ஐ. ஏ. காதிர் கான்-
தேசிய உணவு உற்பத்தி புரட்சி செயற்திட்டத்தின் கீழ், மினுவாங்கொடை கல்விப் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான மரம் நடும் வைபவம், மினுவாங்கொடை - புருல்லப்பிட்டிய மகா வித்தியாலயத்தில், அண்மையில் இடம்பெற்றது. "சூழல் நேயமிக்க நஞ்சற்ற இயற்கைப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வோம்" எனும் தொனிப்பொருளில், நஞ்சற்ற நாட்டினைக் கட்டியெழுப்பும் நோக்கில், இந்த மரம் நடும் செயற்திட்டம், மினுவாங்கொடை வலயக் கல்விக் காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெளத்த, இஸ்லாமிய, கத்தோலிக்க, இந்து மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பெரும்பாலான மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டிவைத்தனர். வித்தியாலய அதிபர் டி. ஷீலா சுபசிங்க தலைமையில் இடம்பெற்ற இச்செயற்திட்டத்தில், மினுவாங்கொடை கல்விப்பிரிவுப் பணிப்பாளர் ஷோபா வீரவர்தன, பாடசாலை அதிபர், 7 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி பாத்திமா ரம்லா காதிர் கான் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டிவைத்து, மரம் நடும் செயற்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.
