காரைதீவு மகாசபையை கேவலம் வாக்கிற்காக அவமதிப்பது என்பது முழுக்காரைதீவையும் அவமதிப்பதற்கு ஒப்பானதாகும்!



மறுக்கிறார் முன்னாள் மகாசபைத்தலைவரும் வேட்பாளருமான சி.நந்தேஸ்வரன் !


காரைதீவு நிருபர் சகா-

காரைதீவு மகாசபையை வெறும் தேர்தல் வாக்கு வேட்டைக்காக அவமதிப்பதென்பது கயமைத்தனமாகும். அவ்வாறு அவமதிப்பது முழுக்காரைதீவு மண்ணையும் அவமதிப்பதற்கு சமனானதாகும்.
இவ்வாறு காரைதீவு மகாசபையின் முன்னாள் தலைவரும் காரைதீவுப்பிரதேசசபைக்கு சுயேச்சைக்குழு 1 இன்சார்பில் 3ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருமான சின்னத்துரை நந்தேஸ்வரன் தெரிவித்தார்.

முன்னாள் தவிசாளர் செ.இராசையா நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்குமுகமாக அவர் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காரைதீவு மகாசபையின் தோற்றமும், அதன் செயல்வடிவமும் காரைதீவு மக்கள் நன்கு உணர்வார்கள். முன்னாள் தவிசாளரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஊர் ஒற்றுமைக்காக விட்டுக்கொடுப்பேன் என்று கூறிவிட்டு தான் வேட்பாளராக வரமுடியாத காழ்ப்புணர்ச்சியில் வரைமுறையற்ற விதத்தில் மகாசபையை மண்குதிரை என்று விமர்ச்சிக்கத்தலைப்பட்டுள்ளார்.

இவர்கூறும் மண்குதிரையின் தற்போதைய தலைவர் ஒரு நிலஅளவை அத்தியட்சகர் செயலாளர் ஒரு பட்டதாரி நிலஅளவையாளர் பொருளாளர் ஒரு வங்கி முகாமையாளர். இவ்வாறு அனைவரும் படித்த பண்பானவர்கள் சமுதாயத்தில் அவரைவிட மேல்நிலையில் நல்ல உத்தியோகத்திலுள்ளவர்கள். அந்தப்பொறாமையினால் தானும் அதில் இல்லையேயென்ற காழ்ப்புணர்ச்சியினால் வசை மாரி பொழிய தலைப்பட்டுள்ளார். அவரை இந்த ஊர்மக்கள் நன்றாக அறிவார்கள்.
எவ்வளவோ சாதனைகளும், அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய காரைதீவு மண்ணிலே கேவலம் விபுலானந்த சதுக்கத்தில் மக்களால் மேற்கொள்ளப்பட்ட விபுலானந்தர் சிலை நிர்மாணிப்பை தான் செய்ததாக ஒருவர் கூறி, அரசியல் பிழைப்பு நடத்துகிறார். இச்செய்தியைக் கேட்டு எமது மக்கள் இன்று அங்கலாய்த்து நிற்கின்றனர். இச்சிலை நிர்மாணிப்பிற்காக ஓடி ஓடி உழைத்த இந்துசமய விருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆலயம் சார்ந்த தொண்டர்கள் மற்றும் பற்றாளர்கள் அதுதவிர இதற்காக நிதியுதவி வழங்கிய ஊர்ப்பற்றாளர்கள் இன்று கேள்வியெழுப்பியுள்ளனர். இதில் சிறியதொரு பங்களிப்பை மாத்திரம் வழங்கி முடியாது என்று ஒதுங்கியவர் இன்று இதனை நான்தான் செய்தேன் என்று கூறித் திரிகிறார்.

காரைதீவு பிரதேச சபையின் பொற்காலத்தில் நடந்தது மக்களுக்குத் தெரியும். சபை இடைநடுவே கலைக்கப்பட்டது. இதனால் எமது ஊரின் மானத்தை கப்பல் ஏற்றினார்கள். காரைதீவான் ஒரு சபையைக்கூட ஒற்றுமையுடன் ஆள திரணியற்றவன் என விமர்சிக்கப்பட்டான். இதனை ஒழுங்கமைப்பதற்கென வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் ஊர் பொதுமக்களை ஏன் கூட்டவில்லை, ஊர்ப் பொதுக்கூட்டம் கூடி அதனூடாக தேர்தலில் எமது மக்கள் இறங்கித்தான் இவர்களுக்குப் பதவி வழங்கினோம். இப்பதவி சம்பந்தமான முடிவெடுக்கும் தகுதி காரைதீவு மக்களுக்கே உரிமை உடையது. இது சரியாக செய்யாமல் கல்முனை எஸ்.எல்.ஆர் கட்டிடத்தில் காரைதீவின் சபை சம்பந்தமான முடிவை எடுப்பதை காரைதீவான் ஏற்கவேண்டும். 

