இலங்கை - சீன புதிய பட்டுப்பாதை திட்டத்தின் மீதான ஒரு விமர்சனப் பகுப்பாய்வு

லங்கையில் அதிகளவான முதலீடுகளை செய்யும் நாடுகளின் வரிசையில் சீனா முதலிடத்தினைப் பிடித்துள்ளது. இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் பன்னெடுங்காலமாகவே அரசியல், இராஜதந்திர உறவுகள் நிலவிவருகின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதை அபிவிருத்திகள் மற்றும் துறைமுக நகரம் போன்ற பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் சீனாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன் வருகின்றன. அவற்றுள் இன்று, அனைவராலும் பேசப்படுகின்ற விடயங்களுள் ஒன்றாக 'புதிய பட்டுப்பாதை திட்டம்' அடையாளம் காணப்பட்டுள்ளது. 

சீனாவின் பொருளாதாரம் அதன் ஏற்றுமதியிலேயே அதிகம் தங்கியுள்ளது. சீனாவினுடைய ஏற்றுமதி வர்த்தகம் நடக்கும் பாதையினை புதிய பட்டுப்பாதை என்று அழைக்கின்றனர். ஏற்றுமதியில் தங்கியிருக்கும் தனது பொருளாதாரம் உலக நெருக்கடிகளினால் பாதிப்படையாமல் இருக்க சீனா கடல்வழி பட்டுப்பாதையை உருவாக்கியுள்ளதுடன் மத்திய ஆசியாவினூடாக ஒரு தரைவழி பட்டுப்பாதையையும் உருவாக்கியுள்ளது. இந்தவகையில் முதலாம் கட்டமாக கடல் மார்க்கமாக சீனா முத்துமாலைத் திட்டம் எனும் பெயரில் தொடராக பல துறைமுகங்களை தன்வசப்படுத்தி அபிவிருத்தி செய்து வருகின்றது. சீனாவின் முத்துமாலைத் திட்டத்திலுள்ள துறை முகங்களில் ஹம்பாந்தோட்டை (இலங்கை) துறைமுகமும் உள்ளடங்கியுள்ளது ( Mendis, 2012). 

இந்தவகையில், சீனாவினுடைய பங்களிப்பு இலங்கையில் அதிகரித்துச் செல்வதற்கு இலங்கை சீனாவை சார்ந்து நிற்பது மாத்திரமன்றி, சீனாவும் இலங்கையினை சார்ந்து நிற்கின்றமையும் காரணம் என்றே குறிப்பிட வேண்டும். அதாவது, சீனாவினால் அமைக்கப்பட்டுள்ள இப்பட்டுப்பாதையானது பல நாடுகளினூடாக ஊடறுத்து செல்கின்றது. இதனடிப்படையில் அப்பாதையின் வழியே இலங்கையின் அமைவிடமும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்ற நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தன்னுடைய கவனத்தினைச் செலுத்தியுள்ளது (Kodikara, 1990). அதாவது, பட்டுப்பாதையின் வழியே ஹம்பாந்தோட்டை துறைமுகம் காணப்படுவதனால், ஓர் இணைப்பினை ஏற்படுத்தும் வகையில் இது முக்கியப்படுத்தப்படுகின்றது. இத்துறைமுகமானது பொருளாதார தொடர்புகளுக்கான ஏதுவாகவும், கப்பல்களைத் தரித்து வைக்கும் இடமாகவும் சீன அரசினால் பார்க்கப்படுகின்றது.

1995ம் ஆண்டிற்கும் 2005ம் ஆண்டிற்கும் இடையில் சீனா தனது மசகு எண்ணெய்க்கான கேள்வியை இரண்டு மடங்காக அதிகரித்தது. 2020ம் ஆண்டளவில் இது மேலும் இரண்டு மடங்காக அதிகரிக்க கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதற்கு, சீனா தனது கைத்தொழில் முயற்சிக்காக நாள் ஒன்றிற்கு 7.3 மில்லியன் பரல் எண்ணெயினை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதே எதிர்வு கூறலாகும். 2015ம் ஆண்டில் சீனா தனது மொத்த எண்ணெயத்; தேவையில் 70 சதவீதமானவற்றை மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கப் பிராந்தியங்களில் இருந்து கடல்வழி போக்குவரத்து மூலமாகவே இறக்குமதி செய்ய வேண்டும் என்பதனை உணர்ந்து, சீனா கடல்வழி போக்குவரத்தினை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும் என எதிர்ப்பார்புடன் செயற்படுகின்றது (China – Sri Lanka economic affiliations). இவ்வாறான எதிர்ப்பார்க்கையே முத்துமாலைத் தொடர் தந்திரோபாயத்தின் உருவாக்கத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இதனால் ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படும் இம்முத்துமாலைத் திட்டமானது எதிர்காலத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா நடத்தப்போகும் பாரிய அரசியல், இராஜதந்திர மற்றும் இராணுவ விளையாட்டுகளுக்கான எடுகோளாக அமையலாம் 

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. சீனாவுக்கு 80 சதவீத பங்குகளும் இலங்கைக்கும் 20 சதவீத பங்குகளும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுடனான உறவுகளைப் பேணுவதில் உடன்படமாட்டேன் என குறிப்பிட்டிருந்தார். எனினும், 2017.07.29 ஆம் திகதி ஹம்மாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விடுவதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டன. அதன்படி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் சீனாவுக்கு 1.12 பில்லியன் டொலர் பெறுமதிக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு விடல் மற்றும் துறைமுகத்தையொட்டிய 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்தி தொழிற்சாலை மண்டலம் அமைத்தல் என்பன முடிவாகியுள்ளதுடன், மேற்படி ஒப்பந்தத்தின் மூலம் சீனாவிடம் 69.55 சதவீத பங்குகளும், இலங்கை அரசிடம் 30.45 சதவீத பங்குகளும் ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை சீன அரச நிறுவனமான Merchant Port Holdings க்கு வழங்க முன்வந்துள்ளது. இவ் ஒப்பந்தமானது இலங்கையினுடைய இறையாண்மையைப் பாதிப்பதாக உள்ளது என விமர்சிக்கப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்படுவது உள்ளக ரீதியாக அரசுடனான விரிசலை ஏற்படுத்துவது போலவே, சீனாவுடனான இவ்வுறவானது இலங்கைக்கும் ஏனைய நாடுகளிற்கும் இடையில் நிலவும் உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கது. இதனைக் கருத்திற்கொண்டு இரு நாடுகளும் உறவினைப் பேணுவது நன்று. அத்துடன் ஏனைய நட்பு நாடுகளுடனும் இலங்கை சுமூகமான முறைமையில் உறவினைப் பேணுவது இலங்கைக்கு சர்வதேச மட்டத்திலிருந்து கிடைக்கும் அழுத்தத்தினை வகைசெய்ய உதவலாம். 

கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் இடம் பெற்ற இன மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இலங்கையின் அண்மைய நாடான இந்தியாவினை விட சீனா பாரிய பங்களிப்பினைச் செய்துள்ளது. இலங்கை யுத்த வெற்றியினை பெற்றாலும் தற்போது இலங்கை சீனாவிற்கு 8 பில்லியன் டொலரை கடனாக வழங்க வேண்டிய நிலையில் உள்ளது (China – Sri Lanka economic affiliations). இந்தவகையில், இலங்கையினுடைய கடன் சுமையினைக் குறைப்பதற்காக வேண்டி இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்று பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவினாலும், இவ்வாறானதொரு ஒப்பந்தமானது இலங்கை அரசாங்கம் காலங்காலமாக சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் செயற்படுவதற்கு வழிவகுத்துள்ளது என்பது வெளிப்படையான உண்மையே. 

புதிய பட்டுப்பாதைத் திட்டமானது இலங்கையில் மாத்திரமன்றி அமெரிக்கா – ஆபிரிக்கா போன்ற நாடுகளின் செயற்பாடுகளிலும் தாக்கத்தினைச் செலுத்தி வருவதன் காரணமாக சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் சுமூகமற்ற சூழலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இத்தன்மையானது இலங்கையின் அரசியல் செயற்பாட்டிலும் தாக்கத்தினைச் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. அதாவது, யுத்த காலப்பகுதியில் சீனாவுடனான நெருங்கிய உறவு இலங்கையில் பல சாதகமான நிலைமைகளை ஏற்படுத்தியிருந்தது. எனினும் இலங்கை அரசாங்கம் மேற்கு நாடுகளில் இருந்தும் இந்தியாவின் உறவில் இருந்தும் விலகுவதற்கும், இலங்கைக்கு வழங்கி வந்த பொருளாதார மற்றும் ஆயுத ரீதியான உதவிகளினை குறைத்துக்கொள்வதற்கும் பிரதான காரணம் சீனா இலங்கையில் ஆதிக்கம் செலுத்தியமையாகும். 

யுத்தக் காலப்பகுதியில் அமெரிக்கா போன்ற நாடுகளிற்கு எதிரானதொரு வெளிநாட்டுக் கொள்கையினை கடைப்பிடித்தமையானது, யுத்த முடிவினைத் தொடர்ந்து இந்நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்பட வாய்ப்பாக அமைந்திருந்தது. இதன் விளைவே, இந்நாடுகளில் இருந்து வரும் நன்கொடைகள், கடன் உதவிகள் மற்றும் முதலீடுகள் என்பன தடை செய்யப்பட்டன. இந்நிலையானது யுத்தத்திற்கு பின்னர் இடம் பெறக்கூடிய தேச அபிவிருத்திக்கு தடையாக அமைந்தது. 

மேலும், போர்க் குற்றங்களைக் காரணம் காட்டியே ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனையடுத்து இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. இதனால் இலங்கைக்கு கொடுக்கும் உதவியில் 29 சதவீதம் அதாவது, 11 மில்லியன் டொலரை அமெரிக்கா குறைத்துக் கொண்டது. இது இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பாதிப்பினைச் செலுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ள துறைமுக ஒப்பந்தமானது ஏனைய நாடுகளுடனான இலங்கையின் வெளியுறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதுடன் உள்நாட்டிலும் பல்வேறு தாக்கத்தைச் செலுத்தக்கூடியதாக அமைந்துள்ளது. 

இவ்வாறான தாக்கங்கள் ஏற்பட்டமைக்கு இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான நெருங்கிய உறவே மூல காரணமாகும். எனினும் இலங்கைக்கு இத்திட்ட அமுலாக்கலினால் ஒருசில நலன்களை அடைந்து கொண்டாலும் சீனாவினுடைய இம் முத்துமாலைத் திட்டத்தினால் இலங்கை அரசானது சீனாவினுடைய கை பொம்மையாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளமை தெளிவு. 
Reference
Mendis, P. (2012). The Sri Lankan Silk Road: The Potential War between China and the United States.
Kodikara, S.U. (1990). South Asian Strategic Issues: Sri Lankan Perspectives. New Delhi: SAGE Publications.
China – Sri Lanka economic affiliations: Trends and opportunities. (2014). Retrieved from http://www.ft.lk/2014/09/17/china-sri-lanka-economic-affiliations-trends-and-opportunities
Done Deal: China Buys Strategic Sri Lankan Seaport; The Belt and Road Reigns Victorious. Retrieved from https://www.forbes.com/sites/wadeshepard/2017/07/27/china-buys-up-strategic-sri-lankan-seaport-as-the-maritime-silk-road-sails-on/#4d2859116f4c
What is behind China’s purchase of a port in Sri Lanka? Retrieved from http://www.aljazeera.com/programmes/insidestory/2017/07/china-purchase-port-sri-lanka-170729182520947.html
Perumal. (2015, February 6). String of pearls in China's Silk Road.
Kelegam, S. (2009> September 25). China – Sri Lanka Economic Relations. Presentation to the Sri Lanka – China Business Forum.

ஏ.என்.நஸ்லின் நஸ்ஹத்
உதவி விரிவுரையாளர்,
அரசியல் விஞ்ஞானத்துறை,
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -