முத்தமிழ் வித்தகன் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் வழித்தோன்றல்களால் ஒற்றுமையாகத் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் காரைதீவில் அரசியல் சாயமற்ற தரமான சமுகநோக்குடைய ஊழலற்ற வேட்பாளர்கள் சுயேட்சைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். கண்ணகைத்தாயின் அருளால் அவர்கள் எவ்வித சவாலுமின்றி மக்கள்சக்தியால் வெற்றிபெறுவார்கள்.
இவ்வாறு காரைதீவு மகாசபையின் தலைவரும் நிலஅளவை அத்தியட்சகருமான கே.தட்சணாமூர்த்தி தெரிவித்தார்.
மக்களுடைய மேலான கணிப்பில் வேட்பாளர் ஸ்தானத்தைத் தவறவிட்ட ஒருசிலரால் சுயேச்சை அணி மற்றும் மகாசபை பற்றி தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதை முன்னிட்டு இத்தகவலை அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
நீண்டகாலமாக காரைதீவில் ஊர்க்கட்டுப்பாடு தலைமைத்துவமின்றி இயங்கிவந்ததை சுட்டிக்காட்டி ஊர் புத்திஜீவிகளும் ஊரில் பிறந்த மண் பற்றாளர்களும் மகாசபையொன்றின் முக்கியத்துவத்தை தெரிவித்தன் காரணமாக காரைதீவு அறங்காவலர் ஒன்றியம் அதன் செயலாளர் சி.நந்தேஸ்வரன் தலைமையில் விபுலானந்த மணிமண்டபத்தில் தொடர்ந்து 3 தினங்கள் ஊர்ப்பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி கலந்துரையாடினர்.
அவற்றில் பங்கேற்ற அரசியல்கட்சிப்பிரமுகர்கள் ஊர்த்தீர்மானப்படி ஒரு அணியில் போட்டியிடுவதானால் நாமனைவரும் அதற்கு கட்டுப்படுவோம் எனப் பகிரங்கமாகத் தெரிவித்தனர்.
கட்சியா? காரைதீவா? என்றால் நாம் காரைதீவு என்ற அணியில்தான் நிற்போம் என உறுதியாக கூறினர்.அதாவது சுயேச்சiயாகப் போட்டியிட்டு ஊர்த்தனித்துவத்தைப் பாதுகாப்பது என்று முடிவானது.
பின்பு ஒருநாள் விட்டு ஊர்பூராக ஒலிபெருக்கிமூலம் அறிவிப்புச்செய்து பொதுக்கூட்டமொன்று நடாத்தப்பட்டது.
அங்கு ஊர்மக்களின் ஏகோபித்த தீர்மானப்படி மகாசபையொன்றும் தெரிவானது.தலைவராக சி.நந்தேஸ்வரன் ஏகமனதாக தெரிவானார். அதனை 50 அல்லது 60 பேர்கொண்ட சகல அமைப்புகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய சபையாக மாற்றுவதெனவும் தீர்மானமாகியது.
காரைதீவின் சமுக பொருளாதார பாதுகாப்பு அரசியல் விடயங்களில் கவனம் செலுத்துவதென்றும் தற்போது தேர்தல் காலமாகையால் ஊரின் இருப்பைத் தக்கவைக்க அதிலும் கவனம் செலுத்தவேண்டுnமென தீர்மானிக்கப்பட்டது.
அதன்பிறகு பொதுக்கூட்டமொன்றைக்கூடி சுயேச்சையில் களமிறங்க தீர்மானித்தபோது 3பேரைத்தவிர ஏனையோர் பச்சைக்கொடி காட்டினர்.
அதன்போது பல கருத்துகளும் பரிமாறப்பட்டன. பழைய அரசியல்வாதிகள் முன்பிருந்த பிரதேசபை உறுப்பினர்கள் போட்டியிடக்கூடாது என்றும் மகாசபையில் வருவோர் போட்டியிடக்கூடாதென்றும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.ஆனால் அவை தீர்மானமாக எடுக்கப்படவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் சமுகமளித்து நாங்கள் (கூட்டமைப்பினர்) கட்டாயம் போட்டியிடுவோமெனக்கூறி எமது கருத்துக்களைச் செவிமடுக்காமல் சென்றார்.
ஊர்த்தீர்மானத்தை மதிக்காமல் அவர் அப்படி நடந்துகொண்டதால் எமது சுயேச்சை அணிக்கான வேட்பாளர் வியூகத்தை மிகவும் தந்திரோபாயமாக ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவகையில் தரமானதாக மாற்றியமைக்கவிரும்பி கூட்டத்தைக் கூட்டினோம்.
அதன் பலனாக மகாசபைத்தலைவராகவிருந்த சி.நந்தேஸ்வரனை 3ஆம் வட்டாரத்தில் போட்டியிடுமாறு சபையோர் ஏகோபித்து வலுகட்டாயமாக வேண்டிக்கொண்டதன் பிரகாரம் அவர் அப்பதவியைத்துறந்து வேட்பாளரானார். ஏலவே ஆ.பூபாலரெத்தினம் சி.நந்தகுமார் ஆகியோர் இவ்விதம் தமது உறுப்பினர் பதவியை இராஜினாமாச்செய்துதான் வேட்பாளராக போட்டியிட முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிந்ததும் மகாசபைக்கென நிரந்தரமானதொரு தலைவர் தெரிவுசெய்யப்படுவார்.
பொதுக்கூட்டத்தின் பிரகாரம் மகாசபை கூடி சுயேச்சை அணிக்கான வேட்பாளர்களை மிகவும் நேர்த்தியான முறையில் சகலஅமைப்பகளினதும் 60 பிரதிநிதிகள் வாக்களித்து பகிரங்கமாக வேட்பாளர்கள் தெரிவானார்கள்.
எம்மிடம் சம்மதக்கடிதம் தந்து சமுகமளித்தவர்கள் மத்தியிலே குட்டித்தேர்தல் முறைமூலம் பகிரங்கமாக அமைதியானமுறையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கமுறையில் தெரிவுகள் இடம்பெற்றன. யாருமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
அதற்காக போட்டியிட்ட அனைவருமே வேட்பாளராக முடியாதென்பதை நாமறிவோம். எனவே தெரிவான சமுகநோக்குடைய காரைதீவுமைந்தர்களுக்கு எமது முழு ஆதரவையும் வழங்கி எமது ஊர் ஒற்றுமையை முன்னுதாரணத்தை உலகிற்கு அறியச்செய்வோம்.
இந்த வேட்பாளர்கள் அனைவரும் பொதுச்சேவைகளில் தடம்பதித்தவர்கள். ஊர்ப்பிறந்தவர்கள்.ஏலவே தேசியத்திற்காக அரசியலில் ஆதரவளித்தவர்கள்.
எவ்வித ஊழலுமற்ற நேர்மையானவர்கள். தரமானவர்கள். இளந்தலைமுறையினர் பொருத்தமானவர்கள்.
இவர்களை 100வீதம் வெற்றியடையச்செய்வதுதான் காரைதீவார்களுடைய தார்மீக கடமை.விபுலபுரி மண் மைந்தர்களின் தனித்துவம் உலகெங்கும் பறைசாற்றப்படவேண்டும். இதற்கு அனைவரும் பூரண ஒற்றுமையோடு செயற்படுவார்கள் என்பது எமது நம்பிக்கை.
இதனை த.தே.கூட்டமைப்போ அல்லது எந்த ஒரு கட்சியோ வேறெந்த சுயேச்சையோ மீறாது என்பது எமதூர் மக்களின் கருத்து. அதனை மீறி யாராவது தேர்தலில் நிற்கமுனைந்தால் ஊர்ஒற்றுமையை குழப்பியவர்கள் துரோகிகள் என்ற வரலாற்றுப்பழியைச் சுமக்கவேண்டிவரும். இன்று த.தே.கூட்டமைப்பிற்குள் இடம்பெற்றுவரும் உரிமையல்லாத பதவிவேட்கைப்போரை அறிந்திருப்பீர்கள்.
ஆனால் எந்தவொரு கட்சியும் அத்தகைய ஈனச்செயலில் ஈடுபடாதென்பது காரைதீவு மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையாகும். கல்வியும் வீரமும் போற்றப்பட்ட காரையூர்மண்ணில் பிறந்த எவரும் அத்தகைய துரோகச்செயலில் ஈடுபடமாட்டார்கள் என்றார்.
