





ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-நிந்தவூர் பிரதேச சபையினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும், சிறந்த வாசிப்பாளர்களையும் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நிந்தவூர் அமீர் மேர்சா பொது நூலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச சபைச் செயலாளர் ஏ.ஏ.சலீம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அம்பாரைப் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபீ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.ஆர்.யூ.அப்துல் ஜலீல், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பி.மௌலானா, நிந்தவூர் மக்கள் வங்கி முகாமையாளர் பீ.நசுறுதீன், ஓய்வு நிலை அதிபர்களான எம்.எம்.றஹீம், ஏ.லாபீர் உள்ளிட்ட கல்விமான்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதே வேளை பொது நூலகத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தவறாது பயன்படுத்திய வாசகர்கள் மூவருக்குப் பொன்னாடைகள் போற்றி, நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இன்னும் தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்ற நிந்தவூர் அமீர் மேர்சா பொது நூலகத்தின் நூலகர் திருமதி.யூ.எஸ்.சபீக் அஹமட் அவர்களும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.
பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபீ இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'பாடசாலை மாணவர்கள் நன்மை பெறவேண்டும் என்ற நன்நோக்கில் தற்போது எமது அரசாங்கம் நூலகங்களில் அதிகளவான பணத்தினைச் செலவு செய்து, மாணவர்களின் கல்விக்கு உதவக் கூடிய, பெறுமதியான நூல்களைக் கொள்வனவு செய்து வைக்க உதவி வருகிறது. எனவே மாணவர்கள் தமது பாடப்புத்தகங்களுக்கு மேலதிகமாக நூலகங்களிலுமுள்ள புத்தகங்களையும் பயன்படுத்தி நன்மை பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்' எனத் தெரிவித்தார்.
\




