ஏறாவூர்ப் பிரதேசத்தில் டெங்கு பரவும் இடங்களை பரிசோதனை செய்யும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு ஒத்துழைப்பாகச் செயற்பட்டுவந்த நகர சபை ஊழியர்கள் அனைவரும் மீள அழைத்துக்கொள்ளப்பட்டதையடுத்து பரிசோதனை நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இச்செயற்பாடு தொடர்பாக ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறையீடு செய்துள்ளார்.
ஏறாவூர்ப் பிரதேசத்தில் டெங்கு பரவக்கூடிய இடங்களை பரிசோதனை செய்யும் பணிகளில் ஈடுபடும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு ஒத்துழைப்பாக நகர சபையின் ஊழியர்கள் ஐந்து பேர் கடந்த இரண்டு வருடகாலமாக செயற்பட்டுவந்தனர்.
ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளரது உத்தரவிற்கிணங்க இந்த ஊழியர்கள் கடந்தமாதத்தில் வாபஸ் பெறப்பட்டதையடுத்து பரிசோதனைப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது பருவகால மழை ஆரம்பித்துள்ளதனால் ஏறாவூர்ப் பிரசேதத்தில் மீண்டும் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்தகாலத்தில் ஏறாவூர்ப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கானோர் டெங்குக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டதுடன் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சன அடர்த்திமிக்க ஏறாவூர்ப் பிரசேத்தில் கடந்தகாலங்களில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடிக்கடி வீடுவீடாகச் சென்று பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தனர். பொதுச் சுகாதார பரிசோதகர்களது இச்செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பாக நகரசபையின் ஐந்து ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் தற்போது வாபஸ்பெறப்பட்டுள்ளனர். அதேநேரம் டெங்கு பரவும் காலங்களில் மேலதிக ஊழியர்களும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். ஏறாவூர் நகர சபையில் ஊழியர்கள் ஆளணி வெற்றிடத்திற்கு மேலதிகமாக இருப்பதாக அண்மைக்காலத்தில் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் பயன்மிக்க பணிகளில் ஈடுபட்ட ஊழியர்கள் வாபஸ் பெறப்பட்டிருப்பது கவலைக்குரியதாக தெரிவிக்கப்படுகிறது.