முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது-
அண்மைய சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ள விடயமாக ஊடகவியலாளர் ஒருவரினால் பெருந்தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு எதிராக கூறப்பட்ட வசைபாடலாகும்.
மர்ஹூம் அஸ்ரப் இல்லையென்றால் முஸ்லிம் காங்கிரஸ் இல்லை. முஸ்லிம் காங்கிரஸ் இல்லையென்றால் றிசாத் பதியுதீன் இல்லை என்ற உண்மை எத்தனை பேருக்கு புரியும் ?
நீண்ட காலமாக அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஆஸ்தான ஊடகவியலாளராகவும், மக்கள் காங்கிரசின் முக்கிய பிரமுகராகவும் செயல்பட்டுவருகின்ற மருதமுனையை சேர்ந்த ஊடகவியலாளரின் குற்றச்சாட்டினை ஒரு சாதாரண கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது.
இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு அரசியல் முகவரி பெற்றுக்கொடுத்த பெருந்தலைவருக்கு எதிராக கூறப்பட்ட அருவருக்கத்தக்க குற்றச்சாட்டானது கட்சி வேறுபாடுகளுக்கப்பால் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொந்தளிப்பினால் கலவரம் அடைந்துள்ள குறித்த ஊடகவியலாளர் வேறுவழியின்றி மன்னிப்பு கோரியுள்ளார். ஆனாலும் அந்த மன்னிப்பு கோருதலில் அவர் தன்னை நியாயம் கற்பிக்க வந்த விடயமானது முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்றுள்ளது.
அதாவது ரவுப் ஹக்கீம் என்ற நாமம் விடுபட்டு தவறுதலாக அஸ்ரப் என்ற ரீதியில் வழிவகுத்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். போதாதென்று அவருடைய சத்திய தலைவரின் பாணியில் சத்தியமும் செய்துள்ளார்.
ஊடகவியலாளரின் வசைபாடலினை முழுமையாக கேக்கின்றபோது அஸ்ரப் அவர்கள் எந்தவிதத்திலும் தலைவருக்கு தகுதியாக இருந்ததில்லை என்றும், கால்தூசிக்கும் பெறுமதியற்ற அவரை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் அஸ்ரப் ஒரு மோசமானவர் என்பதனால்தான் அவரை இறைவன் மௌத்தாக்கினான் என்றும், அஸ்ரபினால் செய்யப்பட்ட அநியாயங்களில் ஒன்றுதான் ஒலுவிலில் அமைக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழம் என்றும், இதனால் மாணவர்கள் வெளி தொடர்பின்றி இங்கேயே கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்றெல்லாம் இன்னும் பல விடயங்கள் அந்த விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
இங்கே கேள்வி என்னவென்றால் ரவுப் ஹக்கீமுக்கு பதிலாக தவறுதலாக பெயர் உச்சரிக்கப்பட்டது என்றால் மேலே கூறப்பட்ட விடயங்கள் உயிருடன் இருக்கின்ற ரவுப் ஹக்கீமுடன் எந்தவகையில் தொடர்புபடும் ?
எனவே தனது தலைவர் அடிக்கடி பொய்ச்சத்தியம் கூறுவதுபோன்று அவரது சீடரும் தலைவர் பாணியில் பொய்ச்சத்தியம் கூறியுள்ளார். இதன்மூலம் தலைவரின் உண்மையான சீடராக குறித்த ஊடகவியலாளர் தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.