ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
அம்பாரை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச சபைக்குட்பட்ட கரவாகு வயல் பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் கப்பல்ல பாலம் எனுமிடத்தில் இனந்தெரியாத ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சடலம் பல நாட்கள் ஆற்று நீரில் அமிழ்ந்திருந்து நேற்று(09) மீட்கப்பட்ட நிலையில் உடலின் சில பாகங்கள் அழுகியதாகக் காணப்படுகிறது. சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண்மகன். சடலத்தின் நாக்கு வெளியே தள்ளிய நிலையில் உடல் ஊதிப்பெருத்துக் காணப்படுகிறது. கறுப்பு நிற பொட்டன் எனும் காற்சட்டையும், வெள்ளை நிற சேட்டும் அணிந்த நிலையில் சடலத்தின் இடது கையில் இரண்டு காப்புக்கள் அணிந்து காணப்படுகிறது.
இச்சடலம் இவ்விடத்திற்கு எவ்வாறு வந்தது?, இது கொலையா? தற்கொலையா? கழுத்து நெரித்துக் கொன்று விட்டுப் பின்னர் ஆற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளதா? அல்லது வலிப்பு நோயுள்ளவரா? அல்லது வேறு எங்கோ உள்ள சடலம் ஆற்று நீரில் அடிபட்டு வந்துள்ளதா? போன்ற பல்வேறு சந்தேகங்கள் இதன்மேல் தோன்றுகிறது. இனங்கண்டு சடலத்திற்கு உரிமை கோருவதற்கு எவரும் முன்வராத காரணத்தால் எந்த இனத்தைச் சேர்ந்த சடலம் என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது!
சடலத்தை நேரடியாகப் பார்வையிட்டு, பொலிசார் - அருகிலுள்ளோர் போன்றவர்களை விசாரணை செய்த சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.நஸீல் ' சடலத்தை உறவினர் எவராவது வந்து இனங் காட்டும் வரை, இன்றிலிருந்து 14 நாட்களுக்கு அம்பாரை போதனா வைத்தியசாலை பிரேத அறையில் பாதுகாப்பாக குளிரூட்டி வைக்குமாறும், 14 நாட்கள் கடந்தும் எவரும் இனங்காட்டத் தவறினால், அரச செலவில் சடலத்தைப் புதைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்' பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
தற்போது சடலம் அம்பாரை போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது வரை எவரும் சடலத்தை இனங்காட்டவில்லை. சடலம் இனங்காட்டப்பட்ட பின்னரே ஏனைய விசாரணைகளைத் தொடர முடியுமெனவும், சடலத்தை இனங்காண்பதற்குப் பொது மக்களின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மஜீட் தெரிவித்தார்.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.இபுனு ஹஸார் அவர்களின் விசேட பணிப்பின் பேரில் பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மஜீட் தலைமையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.