சாய்ந்தமருது மல்ஹார் ஷம்ஸ் மஹா வித்தியாலயத்தில் கல்விகற்று இவ் ஆண்டு கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரிட்சை எழுதும் மாணவர்களின் மஜ்லிஸ் 2017, ஏற்பாடு செய்திருந்த O/L தின நிகழ்வும் சிரேஷ்ட வைத்தியர் வைத்திய கலாநிதி எம்.எச்.கே.ஸனூஸினால் பாடசாலைக்கு போட்டோக் கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வும் மாணவர்களின் கலைநிகழ்வும் அதிபர் எம்.எஸ்.எம்.ஐ.மதனி தலைமையில் 2017-12-04 ஆம் திகதி பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
O/L பிரிவின் பகுதித் தலைவர் எம்.எம்.இல்லியாஸ் மற்றும் உதவி பகுதித் தலைவி திருமதி என்.எம்.அலிபூட்டோ ஆகியோரின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிறுநீரக மாற்று பிரிவின் வைத்தியர், வைத்திய கலாநிதி எம்.எச்.கே.ஸனூஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியலாளர் எம்.ஆர்.எம்.பார்ஹான் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக இலங்கை கல்வி நிர்வாக சேவையில் அண்மையில் இணைந்துகொண்ட என்.எம்.ஏ.மலிக், பிரதி அதிபர் ஏ.எல்.எம்.தன்ஸில் மற்றும் உதவி அதிபர் எம்.எம்.ஹஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவிகளின் கலைநிகழ்வுகள் சபையை மகிழ்விக்க பாடசாலையில் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரத்தில் சிறந்து விளங்கிய ஐந்து மாணவிகள் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் இவ்வாண்டு குறித்த பிரிவில் கற்பித்த ஆசிரிய ஆசிரியைகளும் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
மல்ஹார் ஷம்ஸ் மஹா வித்தியாலயத்தில் கற்பித்து இலங்கை கல்வி நிர்வாக சேவையில் அண்மையில் இணைந்துகொண்ட என்.எம்.ஏ.மலிக் பாடசாலை அதிபர் உள்ளிட்டவர்களால் விசேடமாக பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.