பொது சுகாதார வசதிகளை மேம்படுத்த விரைவுபடுத்துங்கள் - அமைச்சர் ஹக்கீம்

லக வங்கியின் அணுசரனையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையில் மேற்கொள்ளப்படவுள்ள சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுத்தல், மற்றும் மக்களின் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்திட்டங்களை, விரைவுபடுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சமபந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

உலக வங்கியின் 25ஆயிரம் மில்லியன் ரூபா நிதிஉதவியினால் எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் நீர் வழங்கல் மற்றும் ஆரோக்கியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய பொது சுகாதாரத் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை (20) முற்பகல் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கருத்திட்டங்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மொனராகலை, பதுளை, இரத்னபுரி, நுவரெலியா மற்றும் கேகாலை முதலான எழு மாவட்டங்களில் செயற்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டதில் மேற்கொள்ளப்படவுள்ள கருத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பவிருப்பதுடன், இக்கருத்திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வைபவம் எதிரவரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இராஜாங்க அமைச்சர் விஷேட வைத்திய நிபுணர் சுதர்சினி பெணாரன்டேபுள்ளே மற்றும் இம்மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், சுமார் 4000 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் நீர் வழங்கல் மற்றும் பொது சுகாதார திட்டங்கள் பூர்த்தியடைகின்ற போது அம்மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு சுத்தமான குடி நீரை குழாய் வழியாக வழங்க முடியும் அத்தோடு 15 ஆயிரம் குடும்பங்களுக்கு சுகாதார மேம்பாட்டுடன் கூடிய கழிவறைகளைப் பெற்றுக் கொடுக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வலது குறைந்தோரை உள்ளடக்கிய மற்றும் மகளிர் தலைமையிலான குடும்பங்களுக்கு விஷேட வசதிகளுடன் கூடிய கழிவறைகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும்.

இன்னும், சிறுநீரக ஒழிப்பிற்கான ஜனாதிதபதியின் செயலணியுடன் இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுநீரக நோய் பரவலாககக் காணப்படும் பிரதேசங்களில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்கள் விரைவாகப் பூர்த்தி செய்யப்பட இருப்பதாகவும் திட்டப் பணிப்பாளர் இதன்போது அமைச்சரிடம் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளான கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான் மற்றும் வெலிஓயா போன்ற பிரதேசங்களில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் ஆகியன இணைந்து கருத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர். இக்கருத்திட்டம் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் இம்மாவட்டத்தில் வசிக்கும் 60 சதவீதமான மக்கள் இத்திட்டத்தின் பயனாக நன்மையடையவுள்ளனர்.

இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, மேலதிகச் செயலாளர் ஏ.சீ.எம்.நபீல், திட்டப்பணிப்பாளர் என்.யூ.கே.ரணதுங்க, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் நயீமுல்லாஹ், இணைப்புச் செயலாளர்களான யூ.எல்.எம்.என். முபீன், ரஹ்மத் மன்சூர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கட்சியின் அமைப்பாளர்கள் பலர் உட்பட கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -