புதிதாக முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், நிச்சயமாக அலசப்பட வேண்டும்..!

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அண்மையில் புதிதாக முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், நிச்சயமாக அலசப்பட வேண்டியனவாக இருக்கின்றன. வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவே, அவர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வடக்கு முதலமைச்சர் உட்பட, முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசியல்வாதிகள் அனைவரும், அப்பிரதேச மக்களுக்கு ஆற்றிய சேவைகளை விட, தான் ஆற்றிய சேவைகள் அதிகம் எனக்குறிப்பிட்ட அமைச்சர், வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை, சில அரசியல்வாதிகள், எட்டி உதைப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

காலாகாலமாக, இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுவது வழக்கமாகிப் போனாலும், அவற்றின் உண்மைத்தன்மைகள் பற்றி ஆராய்ந்து, இதுவரை தீர்வு காணப்படவில்லை என்பது, வருத்தத்துக்குரியதாகவே உள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளால், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், இன்னமும் வடக்கில் மீளக்குடியேற்றப்படவில்லை என்பது, வடமாகாணசபை மீது காணப்படும் மாபெரும் குற்றச்சாட்டாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, முஸ்லிம் அமைச்சரான தான், தமிழ் மக்களுக்குச் சேவையாற்றும் நிலையில், தமிழ் அரசியல்வாதிகள், முஸ்லிம் மக்களிடம் பாகுபாடாக நடந்துகொள்வதாக அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளமை, கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

இதற்கு முன்னர், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமான குற்றச்சாட்டு எழுந்த போது, '2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு காலப்பகுதி வரையில், வடக்கில் காணிகளைப்பெற்ற 4307 குடும்பங்களில் 73 சதவீதமானவர்கள் முஸ்லிம்களாவர்' எனவும் '2015ம் ஆண்டு வரையில் 26,668 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றத்துக்காக விண்ணப்பித்து, 24,040 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன' எனவும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்தாண்டு டிசெம்பரில் பதிலளித்திருந்தார். 

அத்தோடு, தெற்கிலும் புத்தளத்திலும் மீள்குடியேறிய முஸ்லிம் குடும்பங்கள், மீண்டும் வடக்குக்கு வர விண்ணப்பிக்கவில்லை எனவும், அவர் குறிப்பிட்டிருந்தார் 

அமைச்சரின் குற்றச்சாட்டுப்படி, வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு, எதுவுமே செய்யப்படவில்லை. முதலமைச்சரின் கருத்துப்படி, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்றத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் கருத்துக்களில், ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். எனவே, இனங்களைப் பிளவுபடுத்துகின்ற இந்த விடயம் தொடர்பில், எதிரெதிராக உள்ள இரண்டு தரப்பு அரசியல்வாதிகளும் ஒன்றாக அமர்ந்து, பேச்சுவார்த்தைகளை நடத்தி இதற்கான முடிவைக் காண வேண்டும். முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப்பின்னர், இன்றுவரை தமிழ்ச் சமூகத்தால் அரவணைப்புக் காட்டப்படவில்லை என்பது, சாதாரணமான குற்றச்சாட்டுக் கிடையாது. பெரும்பான்மையினச் சமூகம், தமிழ்ச் சமூகத்திற்குச் செய்வதாகக்கூறும் தவறையே, தமிழ்ச்சமூகமும் செய்வதாக மாறிவிடும். 

எனவே, இவ்விடயத்தில், விரைவான கருத்தொற்றுமை ஏற்படுத்தப்படுதல் அவசியமென்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -