அகமட் எஸ். முகைடீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள கல்முனை ரெஸ்ட் ஹவுஸ் கடற்கரை பூங்கா அமைவிடத்தை பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையிலான கட்டடக்கலை நிபுணர் குழு நேற்று (27) சனிக்கிழமை நேரடி விஜயம் செய்து பார்வையிட்டது.
இந்நேரடி விஜயத்தின்போது கட்டடக்கலை வடிவமைப்பு நிபுணர் சேனக்க, தொழில்நுட்ப நிபுணர் வித்தியாரத்ன, கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ரி. சர்வானந்தா, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அல்தாப் ஹூசைன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது ரெஸ்ட் ஹவுஸ் கடற்கரை பூங்கா அவிவிருத்தியில் உள்ளடக்கப்பட வேண்டியவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அவற்றை உள்ளடக்கியதான பட வரைபு குறித்த கட்டடக்கலை நிபுணர் குழுவினால் மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்தகாலங்களில் சகல சமூகத்தினரும் பொழுதுபோக்கும் ஒரு இடமாக காணப்பட்ட ரெஸ்ட் ஹவுஸ் கடற்கரை பிரதேசத்தில் அமையப்பெறவுள்ள குறித்த கடற்கரை பூங்கா அபிவிருத்தியினால் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை மேலும் வலுப்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.