உலகளாவிய ரீதியில் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். மனித வாழ்க்கையில் மன்னிக்கின்ற குணம் மகத்தானது என்பதற்கு யேசுபிரானின் வரலாறு சிறந்த உதாரணம் ஆகும். அவர் தலையில் முள்முடி தரித்து, சவுக்கால் அடித்து துன்புறுத்தி சிலுவையில் அறையப்பட்டபோது மக்கள் கண்ணீர் வடித்து உள்ளம் குமுறினார்கள்.
அவ்வளவு துன்புறுத்தல்களையும் பொறுத்துக் கொண்ட அவர் இறுதி நேரத்தில், “பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இவர்களின் பிழையை மன்னித்தருளும்” என வேண்டிக் கொண்டார். மக்களுக்காக தமது உயிரையே அர்ப்பணித்த யேசுபிரானது இத்தகைய பொறுமையும், மன்னிக்கும் சுபாவமும் ஒவ்வொரு மனிதனும் பின்பற்ற வேண்டிய அரிய குணங்களாகும். நாமும் எம்மைப் பற்றி அனாவசியமாக விமர்சனம் செய்கின்றவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. எம்மால் சமூகத்துக்கு எத்தகைய நல்ல விடயங்களைச் செய்ய முடியுமோ அவற்றைச் செய்து காட்டினால் போதும். அது காலமெல்லாம் நிலைத்திருக்கும்.
சாதாரண மாட்டுத் தொழுவத்தில் பிறந்து உலகம் போற்றும் உத்தமராக வணங்கப்படும் யேசுநாதரின் வரலாறு நமக்கெல்லாம் ஒரு சிறந்த பாடமாகும். நாம் எங்கே பிறந்தோம் என்பது முக்கியல்ல. நாம் பிறந்த இடத்துக்கும் எம்மை வளர்த்த சமூகத்துக்கும் என்ன செய்தோம் என்பதே முக்கியமாகும். அந்த வகையில் மலையக சமூகம் மோசமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, உன்னத நிலையை அடைவதற்கு அனைவரும் ஒன்றுபட்டு பாட்டுபட முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
