பெரும்பான்மையின் அரசியல் இலாபங்களுக்காக சிறுபான்மையை உலக தீவிரவாதத்தோடு முடிச்சுப் போடுகிறார்கள் - முபீன்

ந்த நாட்டின் பெரும்பான்மையினத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சிறுபான்மையினரான முஸ்லிம்களை உலக தீவிரவாதத்தோடு முடிச்சுப் போடுகிறார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச்செயலாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார். ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 09.07.2017 இடம்பெற்ற “முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்” எனும் தொனிப் பொருளிலான நிகழ்வில் அவர் அதிதியாகக் கலந்து கொண்டே இவ்வாறு உரையாற்றினார்.

சமூக ஆர்வலர்கள் நோக்காளர்கள் மத்தியில் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்“முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்” என்பது சம காலத்தில் அவசியமான சொற்பொழிவு என்று நான் கருதுகின்றேன். ஸாஹிர் மௌலானா பௌண்டேஷன் ஸ்தாபிக்கும் நிகழ்வில் இந்தத் தொனிப் பொருளைத் தேர்ந்தெடுத்திருப்பது சாலப் பொருத்தம். அலிஸாஹிர் மௌலானா இந்த மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களுக்குமான ஒற்றுமையின் குறிகாட்டியாக மட்டுமல்ல ஒட்டுமொத்தமான நாட்டையும் யுத்தம் எனும் அழிவிலிருந்து விடுவிப்பதற்கு அரும்பாடுபட்ட முதன்மை முக்கியஸ்தர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் இலகுவில் மறந்து விட முடியாது. அவர் சமாதான சகவாழ்வின் இணைப்புப் பாலமாக எப்பொழுதும் தனது வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டவர் என்பதால் இன ஐக்கியத்தைப் பற்றியும் குறிப்பாக அவர் சார்ந்துள்ள முஸ்லிம் சமூகம் எதிர் கொள்ளும் சவால்கள் பற்றியும் பேச அவர் அருகதையுடையவர்.

அரசியல் வாழ்வில் அறுபது வயதைக் கடந்துள்ள அவரது குடும்பப் பெயரால் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து நாட்டின் ஐக்கியத்திற்காகப் பாடுபட முனைவது அன்னாருக்குச் செய்யும் அதியுயர் கௌரவமாக நான் கருதுகின்றேன்.அறிவார்ந்த பகுத்தறிவு விடயங்களை அலசி ஆராய்வதற்கு நேரம் ஒதுக்குவதில் மக்கள் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. சமூக ஈடுபாடுகளும் இவ்வாறுதான் குறைவடைந்து கொண்டு வருகின்றது.

ஊடகத்துறையில் முஸ்லிம்கள் இன்னமும் ஆளுமை செலுத்தாத நிலைமை இருந்து வருகின்றது.உலக ஊடகங்களை ஆக்கிரமத்துள்ள சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரானவை என்பது வெளிப்படை.அதேவேளை முஸ்லிம் உலகம் பல கூறுகளாகச் சிதறுண்டு இணைய முடியாத சிந்தனை முகாம்களுக்குள் முடங்கிப் போய் இருப்பதும் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பாரிய சவாலாக உள்ளது.

முரண்பாட்டில் உடன்பாடு காண முடியாத பிளவுபட்ட சமுதாயமாக முஸ்லிம்கள் மாற்றப்பட்டும் மாறியும் விட்டதால் பல திசைகளிருந்தும் வரும் ஆபத்துக்களுக்கு முஸ்லிம்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எனினும், சமூக அறிவியலாளர்கள் ஆய்வாளர்கள் சளைக்காது தொடர்ந்தும் தங்களது பணிகளை முன்னெடுக்க வேண்டும். உலக நாடுகளில் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படவில்லை என்று நாம் இங்கிருந்து கண்ணீர் வடிப்பதை விட இந்த நாட்டில் வாழ்கின்ற நம் சமூகம் ஒற்றுமைப்பட்டு விட்டதா என்பதை உற்றுக் கவனித்து உண்மை நிலவரத்தைக் கண்டறிந்து ஒற்றுமைப்படுவதற்கான தக்க பரிகாரம் காண வேண்டும். முரண்பட்டு நிற்கும் சவூதி ஆரேபியாவுக்குச் சார்பாகவோ கட்டார் நாட்டுக்கு ஆதரவாகவோ நாம் சார்பு நிலை எடுக்கவேண்டியதில்லை. அதனால் அடிபட்டுக் கொண்டு விமர்சனங்களை முன் வைத்து அவஸ்தைப்படவேண்டியதுமில்லை.

இலங்கை முஸ்லிம்களையும் சர்வதேச தீவிரவாதத்தோடு இணைத்து இங்கேயும் சிக்கல்களை ஏற்படுத்தி சமூகத்தைச் சின்னாபின்னப்படுத்தி சதி வலைகள் பின்னப்படுவதை நாம் சாதுர்யமாக முறியடிக்க வேண்டும். இதிலே கொந்தளிக்க வேண்டிய அவசியமில்லை. அறிவோடு அணுக வேண்டும். ஆத்திரப்பட்டு செயலில் இறங்கி அழிவுகளை நமதாக்கிக் கொள்ளக் கூடாது.தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை வைத்து அரசியல் செய்தவர்கள் அதற்கான சந்தர்ப்பம் இப்பொழுது இல்லாதிருப்பதால் இலங்கை முஸ்லிம் சிறுபான்மையினரை வலிந்திழுத்து உலக தீவிரவாதிகளின் ஒரு அங்கமாகக் காட்ட முயற்சிக்கின்றார்கள்.

அப்பொழுதுதான் இந்த நாட்டின் பெரும்பான்மையைப் பாதுகாக்கலாம் என்ற அடிப்படையில் அபத்தமான விஷ‪சிந்தனையை விதைத்துவருகின்றார்கள்.

இதனை நீரூற்றி நாமே வளர்த்து விடும்படி நிகழ்வுகள் மாறிவிடக் கூடாது. அறிவோடு நாம் அணுக வேண்டும். இந்த நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்கள் பல அநீகளுக்கு முகம்கொடுத்தே வாழவேண்டி ஏற்பட்டிருக்கின்றது. ஆயினும் நாம் நிதானமிழப்பதன் மூலம் நிம்மதியைத் தொலைத்து விடக் கூடாது.” என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -