இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,
சமகாலத்தில் இலங்கை முஸ்லிம் பல தரப்புக்களாலும் பலவிதமான நசுக்கல்களை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் சிங்கள பேரினவாதம், இன்னொரு பக்கம் தமிழ் பேரினவாதம். மற்றொரு பக்கம் முஸ்லிம்கள் மத்தியிலான பிரதேச வாதம், கட்சி வாதம் என பல பக்கத்திலிருந்தும் சமூகம் பிரச்சினைகளை எதிர் நோக்குகிறது. குறிப்பாக தங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என நம்பி முஸ்லிம்களின் 99 வீத வாக்குகளை பெற்ற அரசாங்கத்தின் அனுசரணையுடன் அல்லது அரசாங்கத்தின் கண் மூடிய அனுமதியுடன் மிக மோசமான நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
முஸ்லிம் என்பதற்காய் ஓரங்கட்டப்படல், முஸ்லிம்களின் ஆலோசனைகளை உரிய முறையில் பெறாத புதிய தேர்தல் முறை, புதிய அரசியல் யாப்பு முயற்சி, வடக்கு கிழக்கை இணைப்பதற்கான கள்ளத்தனமான முயற்சி என பல்வற்றை காண்கிறோம்.
இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது முஸ்லிம்களின் வாக்குகளைப்பெற்ற முஸ்லிம் கட்சிகளும் பல வரலாறுகளைக்கண்ட முஸ்லிம் அமைப்புக்களும் இவற்றுக்கெதிராக முஸ்லிம்களை ஒன்று கூட்டி ஜனநாயகத்தின் நிழலில் நின்று தமது உரிமைக்குரலை காட்ட முடியாத கையறு நிலையில் உள்ள நிலையில் சுமார் ஒரு தசாப்த வரலாறு கொண்ட ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இந்நாட்டு முஸ்லிம்களின் வாழ்வுக்கான உரிமையை பிரகடனம் செய்யும் பாரிய மாநாட்டை நடத்துவது சமூகத்தை நேசிக்கும் எம்மைப்போன்றவர்களுக்கு மகிழ்வைத்தருகிறது. இதன் மூலம் நமது வாழ்வுரிமை பற்றி பேசுவதும் அதற்காக முயற்சி செய்வதும் இஸ்லாம் காட்டிய வழி என்பதால் மார்க்கத்தின் பெயரால் இயங்கும் அமைப்புக்களுக்கும் அத்தகைய கடமை உண்டு என்பதை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நெஞ்சை நிமிர்த்தி வழி காட்டுகின்றமை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
முஸ்லிம்களால் தெரிவு செய்யப்பட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சாப்பிடுவதற்கு மட்டுமே வாய் திறக்கக்கூடியவர்களாக உள்ள நிலையில், மாகாண, பிரதேச சபைகளின் முஸ்லிம் உறுப்பினர்கள் சமூகத்தை கொள்ளையடிப்பதும் ஏமாற்றுவதும்தான் அரசியல் என்று நினைத்துச்செயற்படும் இன்றைய சூழலில் இத்தகையோரை தட்டிக்கேட்பது சமூகத்தின் பொறுப்பும் கடமையுமாகும். இதனை சமீப காலமாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிறப்பாக செய்து வருவதை நாம் கண்டு வருகிறோம்.
அந்த வகையில் மேற்படி வாழ்வுரிமை மாநாடு வெற்றி பெறவும் இதன் மூலம் முஸ்லிம்களின் உரிமைகள் கிடைக்கப்பெறவும், முஸ்லிம் அரசியல் தூய்மையடயவும் இம்மாநாடு இறைவனுதவியால் வழி வகுக்கும் என்றும் உலமா கட்சி நம்புவதுடன் இம்மாநாடு வெற்றி பெற சகல முஸ்லிம்களும் தம்மாலான ஒத்துழைப்பை வழங்கும்படியும் கேட்டுக்கொள்கிறது.
