ஏறாவூர் றிகாஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்ப்பிரதேசங்களில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி செல்வாக்குச் செலுத்தியுள்ளதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான சிறந்த வேட்பாளர்களைக்கூட தெரிவுசெய்ய முடியாமல் திணறடித்த நிலையில் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கல்குடா தேர்தல் தொகுதியில் கடந்தகாலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பல இடங்கள் தற்போது உடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் விசேட பணிப்புரையின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் ஆறுகோடி ரூபா நிதியில் புனரமைக்கப்பட்ட வீதிகளை மக்களது பயன்பாட்டிற்காக சம்பிரதாய பூர்வமாக திறக்கும் நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரைநிகழ்த்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜெயானந்தமூர்த்தி இங்கு தொடர்ந்துபேசுகையில்--தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் நான் மிகவும் முக்கியமான இடத்தில் இருந்தவன். கட்சியின் பல்வேறு தேவைகளுக்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கும் சென்றவன். 2009 ஆம் ஆண்டிற்குப்பின்பு நாட்டின் நிலைமையில் ஏற்பட்ட மாற்றமான சூழ்நிலையினையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலோ எதிர்க்கட்சியிலோ இருந்து நாம் எவற்றையும் சாதிக்க முடியாது மேலும் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொடுக்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ள முடிவுசெய்தேன்.
இவ்வாறு இணைவதற்கு முன்னாள் பிரதியமைச்சர் கணேஷமூர்த்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட முகாமையாளர் லிங்கராஜா அவர்களும் எனக்கு மிகுந்த ஒத்துழைப்பினை வழங்கினார்கள்.
அந்தவகையில் எமது பிரதேசங்களை அபிவிரு;ததி செய்யவேண்டும், மக்களது தேவைகளை நிறைவேற்றவேண்டும் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற நோக்கத்துடனேயே தற்போது இருக்கிறேன்.
குறிப்பாக கல்குடா தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பாரிய வளர்ச்சிகண்டு வருகிறது. அந்தஅடிப்படையில் எதிர்வருக்கின்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்காக சகல பிரதேசங்களிலும் மக்களது நன்மதிப்பைப்பெற்ற வேட்பாளர்களைத் தெரிவுசெய்துள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பல இடங்களை உடைத்து வேட்பாளர் தெரிவை மேற்கொண்டுள்ளோம்.இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்ல வேட்பாளர்களைத் தெரிவுசெய்ய முடியாமல் தின்றாடிக்கொண்டிருக்கிறது என்றார்.
இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு, பட்டிருப்பு மற்றும் கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளில் தலா இரண்டுகோடி ரூபா நிதியில் வீதிகள் புனரமைக்கப்படுகின்றன.
கல்குடா தொகுதியில் மாவடிவேம்பு பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட வீதிகளைத் திறக்கும் நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெயானந்தமூர்த்தியின் பங்கேற்புடன் நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எஸ். கணேஷமூர்த்தி பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் பலர் பிரசன்னமாயிருந்தனர்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கல்குடா தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இதன்போது அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.