கெஸ்பேவ டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று கடந்த வெள்ளிக்
கிழமை மாணவக் குழுவொன்றினை அழைத்துச் செல்வதற்காக கெஸ்பேவையில் இருந்து வெயான்கொடை பத்தலகெதர வித்யாலோக்க மகா வித்தியாலயம் நோக்கி சென்றுள்ளது. இதன்போது அந்த பஸ்ஸின் சாரதியும் நடத்துநரும், கொழும்பு கண்டி பிரதான வீதியில் அளுத்கம போகமுவ பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன்பாக தேநீர் அருந்துவதற்காக பஸ்ஸை நிறுத்தி விட்டு உணவகம் உள்ளே சென்றுள்ளனர்.
சாரதியும், நடத்துநரும் இவ்வாறு தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது, குறித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை பிறிதொரு நபர் இயக்கி செலுத்துவதை அவ்விருவரும் அவதானித்துள்ளனர். இதனையடுத்து உடன் செயற்பட்டுள்ள சாரதியும் நடத்துநரும் 119 அழைப்பு இலக்கம் ஊடாக பொலிஸாரை தெரியப்படுத்தியுள்ளனர். அத்துடன் தனியார் பஸ் ஒன்றில் கடத்திச் செல்லப்படும் போக்கு வரத்து சபை பஸ்ஸை பின் தொடர்ந்துள்ளனர். எனினும் அந்த பஸ்ஸை அவர்களால் பின் தொடரமுடியாமல் போயுள்ளது.
இந் நிலையில் 119 அழைப்பு இலக்கம் ஊடாக கிடைத்த தகவலுக்கு அமைய நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தின் போக்கு வரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கிங்ஸ்லி ஹேரத் மற்றொரு கான்ஸ்டபிளுடன் மோட்டார் சைக்கிளில் பஸ்ஸை துரத்திச் சென்றுள்ளதுடன் அதனை நிறுத்துமாறு சமிக்ஞை விடுத்துள்ளனர். எனினும் அந்த கடத்திச் செல்லப்பட்ட பஸ் நிறுத்தப்படாமையால் மோட்டார் சைக்கிளை குறுக்காக நிறுத்தி பஸ்ஸை நிறுத்த செய்துள்ளனர். இதனையடுத்து பஸ்ஸை மீட்ட பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். தங்கோவிட்ட பகுதியில் வைத்தே இவ்வாறு பஸ் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் முன்னெடுத்த ஆரம்ப கட்ட விசாரணையின் போது, குடும்பத்தாருடன் சுற்றுலா பயணம் செய்வதற்காக பஸ்ஸை கடத்தியதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சந்தேக நபர் மன நிலை பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபர் பொலிஸ் கூண்டில் இருந்த போதும், புரியாத பாஷைகளால் பேசிக்கொண்டு விசில் அடித்த வண்ணம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் பஸ் வண்டி கடத்தப்பட்ட பிரதேசம் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்டதால் பஸ்ஸும், சந்தேக நபரும் கம்பஹா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
