தமிழ் அன்னைக்கு தன் வாழ்நாளெல்லாம் தொண்டாற்றிச் சென்ற செம்மல் இலக்கிய கலாநிதி புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளையவர்கள் மட்டக்களப்பின் மகிமையினை மணம் பரப்பச்செய்த புலவர்களுள் பெருமதிப்புக்கும், சிறப்புக்குறியவர் புலவர்மணி அவர்களே ஆவார்.
சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் முருகன் ஆலயத்தில் பெயர் பெற்று தன் இலக்கிய மைந்தர்களால் புகழ்பெற்று விளங்கும் மண்டூர்ப்பதியின் மைந்தன் புலவர்மணி பத்தொன்பதாம் நூற்றாண்டு;க்கு விடைகொடுக்கும் காலகட்டத்தில் உதித்த இவ்வுத்தமர் இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ்மணம் பாரெங்கும் வீசவைத்துச் சென்றார்.
தோன்றிப் புகளோடு தோன்றும்' என்று கூறிய வள்ளுவர் வாக்குக்கு அமைய ஏகாம்பரப்பிள்ளை – சின்னத்தங்கம் தம்பதிகளுக்கு 1899ஆம் வருடம் தைத்திங்கள் எட்டாம் நாள் தவப்புதல்வராய் அவதரித்தவர் பெரியதம்பிப் பிள்ளையவர்கள். இவர் இளமையிலேயே குருகுல முறைப்படி தமிழிலக்கியம், இலக்கணம், நிகண்டு என்பவற்றைக் கற்றுக்கொண்டார்.
இவரது உள்ளத்தைக் கொள்ளைகொண்ட நூலாக கந்தபுராணம் காணப்படுகிறது. இதனைவிட திருச்செந்தூர் புராணம், மகாபாரதம் என்பனவும் அவரது கலை உள்ளத்தை வளர்த்துச் சென்றன.
ஏ ம........
ஆரம்பகாலக் கல்வியை திண்னைப்பல்லி நடாத்திய சந்திரசேகர உபாத்தியாரிடம் கற்றார். பின்னர் 1904இல் மண்டூரிலுள்ள உவெஸ்லியன் மிஸன் தமிழ் பாடசாலையில் 05 வயதில் ஆரம்பமாகிய ஆரம்பக் கல்வியை 10 வயதில் 05ஆம் வகுப்புவரை நீடித்தது. ஐந்தாம் வகுப்பில் உடன் கற்றோர் ஆங்கிலம் கற்பதற்காக கல்முனை உவெஸ்லியமிஷன் ஆங்கிலப் பாடசாலைக்குச் சென்றனர். யாழ் புலோலி சந்திரசேகர் ஆசிரியரின் வருகையினால் இவரின் ஆங்கிலக் கல்விக்குத் தடையேற்பட்டது. இவர் தமிழ்மொழிக்கு திசைதிருப்பப்பட்டார். சந்திரசேகர உபாத்தியாரிம் தமது இல்லத்திலேயே சூடாமணி, நிகண்டு, திருச்செந்தூர் புராணம், வல்லி புத்தூரர் பாரதம் முதலான நூல்களை முறையாகக் கற்றார். இவருடன் கற்றவர்களுள் பிரபல கல்விமானாய் விளங்கிய பண்டிதர் மகாவித்துவான் வீ.சீ.கந்தைய்யா அவர்களின் தந்தையார் வினாசித்தம்பி என்பவருமொருவர். மட்டக்களப்பில் புலவர்மணியின் இனத்துள் கலந்துகொண்ட முதுபெரும் புலவர் சந்திரசேகர உபாத்தியார்.
1909இல் தமிழ் 05ஆம் வகுப்புச் சித்தி, குருகுலப் படிப்பையும் தொடர்ந்தார். 1910இல் மண்டூர் முருகன் கோயிலில் புராணபடன அரங்கேற்றத்தினையும் செய்தார். 1911ஆம் ஆண்டில் அன்னவரின் அருமைத் தாயாரின் மரணம் அவரை வாட்டியது.
தமிழ் ஆசானும் மறைய தமிழ்ப்படிப்பு, அடைபட, ஆங்கிலக் கதவு திறந்து கொண்டது. 1913இல் கல்முனையிலுள்ள உவெஸ்லியமிஷன் ஆங்கிலப் பாடசாலையில் ஆங்கிலப்படிப்பு ஆரம்பமானது. 1971ஆம் ஆண்டுவரை ஆங்கிலம் கற்றுத் தேறினார். தமிழைப்போல் ஆங்கிலத்திலும் வல்லவராக்கினார். ஆர். என்.சேதுகாவலர் அதிபரே.
1915இல் 06ஆம் வகுப்பு ஆங்கிலப் பரீட்சையில் சித்தி. 1916இல் நோயும் படுக்கையும் வாட்டியது. 1917ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இவரின் ஆங்கிலக் கல்வியும் முற்றுப் பெற்றது. புதியதோர் திருப்பம் ஏற்பட்டது. இவரது வீட்டிற்கு வருகைதந்த யாழ்ப்பாணம் மட்டுவில் வடக்கைச்சேர்ந்த செ. தம்பிமுத்துப்பிள்ளை என்பவரின் வழிகாட்டுதலில் யாழ்ப்பாணம் போக தயாரானார். யாழ்ப்பாணத்தில் நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையிலே காவியப் பாடசாலையில் ஆரம்பமாகிய கல்வி முளையிட்டு வளர்ந்து கிளைவிட்டு மலர்ந்தது. அங்கு இலக்கிய கலாநிதி பண்டிதமணி சீ. கணபதிப்பிள்ளை அவர்களுடன் கல்வி கற்கும் பேற்றிக்கு வழிகோலியது.
காவியப் பாடசாலைக் கல்வி முறைதான் பெரியதம்பிப்பிள்ளை அவர்களை பண்டிதராகவும், புலவராகவும், கவிஞராகவும், புலவர்மணியாகவும் படிப்படியாக மெருகூட்டியது எனில் அது மிகையல்ல. மட்டக்களப்பு மண்டூரிலே பிறந்து சந்திரசேகர உபாத்தியாரின் மடியிலே தவழ்ந்து விளையாடி, ஆர்.என். சேதுகாவலரின் அரவணைப்பில் எழுந்து நின்று, யாழ்ப்பாணத்தில் குமாரசாமிப் புலவரிடம் நடைபழகி, மயில்வாகனனார். (பிற்காலத்தில் சுவாமி விபுலானந்தர்) அவர்களின் மருங்கிலே விளையாடியவர் எமது பெரியதம்பிப்பிள்ளை.
காவியப் பாடசாலையில் பாரதம், கந்தபுராணம், இராமாயணம், நன்னூல் விருத்தி, நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் என்பன முறையாகக் கற்றார். பண்டிதமணி சீ. கணபதிப்பிள்ளை, பண்டிதமணி நவநீதகிருஷ்ணபாரதி, பண்டிதர் திருச்சோமசுந்தரம், சாவகச்சேரிப் புலவர் பொன்னம்பலம் பிள்ளை, சைவப் பெரியார் மு.மயில்வாகனம் ஆகியோரின் சந்திப்பும், சுன்னாகம் குமாரசாமிப் புலவர், மகாவித்துவான் பிரம்மஸ்ரீ சீ. கனேசையர் போன்றோரின் வழிகாட்டலும், யோகர் சுவாமியின் ஆசியும், பண்டிதர் மயில்வாகனனாரின் அரவணைப்பும் பெரியதம்பி அவர்களின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் மிகவும் அத்திவாரமாகின.
1921ஆம் ஆண்டளவில் பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் மீண்டும் மட்டுநகர் திரும்பினார். எவ்வளவோ கற்றறிந்த மேதையாக திரும்பவேண்டியவர் பரீட்சை எடுக்காத பண்டிதராகவே திரும்பினார். கல்வித்திறனை மதிப்பிடும் தராதரப் பத்திரம் எதுவுமின்றியே திரும்பினார். இக்காலம்தான் பண்டிதர் மயில்வாகனத்தார் மாணிப்பாய் இந்து கல்லூரி அதிபர் பதவியைத் துறந்து ஸ்ரீ.ராமகிருஷ்ன சங்க மடத்துத் திருக்கூட்டத்திற் சேர்ந்து பிரபோதசை தன்னியர் ஆகியதெனலாம். இது நிகழ்ந்தது 1922ஆம் ஆண்டு.
