20 ஆவது திருத்தத்தில் முஸ்லிம் சமூகத்தின் நலன்கள் தொடர்பாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் உற்பட பலர் பாடுபட்டதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
20 ஆவது திருத்த சட்டத்தில் கௌரவ அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மாத்திரம் செயற்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மையில், கௌரவ அமைச்சர் றவூப் ஹக்கீம், அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர் எங்களோடு இணைந்து முழுமையாக செயற்பட்டனர். கௌரவ அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் அவரது காரியாலயத்திலே தான் பல சந்திப்புகள் இடம் பெற்றன. இறுதி வரையில் அவர் எங்களோடு முழுமையாக செயற்பட்டார். குறித்த விடயம் வெற்றி பெற முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
இவ்விடயத்தில் நான் முழுமையாக ஈடுபட்ட ஒருவன் என்ற ரீதியில், அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது. அவரும் அவரது கட்சி உறுப்பினர்களும் இவ் விடயத்தில் எம்மோடு இணைந்து செயற்பட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