சில தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தம்பிமார்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்காதீர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள்தான் பிழைவிட்டார்கள் அவர்களை விமர்சியுங்கள் என்று கூறுகின்றனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நாங்கள் விமர்சிக்கவில்லை. நாங்கள் தாய்க்கட்சிக்கு எதிரானவர்களுமல்ல. மாறாக காரைதீவு மண்ணும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் என்ற அடிப்படையில்தான் சில கேள்விகளை முன்வைக்கின்றேன்.
காரைதீவு மண்ணை சம்மாந்துறை தேர்தல் தொகுதியுடன் இணைப்பதற்கு யாரைக் கேட்டிருக்க வேண்டும். எமது மண் சார்ந்த மக்களின் ஆலோசனைகள் கேட்கப்படாமல் இதை செய்தது சரியானதா?

காரைதீவு மண்ணில் பிரதேசசபை தோற்கடிக்கப்பட்டால் வாக்களித்த மக்கள் முன்தான் முடிவெடுக்கப்பட வேண்டும். அப்படி நடந்திருந்தால் இவர்களில் யார் ஊழல் செய்தவர் என்பது மக்களுக்கு வெளிவந்திருக்கும்.
காரைதீவு மண்ணில் இறுதி நேரத்தில் கூட்டமைப்பினர் வேட்பாளர்கள் போட்ட விதம் சரியானதா? இதில் தமிழரசுக்கட்சியில் உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். தமிழ்மக்கள் விடுதலைக் கழகம் (புடொப்) சார்ந்தவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

இன்னுமொரு வேடிக்கைதான் எந்த வட்டாரத்தில் எந்த பட்டியலில் வேட்பாளராகிறோம் என்று தெரியாமல் இருவர் கையெழுத்திட்டுள்ளனர். அவர்கள் உண்மை தெரியவந்தபின் நான்கைந்து நாட்கள் கூட்டமைப்பிற்கு எதிராகப் பேசித் திரிந்து சண்டையிட்டதும், பின்னர் அவர்கள் வீடுகளுக்கு வந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஏதோ ஒரு வகையில் சமாதானம் செய்து மீண்டும் களம் இறக்கி இருப்பதுவும் ஊர்மக்கள் நன்கு அறிவார்கள். இதற்கு மேலாக தற்போதுள்ள காரைதீவு தமிழ்த் தேசியக்கட்சியின் தலைமை வேட்பாளர் ஊர்முடிவுக்கு கட்டுப்பட்டு சுயேட்சையில் களமிறங்குவதற்கு வந்து, தெரிவில் இடம்பெறாததால் கூட்டமைப்பை நாடிச்சென்றார் என்பதுவும் மறுக்க முடியாத உண்மை. இதில் கட்சிக் கொள்கை ஏதும் தலையிடவில்லையா? காரைதீவு மண்ணில் கூட்டமைப்பினரால் இன்று அளவிற்கதிகமாக பணம் செலவு செய்யப்படுவதற்கு காரணம் என்ன? சுயேட்சைக்குழு மூலமாக தட்டிக்கேட்கும் வல்லமையுள்ளவர்கள் தேர்வுசெய்யப்பட்டால் நினைத்த நினைத்த மாதிரி காரைதீவு மண்ணில் அரசியல் நகர்வு செய்யமுடியாது என்பதாலா அல்லது ஆலையடிவேம்பு, சம்மாந்துறை இரண்டு இடங்களில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் அதன் தாக்கத்தை காரைதீவு மண் மூலமாக நிவர்த்தி செய்துவிட வேண்டுமென்ற முயற்சியா?

காரைதீவின் மற்றுமொரு கட்சி தலைமை வேட்பாளர் கூறுகின்றார். நாங்கள் இனத் துவேசத்தை வளர்த்து வாக்குவேட்டை நடத்துகிறோம் என்று காரைதீவு தமிழ் மக்கள் வாக்களித்துத்தான் நாங்கள் தெரிவுசெய்யப்பட முடியும் எனும் நிலையில் காரைதீவின் தமிழ்வாக்குகளால் முஸ்லிம் இனத்தைச் சார்ந்த ஒருவர் தெரிவுசெய்யப்பட வாய்ப்பு உள்ளது என தமிழர்களிடம் பிரச்சாரம் செய்வது எப்படி இனத்துவேசமாகும். ஐயாவிற்குத் தெரியாது போலும் வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடுமென்றும், வாழைச்சேனையில் காளிகோயில் இருந்த இடத்தில்தான் பள்ளிவாசல் கட்டினேன் என்று ஒரு முஸ்லிம் அமைச்சர் கூறியிருப்பதுவும்.