புலவர்மணியவர்கள் யாத்த முதல் நூல் 'மண்டூர்பதிகம்' ஆகும். இந்நூல் 1922ஆம் ஆண்டு வெளிவந்தபோது அதன் பெருமையாகிய நறுமணத்தை நுகர்ந்த பல அறிஞர்களின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றார். புலவர்மணி அவர்கள் வெண்பா யாப்பில் பாடிய பகவத்கீதையும் அழியாப் புகழைக் கொடுத்தது. அத்தோடு இன்னும் இவர் பாடிய ஏராளமான தனிக் கவிதைகளும் இலக்கிய அந்தஸ்துடையவனாகவே உள்ளன.
வெறுங்கையோடு அதாவது தராதரப்பத்திரம் எதுவுமின்றி தாய் வீடு திரும்பிய பெரியதம்பிப் பிள்ளையைப்பற்றி துறவு பூணச்சென்ற பண்டிதர் மயில் வாகனம் செய்த சிபாரிசின்பேரில் மீண்டும் யாழ்நகர் சென்ற பெரியதம்பிப் பிள்ளை அர்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. தமிழ் பண்டிதராக கடமையேற்றிச்சென்ற இடத்திற்கு வேறொருவர் நியமிக்கப்பட்டிருந்தார். மட்டு திரும்பாமல் நுணாவில் கிழக்கு அமிர்தாம்பிகை சைவ வித்தியாலயத்தில் ஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டார். சில மாதங்களின் பின்னர் சாவகச்சேரி சங்கத்தானை இந்து கல்லூரியில் பண்டிதராகக் கடமையாற்றினார்.
யாழ்ப்பாண வாழ்க்கை இவரின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. தீண்டாமையை எதிர்த்துப் போராட வேண்டியவரானார். வாய்வேதாந்தம் பேசாத சமத்துவ வாதியான அன்னார், தீண்டாமையை எதிர்த்த காரணத்தால் யாழ்நகர் உயர்சாதியெனக் கூறிக் கொண்டோரின் வெறுப்புக்கு ஆளாக நேரிட்டது. புலவர்மணி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆறுமுகம் பெரியார் என்பவருடன் நட்புறவு கொண்டிருந்தது மேற்படி சாதித்திமிரை சந்திக்கும் வாய்ப்பை அவருக்கு அளித்தது. ஆறுமுகப் பெரியாரைப்பற்றி புலவர்மணி பாடிக்கொடுத்த பாடல் சாவகச்சேரி இந்து வாலிபர் சங்க விடுதியிலிருந்து அவரை வெளியேற்றியது. அந்த சாதித்திமிர் கண்டு புலவர்மணி அதிர்ந்து போனார். அந்த அதிர்ச்சியே அவரை கிறிஸ்துவத்தின் பக்கம் சாய வைத்தது. யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவ மதத்தி;னைச் சார்ந்தது.
பல சீர்திருத்தங்களையும், தமிழ் பணியினையும் மேற்கொண்டார். அம்மதத்தைக் கற்றறிந்து, அதில் காணப்பட்ட குறைபாடுகளைப் போக்குவதற்கு முயற்சி எடுத்தார். முதன் முதலில் 'கிறிஸ்துவ திரு அவதரா கீதங்கள்' எனும் சிறு பிரபந்தம் ஒன்றைப் பாடிய பெருமை அவரையே சாரும். அத்துடன் 'கிறிஸ்துவ மத துயிலுணர்ச்சி', 'குருபரதரிசன் திரு வேட்கை' போன்ற கிறிஸ்துவ மத சார்பான நூல்களையும் இயற்றினார்.
