சொன்னதுடன் நிற்காது 2010 பொதுத்தேர்தலில் சாய்ந்தமருது வாலிபர்களையும் இணைத்து சுயேற்சையாய் போட்டியிட்டோம்.
அதாவுள்ளா இது பற்றி பேசுவதற்கு முன்பே பேசியவர்கள் நாம்.
ஆனால் சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம் காங்கிரசையும் ஹக்கீமையுமே நம்பினார்கள். மிக மோசமாக ஏமாற்றப்பட்டார்கள். இதற்காக முயற்சி செய்த அதாவுள்ளாவையும் சாய்ந்தமருது மக்கள் தோற்கடித்தனர்.
சிராசின் பதவி பறிப்பின் போதும் இது அநியாயம் என கல்முனையில் இருந்து கொண்டே உரக்க கூறியவர்கள் நாம் மட்டுமே. அப்போதும் கூட சாய்ந்தமருது மக்கள் எம்மை ஆதரிக்காமல் அதே ஹக்கீம் பின்னால் ஓடினர்.
அதன் பின் அமைச்சர் ரிசாதை சாய்ந்தமருதின் சிலர் நாடினர். அவரும் அர்ப்பணிப்போடு முயற்சி செய்தார். எங்கே அவர் மூலம் இது கிடைக்கப்பெற்று விடுமோ என்ற அச்சத்தில் ஹக்கீம் கோஷ்டியினர் குழி பறித்தனர்.
அத்துடன் சாய்ந்தமருதுக்கான சபையை அம்மக்களின் வாக்குப்பலம் கொண்ட கட்சியின் மூலமே தீர்க்க முயற்சித்திருக்க வேண்டும். அல்லது அந்தக்கட்சியை மட்டும் சாய்ந்தமருதிலிருந்து ஓரம் கட்டியிருக்கவேண்டும்.
அதனை விடுத்து இந்த விடயம் சாய்ந்தமருது கல்முனைக்குடி மக்கள் என்ற ஊர்வாதமாக மாறியதைத்தான் எம்மால் பொறுக்க முடியவில்லை. இரண்டு ஊரும் மோதிக்கொள்வதை சமூக அக்கறையுள்ள எவரும் அனுமதிக்க மாட்டார்.
சாய்ந்தமருதுக்கு சபை கிடைப்பதை கல்முனைக்குடி மக்கள் தடுப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு சாய்ந்தமருதின் எழுத்தாளர்கள் சிலர் மிக மோசமாக எழுதினர்.
முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் நாம் இந்த பிரதேச வாதத்தையும் அநியாயமான குற்றச்சாட்டுக்களையும் அனுமதிக்க முடியாது.
சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை கிடைக்கும் போது அது கல்முனை முஸ்லிம்களை ஆபத்தில் தள்ளிவிடவும் முடியாது என்ற நியாயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாய்ந்தமருதுக்கு சபை கொடுக்கத்தான் வேண்டும் என கோடீஸ்வரனும் தமிழ் கூட்டமைப்பும் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு நிற்பதுதான் எமக்கு பாரிய சந்தேகங்களையும் ஆபத்துக்களின் சமிக்ஞையையும் காட்டுகிறது. அதனை பார்க்கும் போது கல்முனை எந்தவொரு பிரிப்பும் இன்றி முழு முஸ்லிம்களும் ஒன்று பட்டு தமிழ் இனவாதத்தை முறியடிக்க வேண்டிய கட்டத்துக்கு நம்மை தள்ளி விட்டுள்ளது.
இது விடயத்தில் ரவூஃப் ஹக்கீம் தனது அரசியல் பலத்தையும் தலைமைத்துவ அதிகாரத்தையும் செயற்படுத்தாது நடித்துக்கொண்டிருக்கும் போது பிரதி அமைச்சர் ஹரீசின் அர்ப்பணிப்புடனான செயற்பாட்டை யாரும் குறை காண முடியாது. இது விடயத்தில் அவர் சாய்ந்தமருதுக்கு அநியாயம் செய்கிறார் என்பதை எம்மால் ஏற்க முடியாது.
சாய்ந்தமருது என்பது அதற்கு பிரதேச சபை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவ்வூர் தமிழ் பேரினவாதத்தின் இலக்கில் இல்லை என்பதால் கல்முனையை முஸ்லிம்கள் இழந்தால் அது இலங்கை முழுவதிலுமுள்ள முஸ்லிம்களின் சக்தியை பலவீனப்படுத்தி விடும் என்ற சரியான சிந்தனையில் ஹரீஸ் செயற்படுவதை நாம் காண்கிறோம். அவரது கட்சியான முஸ்லிம் காங்கிரசும் அவரின் நன்றி கெட்ட அரசியலும் எமக்கு பிடிக்காத போதும் இது விடயத்தில் அவரின் சாய்ந்தமருது கல்முனை என்ற பாகுபாடற்ற ஈடுபாடு போற்றத்தக்கதாகும். நாம் எப்போதும் உண்மையின் பக்கமும் நியாயத்தின் பக்கமும் நிற்பவர்கள். அவரது கட்சிக்கு கல்முனையில் 60 வீத வாக்குகளே உள்ளன. ஆனால் சாய்ந்தமருதில் 99வீதமான வாக்குகள் உள்ளன.
இப்படியான நிலையிலும் அவர் கல்முனையை முஸ்லிம்களுக்காக காப்பாற்றித்தர வேண்டும் என பாடுபடுவதை சாய்ந்தமருது மக்கள் மிக நிதானமாக புரிந்து அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உலமா கட்சி வினயமாக கேட்டுக்கொள்கிறது.
