ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்னவுக்கு மெய்ப்பாதுகாவலராகக் கடமை புரிந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தேரரைத்; தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சனிக்கிழமை முதல் 08.07.2017 பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரரின்; மெய்ப்பாதுகாவலரான மேற்படி பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தேரருக்கும் இடையில் அம்பாறையிலுள்ள மங்களகம விஹாரையில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை (07.07.2017) வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர் தன்னைத் தாக்கியதாகவும் தேரர் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இச்சம்பவம்பற்றி விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸார், தேரரின் மெய்ப்பாதுகாவலராக இருந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தரை பணி இடைநிறுத்தம் செய்துள்ளனர்.
மட்டக்களப்பு தேரர் அடிக்கடி பொலிஸாருடன் முரண்பட்டுக் கொள்பவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதமும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒரு பொலிஸாருடனும் அவர் முரண்பட்டிருந்தார்.
இதற்கு முன்னரும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், எதிர்ப்புக்கள் நடத்தும்போது கடமையிலுள்ள பொலிஸாருடன் அவர் பல தடவைகளில் முரண்பட்டிருக்கிறார் என்று நோக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.