பண்டிதர் பெரியதம்பிப் பிள்ளை அவர்களின் கவிதாஞானம் கிறிஸ்தவ கீதங்களாகப் பரிணமித்தது. கிறிஸ்து திருவவதாரக் கீதங்கள் பல அச்சுவாகனமேறி இந்தியா, பர்மா, இலங்கை முழுவதும் சென்று பிரசித்தம் பெற்றன. 1923 - 1924 காலத்திலேதான் இவரின் பிரசித்தம் பெற்ற பசுமலை சீவியம் ஆரம்பமாகியது. பசுமலையில் பல புரட்சிகரமான சீர்திருத்தங்களை மேற்கொண்ட பண்டிதர் பெரியதம்பிப்பிள்ளை கிறிஸ்தவ பெரியார்களிடையே பெரும் புகழும் பெற்று மிடுக்கோடு மிளிரலானார். பல மகாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்துகொண்டு பலரும் வியக்கத்தக்கவாறு சொற்பெருக்குகள் ஆற்றிய காரணத்தினால் 1925இல் சென்னையில் இடம்பெற்ற மகாநாட்டுக்குப் பசுமலைப் பிரதிநிதியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்காலத்திலேயேதான் மதுரை மங்கம்மாள் சத்திரத்தில் தங்கியிருந்த சுவாமி விபுலானந்த அடிகளாரின் பரிசதீட்சை கிடைக்கப்பெற்ற பண்டிதர் வேற்று மனிதராக பிறந்த மண்ணிற்கு திரும்பினார்.
தாயகம் மீண்ட பண்டிதர் பெரியதம்பிப்பிள்ளை திருமண நிச்சயார்த்தம் நடர்ந்தது. குருக்கள் மடத்தில் கோயிற் திருப்பணித் தலைவர் நா. குமாரப் பெருமாள் உடையாரின் பேத்தி நல்லம்மா என்பவரே மணப்பெண். தந்தையார் வினாhசித் தம்பி மூத்ததம்பி - கோயில் வண்ணக்கர், தயார் உடையாரின் மூத்த மகள் கந்தம்மை. 1926 ஆவணியில் திருமணப் பதிவு நடந்தது.
அதே ஆண்டு, அதே ஆவணித் திங்களில் விபுலானந்த அடிகளாரிடமிருந்து திருகோணமலை இந்துக் கல்லூரியில் தமிழ் பண்டிதராகக் கடமையேற்குமாறு பணிப்புரை திருமணப் பரிசாகக் கிடைத்தது எனலாம். புலவர்மணி அவர்கள் சுவாமி விபுலானந்தரிடம் கொண்டிருந்த ஈடுபாடும், மதிப்பும் வெளிப்பாடும் வகையில் 'யாழ்நூல் தந்தோன்', 'விபுலானந்த மீட்சிப்பத்து' ஆகிய நூல்களையும் இயற்றி அகமகிழ்ந்தார்.
திருகோணமலையில் ஆசிரியராகப் பணி ஏற்றவர் பகலில் ஆசானாகவும, இரவில் அடிகளாரின் மானாக்கராகவும் பணியாற்றினார். கவிஞர் மா. பீதாம்பரம், பண்டிதர் செ. பூபாலப்பிள்ளை, பண்டிதர் ஐ. சரவணமுத்து, க. சீனிவாசகம், (பிற்காலத்தில் சுவாமி நடராஜானந்தா), சிதம்பரப்பிள்ளை, சிவதாஸ் (பிற்காலத்தில் சுவாமி பரிபூராணந்தா) என்போரும் இவருடன் அடிகளாரிடம் கற்றுத் தேர்ந்த மாணாக்கராவார்கள்.
1928ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் இலங்கை விஜயம் நடைபெற்றது. யாழ்ப்பாணம் செல்லும் வழியில், அனுராதபுரப் புகையிரத நிலையத்தில் திருகோணமலை மக்கள் சார்பில் வரவேட்புப் பத்திரம் பாடி வணங்கும் பேறு இவருக்குக் கிடைத்தது மகா அதிசயம் எனலாம்.
இவ்வாறு திருமலையில் அதிசயிக்கத்தக்கவாறு சாதனைகளை நிலைநாட்டிய பின்னர் 1930ஆம் ஆண்டு குரவரின் ஆசியும், அனுமதியும் பெறாது சில அன்பர்களின் தூண்டுதலின் பேரில் தனது சுயவிருப்பத்தில் மட்டக்களப்புக்கு வந்தார். முன்னைய ஏற்பாட்டின்படி புளியந்தீவு அர்ச்சியசிட்ட அகுஸ்தினார் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் தமிழ் பண்டிதராகக் தமிழ்;டிதராகக் கடமையேற்றார். இவரின் மாணாக்காரர்களுள் பிரபல்லியம் பெற்ற கல்விமானாக விளங்கிய மகாவித்துவான் எவ்.எக்ஸ்.சீ. நடராசா அவர்களும் ஒருவராவார். பண்டிதர் பிரசித்தி நொத்தாரிஸ் க. சந்திரகேசரி இவரின் பிரிய மாணாக்கர். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பகுதிநேர ஆசிரியராகக் கடமைபுரிந்த காலம் மட்டக்களப்பு புனித சிசிலியா மகளீர் பாடசாலையிலும் கற்பித்தார். இப்பணி 1934 வரை நீடித்தது.
