஊர் பிரமுகர்களுடன் விசேட கலந்துரையாடலொன்றிலும் ஈடுபட்டார்.
இதன்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள்கட்டுமானப் பணிகள், மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், மக்களின் தற்போதுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,
“முஸ்லிம்களின் முன்னேற்றம், பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை இல்லாமல் செய்வதற்காகவே இவ்வாறான இனவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகம் நிதானமாகவும் - அவதானமாகவும் செயற்பட வேண்டும். திகனையில் ஏற்பட்ட சம்பவம் முஸ்லிம் சமூகத்துக்கு பல படிப்பினைகளை தந்துள்ளது. அளுத்கம கலவரத்தின் பின்னர் இந்த நாட்டில் மீண்டுமொரு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்படும் என்றே எதிர்பார்த்தோம். என்றாலும், சட்டம் ஒழுங்கை அமுல்படுத்த வேண்டிய தரப்பினர் திகனை சம்பவத்தின் போது தமது கடமையினை சரிவர நிறைவேற்றவில்லை. அதன் காரணமாகவே கண்டி மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கும் கலவரம் பரவியது.
இலங்கையில் இனவாதம் பாரியளவில் வளர்க்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்திலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் தொடரலாம். எனவே, முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு இந்த விடயத்தில் அதிக பொறுப்புள்ளதை நாம் உணர்கின்றோம். சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் இனவாதத்தை தோற்கடிப்பதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமது சொத்துக்களை மாத்திரம் அல்ல உயிர்களையும் கடந்த 30 வருட கால போரின் போது இழந்தார்கள். எனவே, எமக்கு சோதனைகள் என்பது புதிய விடயமல்ல. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலேயே கவனம் செலுத்த வேண்டும்” - என்றார்.
கலந்துரையாடலைத் தொடர்ந்து திகன, ரஜவெல்ல, கும்புக்கந்துர, பலகொல்ல, பல்லேகல போன்ற பகுதிகளில் பேரினவாத தாக்குதல்களினால் தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களை பார்வையிட கள விஜயமொன்றை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர், இனவாத தாக்குதல்களினால் உயிரிழந்த அப்துல் பாசிதின் வீட்டிற்கும் சென்றார்.
இந்த விஜயத்தின் போது பாத்திமா பௌண்டேஷன் தலைவர் இக்ரம் மொஹமட், மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -