மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான கௌரவ எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாண ஆளுனரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ரோஹித போகல்லாகம எதிர்வரும் 26 ஞாயிற்றுக்கிழமை நாளை காலை 10 மணிக்கு காத்தான்குடிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது ஆளுனர் அவர்களினால் காத்தான்குடி தள வைத்தியசாலையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள சத்திர சிகிச்சை அலகு திறந்து வைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வு காலை 10.30 மணிக்கு காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. அதனை தொடர்ந்து வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள், வைத்தியர் மற்றும் ஆளணி பற்றாக்குறை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்றும் வைத்திய சாலையில் இடம்பெறவுள்ளது.
அதனை தொடர்ந்து ஆளுனர் அவர்களினால் மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பாவா வீதிக்கான வடிகான் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற உள்ளது. அதனை தொடர்ந்து டீன் வீதியின் இரண்டாம் மூன்றாம் கட்டத்திற்கான வடிகான் திட்டம் மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கடந்த மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஒரு கோடி முப்பது இலட்சம் ரூபாய்க்கான இரண்டாம் மூன்றாம் கட்ட வேலைத்திட்டங்களையும் ஆளுனர் அவர்கள் ஆரம்பித்து வைக்கவுள்ளார்கள்.
மேலும் கிழக்கு மாகாணசபையினால் அமைக்கப்பட்டுள்ள தெற்கு எல்லை வீதி காபட் இடப்பட்ட வேலைத்திட்டம் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வேண்டுகோளின்பேரில் கௌரவ ஆளுனர் அவர்களினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது.
அதனை தொடர்ந்து ஆளுனர் அவர்கள் காத்தான்குடியில் தனது பகல் போசனத்தை முடித்து விட்டு மட்டக்களப்பு சிசிலியா மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ள HNDA பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களும் அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