1932 – 1934 வரை மட்டு நகரில் பால பண்டிதர் வகுப்பில் சித்தியடைந்தார். 1932இலே தனது தந்தையாரையும் இழந்தார். 1935ஆம்; ஆண்டின் பின்னர் ஆசிரியர் தொழில் புரிவதினின்று சற்று விலகியிருந்தார். அரசியல் பிரச்சினைகளிலும் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டது. இக்காலத்தில் மண்டூரில் உபதபால் நிலைய அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். அல்லாமலும் இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் உணவுக் கட்டுப்பாட்டு இலாகாவில் நெல் கொள்வனவுக் கட்டுப்பாட்டுக் காலங்களின் மேற்பார்வையாளர். யுத்தக் கால கரையோரக் காவலர்களின் மேற்பார்வையாளர்கள் பதவிகளை வகித்துக் கடமை, கண்ணியம், கட்டுப்பாடான சேவைசெய்து சிறப்புப் பெற்றவர்.
1938 – 1941 வரையில் அர்ச் - அகுத்தினார் ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின் கிழக்கின் 'சாந்தி நிகேதனமென' விளங்கிய மட்டு இந்துக் கல்லூரிக்கு தமிழ் பண்டிதராகத் திரு.வ. நல்லையா அவர்களின் விருப்பப்படி 48ரூபா சம்பளத்தில் 1947இல் நியமனம் பெற்றார். இக்கல்லூரியில் 1959 மாசி மாதம் 15ஆம் திகதி வரை மங்காப்புகழுடன் பெரும்பணியாற்றி ஆசிரியர் பணியென்னும் தூய பணியின்றும் ஓய்வு பெற்றார்.
பெரியதம்பிப்பிள்ளை அவர்களுடைய இலக்கிய வெளிக்கொணர்வுகள் அளப்பரியன. அந்த வகையில் அன்னாரின் கன்னி முயற்சியான 'மண்டூர்ப் பதிகம்' சுவாமி விபுலானந்தராலேயே வியந்து பாராட்டப்பட்டது. அன்னாரின் 'புதுமைக் கமக்காரன்', 'கிருஷிக்க கும்மி' என்ற இரு பாடல்களும் 1943 ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்முனை விளைவு விழாவில் பரிசு பெற்றது. அது மட்டுமல்லாது 1926ஆம் ஆண்டிலிருந்து அனைத்துப் பத்திரிகைகளிலும் இவருடைய தமிழ் சுவை ததும்பும் ஆக்கங்கள் வெளிவந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மருதமுனை இஸ்லாமிய இலக்கிய ஆய்வு விழாவில் இவர் சமர்ப்பித்த 'மஸ்தான் சாகிபு' பாடல் பற்றிய கட்டுரை இஸ்லாமிய சமூகத்தவர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றதும் குறிப்பிடக் கூடியதே.
இவர் 1943லே பகவத்கீதை வெண்பாவை பாடத் தொடங்கினார். இவர் ஆற்றிய நூல்களுள் மணிமகுடம்போல் விளங்கியது. 1951இல் அரங்கேற்றிய பகவத்கீதை வெண்பாவே. இந்நூல் கருமயோகம், பக்தியோகம், ஞானயோகம் என மூன்று பாகங்களாக பாடப்பட்டது. இது 698 செய்யுள்களினை உள்ளடக்கியிருந்தது.
பகவத்கீதை வெண்பாவில் முதலாம் பாகம் கருமயோகத்திற்கு 1963ஆம் ஆண்டு சாகித்திய மண்டல பரிசு கிடைத்தது. இவை மட்டுமா? 'ஈழமணித்திருநாடு', 'சேனநாயக வாவி', சீவக சிந்தாமணி', பாலசரிகை நாடகம்', 'மண்டூர் பதிகம்', 'கொக்கொட்டிச் சோலை தான் தோன்றீஸ்வரர் பதிகம்', 'சித்தாண்டிப் பதிகம்', 'சர்வசமய சமரசப் பதிகம்', 'ஸ்ரீ. மாமாங்கப் பிள்;ளையார் பதிகம்', 'ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரப் பதிகம்', 'காளிகாமடு விநாயகர் ஊஞ்சல்' போன்ற பல இலக்கிய நூல்களையும் இயற்றியதோடு, இலங்கை புகையிரதப் பெரு விபத்து - 1923 முதலான பல செய்யுள் நூல்களையும் யாத்துப் புகழ் பரப்பினார்.
பகவத்கீதை வெண்பாவை வீரகேசரி வாரமலர் வெளியீட்டில் தொடர்ச்சியாகப் பிரசுரமாகி பின்னாலில் மூன்று தொகுதிகளாக நூலுருவில் வெளிவந்தது. பகவத்கீதை வெண்பா ஆக்கத்தால் புலவர்மணி அவர்களை இலங்கை வானொலி 'வெண்பாவிற் பெரியதம்பி' என்று சிறப்பித்துக்கூறி கௌரவித்தது.
'பட்டிப்பளை ஆறு' எனும் அழகிய தமிழ்ப்பெயர் 'கல்லோயா' என மாற்றப்பட்டது. 1949இல் குடியேற்றமும் இடம்பெற்றது. இத்திட்டத்தினைப் பற்றியும், தமிழ் - முஸ்லீம் ஒற்றுமை பற்றியும், தமிழ் தலைவர்களின் ஒற்றுமை பற்றியும் அவர் தீர்க்கதரிசனமான பல கவிதைகளைப் படைத்துள்ளார். சமூக ஒற்றுமை அவரிடம் குடிகொண்டிருந்தது போன்று சமய, சமரசம், தீண்டாமை, ஒழிப்பு, தேசப்பற்று ஆகிய நற்பண்புகளும் காணப்பட்டன.
வெண்பா யாப்பினைக் கைக்கொண்டு கவிதை இயற்றுவதில் புலவர்மணி மிகவும் திறமையுடையவராகக் காணப்பட்டார். எளிமையான சொற்களைக் கையாண்டு, எல்லோருக்கும் இலகுவில் விளங்கக்கூடிய வகையில் புலவர்மணி அவர்கள் கவிதைகள் புனைந்தார். இவர் தமது பகவத் கீதை வெண்பாவில் கீதோபதேச உண்மைகளை விளங்குவதற்கு தேவார திருவாசகங்கள், திருக்குறல், கந்தபுராணம், வில்லிபாரதம், கம்பராமாயணம், தாயுமானவர் பாடல்கள் முதலிய பல இலக்கிய தத்துவ நூல்களையும் எடுத்தாண்டு மேற்கோள்காட்டி விளக்கிச் சொல்லும் வகையே ஒரு தனித்துவமாகும்.
புலவர்மணி வீரகேசரி, தினபதி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் கண்ணகி வழிபாடு, கொம்பு விளையாடடு;, வசந்தன், ஊஞ்சல் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். கலித்தொகை காட்சிகள் பற்றிய கட்டுரைகளை தினகரனில் எழுதி வந்தார். கலித்தொகை காட்சிகள் பற்றிய கட்டுரைகளைத் தினகரனில் எழுதி வந்தார். சுவாமி விபுலானந்தர், ஆறுமுக நாவலர் ஆகிய இருவரைப் பற்றியும் பல கட்டுரைகளை பத்திரிகைகளில் எழுதினார். இவற்றில் 'முத்தமிழ் முனிவராம் வித்தக விபுலானந்தர் நினைவு, 'சைவத்தை கைதூக்கு விடுவதற்கு அவதரித்த நாவலர் பெருமான்' ஆகிய கட்டுரைகள் சிறப்பாகக் கூறலாம்.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை மட்டக்களப்பு தமிழ்கலை மன்றத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார். அக்காலப்பகுதியில் இம்மன்றத்தினால் 1954ஆம் ஆண்டு மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட தமிழ் விழா சிறப்பாக நடந்தேறியது. 1954 காலப்பகுதியில் மட்டக்களப்பு தமிழ் வாலிபர் சங்கமும், தமிழ்க்கலை மன்றமும் சேர்ந்து பல இலக்கிய முயற்சியில் ஈடுபட்டு வந்தமைக்கு புலவர்மணி போன்ற பெரியார்கள் ஊக்கமளித்து வந்தமையே காரணமாகும்.
புலவர்மணிகளது தமிழ் இலக்கியப் பணியினை இலங்கை வானொலியிலும் நாம் காண முடிகின்றது. பல பயனுள்ள பேச்சுக்களை வானொலியில் திகழ்த்தியுள்ளார். இலங்கை வானொலி கல்வி ஒலிபரப்பு ஆலோசனை சபையில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். 1954ஆம் ஆண்டு இலங்கை கலைக்கழகத்தின் நாட்டுப்பாடல், நாட்டுக் கூத்துக் குழுவின் அங்கத்தவராகப் பணிபுரிந்தார். இக்கால கட்டத்தில் இக்குழுவின் தலைவராக இருந்த வில்லியம் கோபல்லாவ போன்றோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது. மட்டக்களப்புப் பிரதேசத்தின் நாட்டுப் பாடல், நாட்டுக் கூத்து என்பவற்றை கலாநிதி சரத் சந்திரா, தேவசூரியசேன போன்ற கலைஞர்கள் அறிந்து போற்றுவதற்கு வாய்ப்பினை புலவர்மணி அவர்களே ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
1955ஆம் ஆண்டில் அகில இலங்கை இந்து மாமன்றம் உருவாக இவர் பெரிதும் உறுதுணையாக இருந்தார். 1958ஆம் ஆண்டில் அரச கரும மொழித் திணைக்களத்தில் ஆலோசனைச் சபையின் கலைச் செயற்குழு உறுப்பினராக இருந்து தமிழ்ப்பணி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது. 1970இல் இந்து சமய விவகார ஆலோசனை சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு 1978வரை ஆண்டுவரை பணிபுரிந்தார். புலவர்மணி அவர்கள் 'கிழக்குத் தபால்' எனும் பத்திரிகையின் ஆசிரியராக சிலகாலம் இருந்தபோது பத்திரிகைத் துறைக்கு ஆக்கபூர்வமான பல நன்மைமிகு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
'இலங்கை மணித்திருநாடு' எனும் பாடல் இவரைத் தேசிய கவிமட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்து - இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமை நிலவ வெகுவாகப் பாடுபட்டார். அவ்வக்காலங்களில் நாட்டின் நாலாத் திசைகளிலுமுள்ள கலாமன்றங்கள், தமிழ்ப்பணி மன்றங்கள் இவரைப் பாராட்டி பல மகிமைப் பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளன.
இந்தவகையில் 1951இல் மட்டக்களப்புத் தமிழ்; கலை மன்றத்தினால் - 'புலவர்மணி' என்ற பட்டமும், பட்டயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1952இல் யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தினர் 'பண்டிதமணி' எனும் பட்டம் வழங்கினர்.
1962இல் மட்டக்களப்பு தமிழ் கலாமன்றம் தங்கப்பதக்கம் சூட்டிக் கௌரவித்தது. இவர் இலங்கை கலைக்கழகம், ஸ்ரீ லங்கா சாகித்திய மண்டல செந்தமிழ் இலக்கியக் குழு என்பவற்றின் உறுப்பினராகவும், அரசாங்க பாஷைப்பகுதி, இலங்கை வானொலி கல்வி ஒலிபரப்பு, தமிழ் பாடநூற் சபை என்பவற்றின் ஆலோசனை உறுப்பினராக இருந்து சேவையாற்றியவர்.
1974இல் இந்து அறநிலைய நிதி நிர்வாக சட்டம் கொண்டுவர ஏற்பாடு செய்த இந்த மகானுக்கு 'வெண்பா வேந்தன்'. 'சைவமணி', 'மதுர கவி', 'சித்தாந்த ஞான பானு', 'கவியரசு', 'பன்மொழிச் சைவமணி' என பல சிறப்புப் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டன.
புலவர்மணி அவர்கள் மட்டக்களப்புக்கு மாத்திரமல்ல, முழு இலங்கைக்கும் பொதுவான அருந்தவப் புதல்வர், கருவிலே திரு உடையாராய்ப் பிறந்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, இல்லறத்தை நல்லறமாக்கி தருமலிங்கம், சாந்தலிங்கம், சிவலிங்கம், (விஜெயரெத்தினம்), சத்திலிங்கம், சந்தாணலெட்சுமி, தனலெட்சுமி என்னும் பிள்ளைகளின் தந்தையாய் வாழ்ந்தவர்.
புலவர்மணி 'சமாதான நீதவான்' பட்டம் பெற்றமையைப் பாராட்டி 1978 ஒக்டோபர் 30ஆம் திகதி குருக்கள் மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற விழாவில் பொன்னாடை போர்த்தி பலரும் புகழ்மாலை சூடினர். அன்றைய விழாதான் மண்ணுலகில் அவருக்காக எடுத்த இறுதிவிழா என்பதை எவருமே அறியவில்லை.
இஸ்ராயீல் (காலதேவன்) தன் கடமையில் கண்ணாயிருந்தார். புலவர்மணி அவர்களின் பூவுலக வாசகால அனுமதி 1978 நவம்பர் மாதம் 02ஆம் திகதியுடன் முடிவடைந்தும் விண்ணுலகிற்கு அழைத்துச் சென்றான். எந்தப் பொன்னாடையில் அவரது பூவுடல் பொலிவுடன் விளங்கியதோ, அதே பொன்னாடை பூதவுடலையும் அலங்கரித்து இறுதிப் பயணம் ஆரம்பமானது.
இவரின் வசனநடைக்கு உரைக்கல் போன்று விளங்குவது இவர் சிந்தாமணி – வார சஞ்சிகையில் எழுதியதும், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணிமன்றம் நூலுருவில் வெளிக்கொணர்ந்ததுமான 'உள்ளதும் நல்லதும்' எனும் நூலாகும். 1991ஆம் ஆண்டு மார்ச் 31இல் இந்து சமய, இந்து கலாசார இராஜாங்க அமைச்சு கண்டியில் நடத்திய தேசிய தமிழ் சாகித்திய விழாவில் இந்நூலுக்குப் பரிசும் நூலாசிரியருக்கு 'இலக்கியச் செம்மல்' என்ற பட்டமும், விருதும் வழங்கி கௌரவித்தது.
இம்மன்றம் புலவர்மணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைத் தொகுத்து 'புலவர்மணி கவிதைகள்' எனும் பெயரிலும் தினகரன் வாரமலரில் 'கற்றறிந்தாரேத்துங் கலித்தொகை' எனும் தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து 'பாலைக் கலி' எனும் நூலாகவும், 'விபுலானந்தர் மீட்சிப் பத்தினை' மகாவித்துவான் எவ்.எக்ஸ்.சீ. நடராசா அவர்களின் குறிப்புரையுடனும் பிரசுரம் செய்துள்ளது.
மேலும், 1994ஆம் ஆண்டு 'தேசிய வீரர்கள் தினமான' மே மாதம் 22ஆம் திகதி இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் ஞாபகார்த்த வெளியீடாக நான்கு தேசிய வீரர்களுக்கு முத்திரை வெளியிட்டது. சங்கைக்குரிய மஹா கவிந்;திர மகிரிபெனே தம்மரட்ன மஹாதேரர், மறைந்த ஜனாதிபதி மேதகு ரணசிங்க பிரேமதாசா, கலாநிதி கொல்வின் ஆர்.த.சில்வா உடன் எமது மதிப்புமிகு புலவர்மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளையும் ஆகியோராவர்.
1997ஆம் ஆண்டு 04ஆம் மாதம் 23ஆம் திகதி இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் எமது புலவர் மணிக்கு 'இலக்கிய கலாநிதிப் பட்டம்' வழங்கி தனது கடமையையும் தீர்த்து கௌரவித்தமையும் குறிப்பிடலாம்.
அண்மையில் புலவர்மணியின் புதல்வர் திரு. பெ. விஜயரெத்தினம் 400 பக்கங்களைக் கொண்ட 'தமிழ் தந்த புலர்மணி' எனும் தொகுப்பு நூலைத் தந்தமைக்கு தமிழுரைக்கும் நல்லுலகம் என்றும் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது.
