ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கள் செய்யும் இறுதி நாட்களிலே கால் எடுத்து வைத்திருக்கின்ற நிலையில் பிரதேசத்தில் முக்கிய கட்சிகளாக இருக்கின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எவ்வாறு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியினை கைப்பற்றலாம் என்ற அரசியல் வியூகங்களை இரகசியமாகவும், பரகசியமாகவும் திட்டங்களை வகுத்து செயற்படுத்திய நிலையில் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் அரசியல் வரலாற்றினை எடுத்து பார்ப்போமானால் இது வரைக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆட்சிக்கு உட்பட்டிராத சபையாகவே இருந்து வருகின்றது. ஆனால் பிரதி அமைச்சர் அமீர் அலியின் தலைமையின் கீழ் இரண்டு தடவைகள் குறித்த பிரதேச சபையானது ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பது பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு ஓட்டமாவடி எதிர் நோக்கியுள்ள பிரதேச சபை தேர்தல் விடயத்தில் நம்பிக்க ஊட்ட கூடிய விடயமாகும்.
இவ்வாறு இருக்க.. ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசமானது ஆமீர் அலியின் கோட்டை என பேசப்படுகின்ற அதே நேரத்தில் கடந்த பாராளுமன்ற தேர்லில் புதுமுக வேட்பாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட தற்போதைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்குடா தொகுதி அமைப்பாளர் கணக்கறிஞர் றியாலுக்கு சுமார் பத்தாயிரம் வாக்குகளை கல்குடா பிரதேச மக்கள் வழங்கியிருந்தமை கடந்த பாராளுமன்ற தேர்தலில் கல்குடாவில் முஸ்லிம் காங்கிரசினுடைய வளர்சியினை எடுத்துக்காட்டிய அதே நேரத்தில் தேசியத்திலே மரச்சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டு ஒரே ஒரு ஆசனத்தினை மட்டக்களப்பில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு அது பெரும் பங்கு வகித்திருந்தது என்பதனை கட்சியின் தலைமையாலோ அல்லது போராளிகளாலோ மறுத்துரைக்க முடியாத விடயமாகவே இருந்து வருக்கின்றது.
கணக்கறிஞர் றியால் பெற்றுக்கொண்ட பத்தாயிரம் வாக்குகளில் மாஞ்சோலை பதுரியா பிரதேசத்தில் இருந்து 90 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மீராவோடை மற்றும் ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் இருந்தும் கூடுதலான வாக்குகள் றியாலுக்கு அளிக்கப்பட்டிருந்தமை அமீர் அலியின் 15 வருட அரசியல் காலத்திற்குள் அவருடைய கோட்டைக்குள் இருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரசின் தலைமை தேர்தல்கள் வந்தவுடன் வேட்பாளர்களை தேடி நிறுத்தி விட்டு அதில் குளிரும் காய்ந்து அனுபவித்த பின்னர் அடுத்த தேர்தலை சந்திக்கும் வரைக்கும் கல்குடா பக்கமே கால் எடுத்து வைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எதிரணியினரால் மட்டுமல்லாது கட்சியின் போராளிகளினாலேயே முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டாக கல்குடா பிரதேசத்தில் இருந்து வருகின்றமை எல்லோரும் அறிந்த விடயமாகும்.
அந்த நிலையில், அதற்கு முற்றுபுள்ளி வைத்தாற் போல் கணக்கறிஞர் றியால் தனது தலைவரின் நகர திட்டமிடல் அமைச்சின் கீழ் 15 கோடி ரூபா நிதியினை கல்குடாவின் அபிவிருத்திக்காக கொண்டு வந்துள்ளமையும், கல்குடாவில் முக்கிய சமூக சுகாதார பிரச்சனையாக காணப்பட்ட தூய குடி நீர் பிரச்சனக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளமையும், கடந்த தேர்தலில் கல்குடா மக்கள் அவரை கெளரவப்படுத்தி அளித்துள்ள சுமார் பாத்தாயிரம் வாக்குகளையும் வைத்து தற்போதைய அரசியல் சூழ் நிலையினை அவதானிக்கின்ற பொழுது ஓட்டமாவடி பிரதேச சபையினை மீண்டும் பிரதி அமைச்சர் அமீர் அலி கைப்பற்றிக்கொள்வதற்கு கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதே உண்மையான விடயமாக உள்ளது.
