ஜனாதிபதியின் செயலாளருக்கு உதுமாலெப்பை அவசரக் கடிதம்..!

எம்.ஜே.எம்.சஜீத்-
கிழக்கு மாகாண சபை அமர்வு இம்மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அதற்கு முந்திய தினம் 17ஆம் திகதி கிழக்கு மாகாண அதிகாரிகளுடனான விசேட சந்திப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது. இத்தினங்களில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் மற்றும் பொத்துவில் பிரதேங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் இணைத்ததலைவர்களாக பிரதி அமைச்சர் பைசல் காசீம் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்களின் இம்மாதத்திற்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களை நடாத்துவதற்கான திகதியினை கடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலே இணைத்தலைவர்கள் இருவரினதும் சம்மதத்துடன் தீர்மாணிக்கப்பட்டது. குறிப்பாக பாராளுமன்ற மற்றும் மாகாண சபை அமர்வு தினங்களை கருத்திற்கொண்டே இக்கூட்டத்திற்கான திகதி தீர்மானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினங்களில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களை நடாத்தாமல் கிழக்கு மாகாண சபை அமர்வு நடைபெறும் தினத்தையும் பொருட்படுத்தாது இக்கூட்டத்திற்கான திகதியினை பிரதி அமைச்சர் பைசல் காசீமின் இணைப்புச் செயலாளர் மாற்றம் செய்திருப்பதாக அறியமுடிகிறது.

இவ்விடயம் குறித்து கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட மற்றும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேங்களின் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை ஜனாதிபதியின் செயலாளருக்கு அவசரக் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

கடந்த 2017.05.09ஆம் திகதி நடைபெற்ற அடடாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் போது இணைத்தலைவரான பிரதி அமைச்சர் பைசல் காசீமும், நானும் இணைந்து அடுத்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தினை இம்மாதம் 12ஆம் திகதி நடாத்துவதாகவும், அதேபோன்று கடந்த 2017.05.08ஆம் திகதி நடைபெற்ற அக்கரைப்பற்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது அடுத்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 2017.07.10ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானமொன்றினை எடுத்திருந்தோம்.

இதுதொடர்பாக இணைத்தலைவரான என்னுடன் எவ்வித கலந்துரையாடலும் செய்யப்படாத நிலையில் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஒருவரினால் அனுப்பப்பட்ட கடிததத்தில் அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் எதிர்வரும் 2017.07.17ஆம் திகதி காலை 9.30மணிக்கும், அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதே தினம் பிற்பகல் 2.30மணிக்கும், பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் 2017.07.18ஆம் திகதி காலை 9.30மணிக்கும், நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அன்றைய தினம் பிற்பகல் 2.30மணிக்கும் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயமானது அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் 2016 ஒக்டோபர் 28ஆம் திகதிய SB/2/1DVI இலக்க சுற்று நிருபத்தை புறக்கனிக்கும் செயற்பாடாகும்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களானது ஏற்கனவே இணைத்தலைவர்கள் இருவரினாலும் தீர்மானிக்கப்பட்ட திகதிகளில் நடைபெறுவது தொடர்பிலும் அல்லது அக்கூட்டத்தினை வேறொரு தினத்திற்கு மாற்றம் செய்வது குறித்தும் தன்னோடு கலந்தலோசிக்காமை ஒருதலைப்பட்டசமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

குறிப்பாக எதிர்வரும் 2017.07.17ஆம் திகதியன்று கிழக்கு மாகாண சபையில் அதிகாரிகளுடனான விசேட சந்திப்பும் மறுநாள் 18ஆம் திகதி கிழக்கு மாகாண சபை அமர்வும் இடம்பெறவுள்ளது. இதன்காரணமாக மேற்குறிப்பிட்ட தினங்களில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நான் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. 

குறிப்பாக நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது 2016ஆம் ஆண்டு இரண்டு கூட்டங்களும், 2017ஆம் ஆண்டில் ஒரு கூட்டமும் இதுவரை நடைபெற்றுள்ளன. நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை நடாத்துமாறு பல தடவைகள் இணைத்தலைவர் பிரதி அமைச்சர் பைசல் காசிமிடமும் நிந்தவூர் பிரதேச செயலாளரிடமும் வேண்டுகோள் விடுத்தும் அப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடாத்துவதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யாது அலட்சியம் செய்யப்பட்டது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மாதந்தோறும் நடைபெறவேண்டும் என்பது ஜனாதிபதின் பணிப்புரையாகும். சிலரது அலட்சியப் போக்கினால் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடாத்தாமல் இருப்பதானால் பிரதேச மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாத சூழ்நிலை எற்பட்டுள்ளது. இவ்வாறான காரணங்களினால் பிரதேச மக்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பகிரங்கமாக விமர்சிக்கின்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.

நமது நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளை சார்ந்தவர்களை இணைத்தலைவர்களாக ஜனாதிபதி நியமித்துள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கங்களை புறந்தள்ளிவிட்டு சில அரச அதிகாரிகள் ஒரு தலைப்பட்சமாக செயற்பட்டு இணைத்தலைவர்களுக்கும் அரச அதிகாரிகளுக்குமிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து பிரதேச மட்டத்தில் நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளை காலதாமதமாவதற்கும் பொதுமக்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கும் காரணமாக உள்ளனர் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் மீன்பிடி மற்றும் மகாவலி இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளருமான மஹிந்த அமரவீர, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -