
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
சபீக் இஸ்மாயிலின் கருத்து :-
உண்மையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் மக்களுக்கு சில அதிருப்திகளும் இருக்கத்தான் செய்தது. அவைகளை நாங்கள் இப்பொழுது பேச வேண்டிய தேவை இல்லை என நினைக்கின்றேன். இருந்தாலும் ஒரு கட்சியிலே அதிருப்திகள் வருவதானது வீட்டுக்குள்ளே பிரச்சனைகள் வருவதை போன்ற விடயமாகும். வீட்டுக்குள் வருக்கின்ற பிரச்சனைகளை வீட்டுக்குள்ளே இருந்துதான் நிவர்த்தி செய்ய வேண்டும். மாறாக வீட்டை விட்டு வெளியேறி விட்டு வீட்டுக்குள்ளே பிரச்சனைகள் இருக்கின்றன என கதைப்பவர்கள் வீட்டுக்குள்ளே இருப்பதற்கு தகுதி அற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
என்ற கருத்தினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக தலைவர் அஸ்- ஸஹீத் எம்.எச்.எம்.அஸ்ரஃபினுடைய சொந்த இடமாவும், அவருடைய தேர்தல் வட்டாரமாகவும் கருதப்படுகின்ற சம்மாந்துறை ஆறாம் வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானை சின்னத்தில் களமிறக்கப்பட்டுள்ள இளம் மக்கள் செல்வாக்குள்ள புது முக வேட்பாளர் சபீக் இஸ்மாயில் மேற் கண்டவாறு அவருடனான நேர்காணலின் பொழுது தெரிவித்தார்.
பொதுவாக சம்மாந்துறை ஆறாம் வட்டாரமானது படித்தவர்கள், அரசாங்க ஊழியர்கள், கல்விமான்கள், சமூக சிந்தனையாளர்கள் என சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற முக்கிய புள்ளிகள் வாழுகின்ற இடமாகும். அந்த இடத்தில் களமிறங்கியுள்ள புது முக வேட்பாளர் சபீக் இஸ்மாயிலின் தேர்தல் காரியாலயமானது நேற்று 13.01.2018 சனிக்கிழமை மாலை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வோடு திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த பெரும் எண்ணிக்கையான ஆதரவாளர்களை பார்க்கின்ற பொழுது ஏற்கனவே சபீக் இஸ்மாயிலுடைய வெற்றியானது உறுதிப்படுத்தப்பட்ட வெற்றியாகவே எல்லோராலும் பேசப்பட்ட ஒரு விடயமாக காணப்பட்டது.
மேலும் சபீக் இஸ்மாயில் அரசியலில் புது முகம் என்றாலும் அவருடைய தந்தையார் இஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரஃபுடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சிக்காக முக்கிய பங்காற்றியவராவார். அந்த வகையில் தந்தையின் ஆசீர் வாதத்துடனும் அவருடைய அரசியல் அனுபவத்தினை கண் கூடாக பார்த்தவர் என்ற அடிப்படையிலும் அரசியலில் புது முகம் என்பதற்கு அப்பால் பிரதேச நலன்களை முன்னிறுத்தி செயற்பட தன்னை அர்பணித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
அத்தோடு மனித உரிமை அம்பாறை மாவட்ட இணைப்பாளராகவும், லயன்ஸ் கழக உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ள சபீக் இஸ்மாயில் சமூக மன்றங்களின் உறுப்பினராகவும் இருந்து பல்வேறு வழிகளில் சமூகத்திற்கு நற்பணியாற்றியுள்ளார். அதனால் பிரதேச நலன்களை முன்னிறுத்தி செயற்பட தன்னால் முடியும் என ஆணித்தரமாக கூறுகின்றார். இதற்கு மக்கள் ஆதரவினையும், ஒத்துளைப்பினையும் வேண்டி நிற்கும் அவர் தன்னை முழுமையாக அரசியல் செயற்பாட்டாளானாக சமூகத்திற்கு அர்ப்பணித்துள்ளதாகவும் கூறுகின்றார்.
புது முக வேட்பாளர் சபீக் இஸ்மாயிலின் தேர்தல் காரியாலய திறப்பு நிகழ்வோடு அவர் வழங்கிய நேர்காணலின் விரிவான பதில்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.