பழுதடைந்த நிலையில் இருந்த மின்கம்பம் ஒன்று அட்டன் காசல்ரீ சமரவெளி தோட்டத்தில் தொடர் குடியிருப்பு ஒன்றின் மேல் முறிந்து விழுந்துள்ளது.
இச்சம்பவத்தில் பாதிப்புகள் எதுவும் எற்படாத நிலையில் மக்கள் தமது குடியிருப்பிலிருந்து வெளியில் வருவதற்கு அச்சம் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் 18.09.2017 அன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் இப்பகுதிக்கு பொறுப்பான மின்சார சபைக்கு உடனே அறிவித்த போதும் மின்சார சபையின் திருத்த பணி ஊழியர்கள் நேரம் கடந்த நிலையிலேயே ஸ்தலத்திற்கு சென்றுள்ளனர் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த தொடர் குடியிருப்பின் மீது விழுந்துள்ள மின்சார இணைப்பு கம்பிகளில் மின்சார பாய்ச்சல் இடம்பெற்ற வண்ணமாகவே இருந்துள்ளது. இதன் காரணமாக அத் தொடர் குடியிருப்புகளில் வசிக்கும் சிறுவர்கள், பெரியோர்கள் என பலரும் அச்சம் கொண்ட நிலையில் தமது வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு முடியாத நிலையில் இருந்துள்ளனர்.
பாதிப்புகள் எதுவும் எற்படாத நிலையில் இப்பகுதிக்கான மின்சார சபையினர் வருகை தருவதில் அசமந்த போக்கினை கடைபிடித்துள்ளதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இருந்தும் இத்தோட்டத்தில் உள்ள மின் இணைப்பு கம்பங்கள் பல உக்கி போயுள்ள நிலையில் இருப்பதாகவும், இவைகளை உடனடியாக மாற்றி கொங்கீறிட்களிலான தூண்களை பொருத்த வேண்டும் எனவும் இத்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.