அது மட்டுமல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் ஒன்றிணைந்து தேர்தலில் குதிப்பதாக முடிவே பரவலாக பிரதேசத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான அப்துர் ரவூப் கிபத்துல் ஹக்கீம் திடீரென முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்தே ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கையினை பிரதமரிடமும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்திலும் முன்வைத்துள்ளதாகவும், அதுதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் இறுதி முடிவு என்பதிலும் ஒற்றைக்காலில் நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு நிகழ்ந்தால் அகில இலங்கை மக்கள் காங்கிரசானது மயில் சின்னத்திலோ அல்லது வண்ணாத்தி பூச்சியிலோ ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக காணப்படுகின்றது. இதுவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானைச்சின்னத்தில் போட்டியிட்டு ஓட்டமாவடி பிரதேச சபையின் வரலாற்றில் முதல் தடவையாக கைப்பற்றிக்கொள்வதற்கு வழியமைக்கும் என்பதும் இன்னுமொரு முக்கிய விடயமாக எதிர்கொள்ள இருக்கின்ற ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் பார்க்கப்படுகின்றது.
அத்தோடு கல்குடா அரசியலினை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக காணப்பட்ட ஓட்டமாவடி முஹைதீன் ஜும்மா பள்ளிவாயலின் நிருவாக சபையானது 15 வருடங்களுக்கு பிற்பாடு ஜனநாயக ரீதியில் தேர்தல் நடாத்தப்பட்டு புதிய நடு நிலையான நிருவாக சபையிடம் கையளிக்கப்பட்டிருப்பதானது கல்குடாவின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகளில் முஸ்லிம் காங்கிரசினது வெற்றிக்கும், கணக்கறிஞர் றியாலினுடைய அரசியல் காய் நகர்தல்களுக்கும் மறைமுகமாக கிடைத்துள்ள வெற்றி என்பதோடு, அது நிச்சயமாக நடவிருக்கின்ற ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலில் கணக்கறிஞர் றியாலினுடைய பக்கத்திற்கு பாரிய உந்து சக்தியாக அமையும் என்பதில் ஓட்டமாவடி பிரதேசத்தில் பிறந்த எவரிடமும் மாற்றுக்கருத்திருக்காது என்பதே உண்மை.
அந்த வகையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் சுமார் பத்தாயிரம் வாக்குகளை பெற்றுள்ள கணக்கறிஞர் றியால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரதி அமைச்சர் அமீர் அலியின் பக்கம் இணைந்து கொண்ட முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட்டின் சொந்த வட்டாரமான மீராவோடை கிழக்கில் நடக்கவிருக்கின்ற பிரதேச சபை தேர்தலில் களமிறங்கி ஹமீட்டா அல்லது றியாலா என்பதனை நிரூபிப்பார் என்ற பரவலான பேச்சு ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு நெய்யில் பலகாரம் சுடும் மகிழ்ச்சி கரமான விடயமாக மாறியுள்ளது.
ஆகவேதான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கணக்கறிஞர் றியால் பெற்ற பத்தாயிரம் வாக்குகளும் ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியினை கைப்பற்ற உதவுமா என்ற சந்தேகத்தினையும் மாற்ரமையும் அரசியல் நிலமைகளையும் வைத்தே ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஆதரவாளர்களாலும் றியாலினுடைய ஆதரவாளர்களாலும் விடையினை தேடிக்கொண்ட்ருக்கின்ற கேள்வியாக மாறியுள்ளது.
