கல்முனை தமிழ் பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு கல்முனை மாநகர ஆணையாளர் தொடர்ச்சியாக சமூகமளிப்பதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை ஆணையாளர் ஜே.லியாகத் அலி மறுத்துள்ளார்.
கல்முனை தமிழ் பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆணையாளர் சமூகமளித்திருக்காத நிலையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், இக்குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார் என்று இன்று 19ஆம் திகதி திங்கட்கிழமை பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.
இதற்கு விளக்கமளித்து கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
"அன்றைய தினம் மதியம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அம்பாறை மாவட்ட செயலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முக்கிய கூட்டமொன்றில் திணைக்கள தலைவர் என்ற ரீதியில் நான் கலந்து கொண்டமையினால் எனது பணிப்பின் பேரிலேயே எமது மாநகர சபையின் பொறியியலாளர் சர்வானந்தன் எனது பிரதிநிதியாக கல்முனை தமிழ் பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார். இதனை கூட்டத்தில் தெரியப்படுத்துமாறும் என்னால் அறிவுறுத்தப்பட்டிருந்தது..
மேலும் அன்றைய தினம் பிற்பகல் அரச அங்கீகாரமளிக்கப்பட்ட வைபவமான கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் கொடியேற்ற விழாவின் ஆரம்ப வைபவத்திலும் மாநகர ஆணையாளர் என்ற ரீதியில் தான் கலந்து கொள்ள வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள பின்னர் வட்டார ரீதியாகவும் மேலதிக பட்டியல் மூலமும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதனால் இத்தகைய கூட்டங்களுக்கு மாநகர முதல்வர், பிரதி முதல்வர் உட்பட குறித்த பிரதேசத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற வட்டார மற்றும் பட்டியல் உறுப்பினர்களும் கலந்து கொள்வது அவசியமாகும்.
அத்துடன் மாநகர சபை செயற்றிட்டங்கள் தொடர்பில் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் எத்தகைய தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் சபையின் அங்கீகாரமின்றி அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது என்பதையும் கவனத்தில் கொள்தல் வேண்டும்.
மேற்படி விடயங்கள் பற்றி கல்முனை தமிழ் பிரதேச செயலாளருக்கு என்னால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன என்பதையும் அறியத்தருகின்றேன்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் தான் பங்குபற்றி வந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக நான் கூட்டங்களுக்கு சமூகமளிப்பதில்லை என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறேன்" என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி விடயங்கள் பற்றி கல்முனை தமிழ் பிரதேச செயலாளருக்கு என்னால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன என்பதையும் அறியத்தருகின்றேன்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் தான் பங்குபற்றி வந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக நான் கூட்டங்களுக்கு சமூகமளிப்பதில்லை என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறேன்" என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
