விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் கல்முனை ஸாஹிராக் கல்லூரி கிரிக்கெட் பாடசாலையாக விளையாட்டுத்துறை அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு அதற்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.எஸ். முஹமட் தலைமையில் இன்று (26) திங்கட்கிழமை எம்.எஸ் காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, கல்லூரியின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
விளையாட்டுத்துறை அமைச்சினால் 200 பாடசாலைகள் கிரிக்கெட் பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் கல்முனை சாஹிரா கல்லூரியும் பிரதி அமைச்சர் ஹரீஸினால் உள்வாங்கப்பட்டு பாடசாலை மாணவர்கள் கடின பந்து கிறிக்கெட் பயிற்சியினை மேற்கொள்வதற்கு ஏதுவாக 6 இலட்சம் ரூபா செலவில் ஆடுகள பயிற்சித் தளம் அமைக்கப்பட்டு சிரேஸ்ட மற்றும் கனிஷ்ட பிரிவு விளையாட்டு கழகங்களுக்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரினால் குறித்த பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட வடிகான் மற்றும் மைதான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது பார்வையிட்டதோடு பாடாசலையின் இருபக்கத்திற்குமான நுழைவாயில் கோபுரம், நிர்வாக கட்டிட தொகுதி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.