நோட்டன் பிரிட்ஜ் நிருபர்-
நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றி பெறும் : அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவுடன் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி அமோகமாக வெற்றி பெறுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நுவரெலியா நகரில் 21.12.2017 இடம் பெற்ற இந்த நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவு தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் இராஜாங்க அமைச்சருமான வி.இராதாகிருஷ்ணன் , மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் , ஆர்.இராஜாராம் , திருமதி சரஸ்வதி சிவகுரு , த.மு.கூட்டணியின் செயலாளர் எஸ்.லோரன்ஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
எமது வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிப் பெறக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. எனவே எமது கூட்டணி வேட்பாளர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது கூட்டணியின் பலத்தை மீண்டுமொரு முறை நிரூபிக்க வேண்டும். நானும் அமைச்சர் இராதாகிருஷ்ணனும் இணைந்து எதிர்காலத்திலும் மக்களுக்குச் சிறந்த சேவையாற்றவுள்ளோம். மலையக அபிவிருத்தி அதிகாரசபை ஒன்று விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மலையக மக்களுக்குப் பாரிய அபிவிருத்திகளைச் செய்யவுள்ளோம்.
இந்த நிலையில் தேர்தல் சட்டத்திட்டங்களுக்கு அடிப்பணிந்து வேட்பாளர்கள் செயற்பட வேண்டும்.







