தலவாக்கலை பி.கேதீஸ்-
தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தோட்ட தோட்ட வைத்திய அதிகாரி மற்றும் தோட்ட மருத்துவச்சி ஆகியோரின் அலட்சிய போக்கை கண்டித்தும் அத்தோட்டத்தில் சுகாதார சேவையை மேம்படுத்த வலியுறுத்தியும் அத்தோட்டத்தைச் சேர்ந்த 300 க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்துக்கெதிராக 8.1.2018 திங்கட்கிழமை காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருகையில் ஹேலீஸ் கம்பனியின் கீழ் இயங்கும் ஹொலிரூட் கீழ்பிரிவு தோட்டத்தில் (சந்திரசேகரபுரம்) கர்ப்பிணி பெண்ணொருவர் பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ள சம்பவமொன்று கடந்த வாரம் 3.1.2018 புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.குறித்த பெண் இரட்டைச் சிசுக்களைச் சுமந்திருந்த 8 மாதக் கர்ப்பிணி தனது பிரசவத்துக்கான பிரசவ வலி ஏற்பட்டவேளை உறவினர்களால் தோட்ட நிர்வாகத்தின் உதவியோடு தோட்ட அம்புலன்ஸ் வண்டியில் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு வழியில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இவரோடு இவரின் வயிற்றிலிருந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. உரிய நேரத்தில் மருத்துவச்சி மற்றும் தோட்ட வைத்திய அதிகாரிக்கு அறிவித்தும் அவர்கள் அவ்விடத்திற்கு உரிய நேரத்தில் வந்து சிகிச்சை அழிக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். சரியான தருணத்தில் சிகிச்சை வழங்கப்படாமையினால்இவர் உயிரிழந்திருப்பதாக அத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தோட்டத்தில் சுகாதார சேவையை மேம்படுத்த கோரியும் தோட்ட வைத்திய அதிகாரி மற்றும் மருத்துவச்சி ஆகியோரை உடனடியாக இடமாற்றம் கோரியும் ஹொலிரூட் தோட்ட நான்கு பிரிவுகளையும் சேர்ந்த 300 க்கு மேற்ப்பட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட தொழிற்ச்சாலை முன்பாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த தோட்ட அதிகாரி மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் இது தொடர்பாக இன்னும் 8 நாட்களில் உரிய தீர்வினை பெற்று தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