ஐயா, காரைதீவில் வாழும் தமிழர்களின் இருப்பு எமது சமய பண்பாடுகள் சிதறடிக்கப்படாமல் பாதுகாப்பதுவும், எங்கள் இனத்தவன் அடிமைப்பட்டால், தானே தனித்து நின்று சுயதொழில்களின் வாயிலாக தன்மானத்துடன் வாழவேண்டும். எமது இளைஞர், யுவதிகள் சுய கௌரவத்துடன் வாழவேண்டும் என்றும், தமிழனாகப் பிறந்த நான், தமிழனுக்காகப் பேசுவதற்கு சகல உரிமையும் உண்டு, சில முன்னெடுப்புக்களின் போது சகோதர இனத்தவர்கள் கூட இவ்வாறான விடயங்களை நீங்கள் செய்யத் தவறிவிட்டீர்கள் என்றுதான் ஆலோசனை கூறினார்கள்.
காரைதீவு மக்களின் ஏகோபித்த ஆணைக்கு கட்டுப்பட்டு சுயேட்சையில் போட்டியிடுகிறோம். கூட்டமைப்பு எங்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மகாசபையால் தெரிவானவர்களை கூட்டமைப்பில் போட்டிருந்தால் எங்களை ஊர்த் தீர்மானத்திற்கு எதிரானவர்கள், துரோகிகள் என்று விமர்சித்திருப்பார்கள். இன்று மாறுபட்டு தெரிவில் பிழையென்றும் எம்மை முடக்க முயல்கின்றனர். காரைதீவான் கல்வியில் சிறந்தவன், நிச்சயம் சிந்திப்பான் எமக்குப் பெருகி வரும் ஆதரவை தடுப்பதற்காக பல முன்னெடுப்புக்கள் பல கட்சியினராலும் எடுக்கப்படுகிறது.
காரைதீவான் என்பதைப் பிழையாகப் பிரித்து தமிழ்வார்த்தையையும் கொச்சைப்படுத்தியுள்ளனர். எமது மரபுப்படி காரைதீவு மண்ணில் வெளி ஊரார் ஒருவர் திருமணம் முடித்திருந்தால் அவர் காரைதீவு மண்ணுக்குரியவர் காரைதீவான், மண்ணின் மைந்தன்தான் அவர். காரைதீவு மக்களால் அவரின் திறமையைக் கொண்டு உயர்த்தி வைத்துப் பார்க்கப்படுவார். அதற்கு உதாரணம், காரைதீவின் முன்னை நாள் உபதவிசாளராக இருந்த யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வீ.கிருஷ்ணமூர்த்தி அண்ணன் அவர்கள். இவர் போல் எத்தனையோ பேரை உதாரணமாகக் கொள்ளலாம்.

எமது மரபின்படி எமது மண்ணில் பிறந்தவரும் சரி, எமது மண்ணில் வாழ வந்தவரும் சரி இறுதியில் இந்த மண்ணில்தான் இறுதியாக உறங்க வேண்டும். எம் மண்ணின் விதிமுறை அதுவே. அன்பார்ந்த உறவுகளே கடந்த காலங்களைப் போல் சரிவுத் தன்மையான போக்கு, சோரம் போதல், சரியாக செயற்படாமை, மக்களிடம் ஆலோசனை பெறாமை, நழுவல் போக்குகள். நாங்கள் இழந்தவைகள் போதும் இனியாவது சரியானதொரு தீர்மானத்தின் கீழ் எமது மண்ணைக் கட்டியெழுப்ப, எமது மண்ணின் இளைஞர் யுவதிகளைப் பாதுகாத்து சரியான பாதையில் செப்பனிடவும், நிற வன்முறையற்ற நற்சமூகமாக எமது மண்ணைப் பாதுகாப்பதற்கும் சரியானதொரு தேர்வை நீங்கள் மேற்கொள்ள வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். எம்மக்கள் ஏமாற்றுப்பட நாம் எப்போதும் இடமளியோம். அதற்காக ஒற்றுமையுடன் தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் எங்களைத் தெரிவுசெய்வதன் மூலம் உங்கள் மண்ணை நீங்கள் காத்துக்கொள்ளுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -