எம்.ரீ. ஹைதர் அலி-
மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை மீராஜூம்ஆப் பள்ளிவாயல் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் சாதனையாளர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் பரிபாலன சபைத் தலைவர் ஜனாப் கே.பி.எஸ். ஹமீட் அவர்களின் தலைமையில் இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து பள்ளிவாயலில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். இஸ்ஸதீன் அவர்கள் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ. ஜுனைட், கல்குடா ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம். இஸ்மாயில் (பஹ்ஜி) மீரா உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவர் மௌலவி யூ. எல்.எம். இல்யாஸ் (ஷர்க்கி), பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொது மக்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி நிருவாக சேவைக்கு சித்தியடைந்தவர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், மீராவோடை அமீர் அலி வித்தியாலயம், மீராவோடை உதுமான் வித்தியாலயம், செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயம், பதுரியா நகர் அல் மினா வித்தியாலயம் மற்றும் மாஞ்சோலை அல் ஹிறா வித்தியாலயம் ஆகியவற்றில் ஐந்தாம் தரத்தில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மீராஜூம்ஆப் பள்ளிவாயல் பரிபாலன சபையானது ஒவ்வொறு வருடமும். க.பொ.த. சாதாரண தரம், உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும், அதிபர்களையும் கௌரவித்து வருவதுடன், இம்முறை மீரா உலமாக்கள் ஒன்றியம் என்கின்ற ஒரு அமைப்பினை உருவாக்கி அதனூடாக இப்பிரதேசங்களிலுள்ள அனைத்து உலமாக்களையும் 2017.07.01ஆந்திகதி கௌரவித்ததுடன், “உலமாச்செல்வங்கள்” என்ற பெயரில் மலர் ஒன்றினையும் வெளியிட்டிருந்தனர்.
மேலும், மீராவோடை அமீர் அலி வித்தியாலயம், மீராவோடை உதுமான் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளுக்கும் பள்ளிவாயல் பரிபாலன சபையின் முயற்சியினால் மாகாண திணைக்களத்தினூடாக மூன்று மாடிக் கட்டடங்களை பெற்றுக் கொடுத்ததுடன், மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கணித. விஞ்ஞானப் பிரிவு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் மாதந்தம் குறிப்பிட்ட ஒருத்தொகைப் பணத்தினையும் இன்றுவரை வழங்கி வருகின்றனர். மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல் பரிபாலன சபையினரின் சேவையானது இப்பிரதேசத்தில் மிகவும் அளப்பரியதாகும்.




