மத்திய மாகாண விவசாய மற்றும் தமிழ்க்கல்வியமைச்சின் வேலைத்திட்டங்கள் மலையகத்தில் அரசியல் அமைப்பு ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளுக்கு இந்த அமைச்சின் செயலாளரும் அதிகாரிகளுமே பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மத்திய மாகாண விவசாய , தமிழ்க்கல்வியமைச்சின் 2018 ஆம் வருடத்துக்கான வரவு- செலவுத்திட்ட விவாதத்தில் 07.12.2017 கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது :
விவசாய அமைச்சினால் இவ்வருடம் விவசாய உபகரணங்கள் , விதை உருளைக்கிழங்குகள் , கோழிக்குஞ்சுகள் போன்ற பொருட்கள் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டதில் பாராபட்சம் காட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்தப் பொருட்கள் குறிப்பிட்ட தொழிற்சங்கமொன்றின் ஆதரவாளர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். உண்மையில் வறிய நிலைமையிலுள்ள விவசாயிகளுக்கு இந்தப் பொருட்கள் விநியோகிக்கப்படவேண்டும்.
இதற்கு மாறாக 2018 ஆம் வருடமும் பாரபட்சமான முறை இந்த வருடமும் தொடருமானால் குறிப்பிட்ட அமைச்சின் அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டிய நிலைமை ஏற்படும். மேலும் இந்த அமைச்சின் கீழ் செயற்படுகின்ற இந்து கலாசார நடவடிக்கைகளுக்குக் கடந்த வருடம் 2 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதும் மத்திய மாகாணத்திலுள்ள இந்து கோவில்களுக்கு உரிய நிதி வழங்கப்படாமல் சாகித்திய விழாவுக்கு அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அடுத்த வருடம் இந்து கலாசார அமைச்சின் நிதி ஒதுக்கீடுகளின் போது ஏனைய உறுப்பினர்களின் ஆலோசனைகளும் பெறப்பட வேண்டும். குறிப்பிட்ட அமைச்சர் மாத்திரம் தன்வசப்படுத்திக் கொள்ளக் கூடாது.
தோட்ட உட்கடட்டமைப்பு அமைச்சுக்கு 2017 ஆம் ஆண்டை விட 20 மில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு மொத்தமாக 35 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையை வரவேற்கின்றேன். இந்த நிதியை பாதைகளின் அபிவிருத்திக்கு மாத்திரம் ஒதுக்கீடு செய்யாமல் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இந்த ஒதுக்கீடுகள் பெருந்தோட்ட பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள் ஊடாக பகிரப்பட வேண்டும்.
மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சுக்கு இம்முறை 75 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் ஊடாக தமிழ் பாடசாலைகளின் பௌதிக தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
மத்திய மாகாண தமிழ்க்கல்விப் பிரிவைப் பொறுத்த வரையில் இதன் அமைச்சர் இந்தப்பிரிவைத் தமது கட்சி செயற்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றார். பாடசாலை கட்டிடத்திறப்பு விழாவின் போது அரசியல் ரீதியாக செயற்படுகின்றார்.
எம்மை போன்ற மாகாணசபை உறுப்பினர்களைப் பாடசாலைகளுக்கு அழைக்க வேண்டாமென அதிபர்களை நிர்பந்திக்கின்றார். இதற்கு மாறாக செயற்படுகின்ற அதிபர்களுக்கெதிராக அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. அட்டன் கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளரின் செயற்பாடுகள் முற்று முழுதுமாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மத்திய மாகாண தமிழ்க்கல்வியமைச்சரின் அழுத்தத்திற்கேற்ப கல்வி அதிகாரிகள் அரசியல் ரீதியாக செயற்படுவார்களானால் அந்த அதிகாரிகளுக்கெதிராக நாம் செயற்பட வேண்டிய நிலைமை ஏற்படும் .
