அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை ரத்து-துணிச்சலான பாலஸ்தீன்


டிரம்ப் அறிவிப்புக்கு எதிராக காஸாவில் வரையப்பட்டுள்ள படம்
ரமல்லா:
ஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரித்துள்ளதால் அந்நாட்டுடன் இம்மாத இறுதியில் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை பாலஸ்தீன் அரசு ரத்து செய்துள்ளது.

கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம் மதத்தினருக்கு புனித நகராக இருக்கும் ஜெருசலேம் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கூறிவருகிறது. ஆனால், இதை எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றவும் முடிவு செய்துள்ளதாக கூறினார்.

டிரம்ப்பின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்லாது பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், துருக்கி போன்ற ஐரோப்பிய நாடுகளும், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற ஆசிய நாடுகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்த அமைதியை குலைக்கும் அறிவிப்பு இது என பல்வேறு நாட்டு தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

உலக அளவில் எதிர்ப்பை பெற்றுள்ள இந்த அறிவிப்பு பாலஸ்தீன மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கரை மற்றும் காஸா முனை பகுதியில் நேற்று கலவரம் வெடித்தது. பாலஸ்தீனியர்கள் போராட்டத்தை இஸ்ரேல் ராணுவம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளை கொண்டும் ஒடுக்கியது. இந்த தாக்குதலில் 32 பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.


டிரம்ப் மற்றும் மஹ்மூத் அப்பாஸ் (கோப்பு படம்)

பாலஸ்தீனின் முக்கிய அரசியல் இயக்கமாக இருக்கும் ஹமாஸ், காலவரையற்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக மேற்கு கரை மற்றும் காஸா எல்லைகளில் இஸ்ரேல் ராணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இம்மாத இறுதியில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் பாலஸ்தீன் பிரதமர் மஹ்மூத் அப்பாஸ் சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் அமெரிக்க தலைவர்களை வரவேற்க தயாராக இல்லை என பாலஸ்தீன் அரசு கூறியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க வெளியுறவு துறை, பேச்சுவார்த்தையை ரத்து செய்வது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -