காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் மாகாணமட்ட இடமாற்றசபை தீர்மானத்திற்கமைவாக மேற்கொண்ட வலய மற்றும் மாவட்ட ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
இத்தகவலை கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் சின்னத்தம்பி மனோகரன் தெரிவித்தார்.
வலயத்துக்குள்ளான ஆசிரியர் இடமாற்றங்கள் மார்ச் 2ஆம் திகதி அமுலாகவிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் வலய மாவட்ட மட்ட இடமாற்றம் எப்போது நடைபெறுமென இலங்கைத்தமிழர் ஆசிரியர்சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
மேலும் அவர் கூறுகையில்:
மார்ச் முதலாம் திகதி வெளியிடப்படும் இடமாற்றலாகும் ஆசிரியர் பெயர்விபரங்கள் அடங்கியபட்டியலின்படி நியாயமான காரணங்களிருப்பின் ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்ய முடியும்.
பின்பு ஆசிரிய தொழிற்சங்கங்களின் இடமாற்றசபையூடாக மேன்முறையீட்டு இடமாற்றசபையை நடாத்தி இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.
அதற்கமைவாக இரண்டாம் தவணை முதல் வலயங்களுக்கிடையிலான மாவட்டங்களுக்கிடையிலான குறித்த இடமாற்றம் அமுலுக்குவருமென அவர் தெரிவித்தார்.